மகாபாரதத்தில் நடைபெறும் குருச்ஷேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒரு முறை பார்வையிட்ட அர்ஜூனன், அங்கே அவர் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். அதனைக் கண்ட அவனது தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் போது, உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். அந்த உரையாடல் கருத்துகளே பகவத் கீதையாக இருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். மகாபாரதத்தில் இதேப் போன்று, திருதராட்டிரன் மற்றும் விதுரன் இடையிலான உரையாடல் கருத்துகள் ‘விதுர நீதி’ என்று புகழ் பெற்றிருக்கிறது.
இந்த விதுர நீதி உருவான கதை உங்களுக்குத் தெரியுமா?
பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன், அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர். இருதரப்பினருக்கும் பொதுவான சிலர், போரினைத் தவிர்க்க, தூது முயற்சிகளில் ஈடுபட்டனர். திருதராட்டிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும்படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையன் என்பவரை அனுப்பினார்.
சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து, அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதையும் பாரதப்போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனையும் உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால், அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.
சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள், அவனுடைய தூதின் விளைவினை வெளிப்படையாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே, விதுரனை அழைத்து வரச் சொன்னான்.
மகாபாரதப் பாத்திரங்களில், அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனால், அரச பதவிக்குத் தகுதியற்றவனாகி இருந்தாலும், அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாக இருந்தாலும், விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். ஆனால், விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எதனையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பது வேறு.
திருதராட்டிரன் அழைப்பை ஏற்று, அங்கு வந்த விதுரனிடம், தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான். அன்று இரவு முழுவதும் திருதராட்டினுக்குச் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே ‘விதுர நீதி’ எனப்படுகிறது.
விதுரன் சொன்ன சில நீதிகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.
* அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
* வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது.
* பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டால் மட்டுமே சொல்லுவான்.
* பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
* பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
* இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
* அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.
- இப்படி விதுர நீதியில், அரசியல், சமூகம் போன்றவைகளுக்கான பொது நீதி மொழிகள் பல இருக்கின்றன.