உலகின் நீதி நூல்களில் மகாபாரதம் முதன்மையானது. அதில் வரும் ஒவ்வொரு அத்தியாயமும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாகும். மஹாபாரதப் போரின் மூலக் காரணம் சொத்துக்கான பங்காளிச் சண்டை என்றாலும், துருபத கன்னிகையின் பெண்மையை இழிவுப்படுத்தியது தான் பாண்டவர்களை போரிட தூண்டியது.
பாரதத்தில் பாண்டவர்கள் 5 சகோதரர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். தங்கள் சகோதரன் சொல்லுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடந்தனர். பாண்டவர்களின் மூத்தவர் யுதிஷ்டிரன் எப்போதும் தர்மத்தினை கடைப்பிடித்ததால் தர்மன் என்றும் அழைக்கப்பட்டான். தர்மனின் உயர்வான குணத்தினால் அவனது தேர் எப்போதும் பூமியில் இருந்து ஒரு அடி மேலே தான் பயணிக்கும்.
கௌரவர்கள் மொத்தமாக 100 சகோதரர்கள் இருந்தனர். அனைவருக்கும் மூத்தவன் துரியோதனன். துச்சாதனன், விகர்ணன் உள்ளிட்ட சகோதரர்களும் இருந்தனர். துரியோதனன் எப்போதும் பாண்டவர்களின் மீதான பொறாமையில் தங்களின் அழிவை தானே தேடிக் கொண்டான்.
பாண்டவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலைகளில் சிறந்து விளங்கினர். குருகுலத்தில் சிறந்த மாணவனான அர்ஜூனனை எப்போதும் துரோணர் புகழ்ந்து தள்ளுவார். துரோணர் எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றலை கொண்ட பஞ்சபாண்டவர்களை மிகவும் நேசித்தார். இது ஏற்கனவே பொறாமையிலிருந்த கௌரவர்களுக்கு தீயில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது.
துரியோதனன் உள்ளிட்ட மற்ற கௌரவர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சபாண்டவர்களை அழிக்க பலமுறை சதி திட்டம் தீட்டி செயல்படுத்தினர். அவர்களின் ஒவ்வொரு சதி திட்டத்தையும் பாண்டவர்கள் முறியடித்தனர். பீமனை பலமுறை கொல்வதற்கு துரியோதனன் முயற்சி செய்தான். அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின. இவர்களின் ஓயாத சதித் திட்டம் இறுதியாக சூதாட்டத்தில் வந்து நின்றது. பாண்டவர்களும் கெளரவர்கள் மீது வெறுப்புடன் தான் இருந்தனர். ஆயினும் கௌரவர்களில் ஒருவர் மீது மட்டும் மதிப்பு வைத்திருந்தனர். அந்த ஒருவன் தான் விகர்ணன். விகர்ணனின் நேர்மையான செயல்களால் ஈர்க்கப்பட்ட பாண்டவர்கள் அவன் மீது மரியாதை வைத்திருந்தனர்.
பாண்டவர்களை சூதாட வருமாறு துரியோதனன் அறைகூவல் விடுத்தான். சூதாடுவதில் வல்லவனான சகுனியால் காய் உருட்டப்பட்டது. சகுனி, தான் நினைக்கும் எண் வருமாறு தாயத்தினை உருட்டுவான். இவ்வாறு சகுனி சூதாட்டத்தில் கௌரவர்களுக்கு சாதகமாக தாயத்தினை உருட்டி அவர்களை வெற்றி பெற வைத்தான். சூதாட்டத்தில் தனது நாட்டினை இழந்த தர்மன் தனது சகோதரர்களை பிணையாக வைத்து விளையாடி அவர்களையும் தோற்றான். இறுதியாக பாண்டவர்களின் மனைவியான திரௌபதியையும் அதில் வைத்து தர்மன் தோற்றான்.
சூதாட்டத்தில் தர்மன் தோற்றதால் பிணையான திரௌபதியை கௌரவர்கள் ஏளனமாக பேசி கேலி செய்தனர். இறுதியில் திரௌபதியின் ஆடையை களைய துச்சாதனனிடம் துரியோதனன் உத்தரவிட்டான். அதைக் கேட்டு கௌரவர்களின் ஒருவனான விகர்ணன் வெகுண்டு எழுந்தான். சூதாட்டத்தில் தோல்வி பெற்ற பாண்டவர்களை இழிவு செய்வது தவறு என்று எடுத்துரைத்து, திரௌபதியை துகிலுரிப்பதை கடுமையாக எதிர்த்தான்.
சபையில் திரௌபதியை துகிலுரிக்கும் போது பிதாமகர் பீஷ்மர், துரோணர், கர்ணன் உள்ளிட்ட தர்ம சிந்தனை உள்ளவர்கள் இருந்தாலும், அவர்கள் எதிர்க்க முடியாமல் இருந்த போது, விகர்ணன் மட்டும் தர்மத்தினை நிலைநாட்ட துரியோதனன் மற்றும் கௌரவர்களிடம் வாக்குவாதம் செய்தான். துரியோதனன் அவனது முடிவிலிருந்து பின்வாங்காததால் அவனை கடுமையாக விமர்சித்து விட்டு விகர்ணன் வெளியேறினான்.
இந்த ஒரு காரணத்தினால் பாண்டவர்கள் விகர்ணனை அதிகம் மதித்தனர். போரின் போது அரசநீதிப்படி விகர்ணன் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டான். பீமன் திரௌபதியிடம் மொத்த கௌரவர்களையும் அழிப்பேன் என்று சபதம் செய்திருந்ததால், விகர்ணனை போரில் கொன்றான். அதற்காக பீமனும் பாண்டவர்களும் மிகவும் வருந்தினார்கள்.