சாதாரணமாக யாரையாவது பார்த்து பேச வேண்டுமென்றால் கண்களை பார்த்து பேச வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசும்போது உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படும். ஏற்கப்படும். மேலும் கண்களை வில், அம்பு, மீன் அல்லி என்று வர்ணிப்பது உண்டு. அப்படி சிறப்பிக்கப்படும் கண்கள் சொல்லும் சாஸ்திரங்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
கண்கள் தாமரை மலரின் இதழ்கள் போல சிலருக்கு அமையப்பட்டிருப்பதை காணலாம். அப்படி அமைய பெற்றவர்களுக்கு மகத்தான செல்வ வசதிகளும், குடும்பஷேமமும் உண்டாவதோடு புத்திரர்களால் மேன்மை உண்டாகும். நில புலன்கள் வாங்கவும் பயிர் தொழில் மூலம் ஆதாயம் பெறவும் கூடும். இவர்களுக்கு அமையும் மனைவி குடும்ப நிர்வாகத்தில் சிறப்புடையவளாக விளங்குவாள் என்று கூறப்பட்டுள்ளது.
அல்லி மலரை போன்ற விழிகளை உடையவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்களாகவும், தர்க்க வாதம் செய்வதில் திறமை படைத்தவர்களாகவும் விளங்குவார்கள். எந்த செயலிலும் வெற்றி அடையும் வரை தீவிரமாக செயலாற்றும் உறுதி வாய்ந்தவர்கள் இவர்கள்தான். விடாமுயற்சிக்கு சிறப்பு பெற்றவர்கள் இவர்கள்தான்.
விசாலமான கண்களை உடையவர்கள் சிறந்த மதியூகம் உடையவர்களாக இருப்பார்களாம். எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமுடையவர்களாக விளங்குவார்கள். இவர்களுள் சிலருக்கு அமைச்சராகும் யோகமும் உண்டு. உலக நலனுக்கு உழைக்கும் ஆவல் உள்ள இவர்கள் புகழும் பெருமையும் பெற்று திகழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.
அம்பை போலவும், மீனைப் போலவும் நீண்டிருக்கும் விழிகளை உடையவர்கள் புத்திர பௌத்திராதிகளுடன் நீண்ட ஆயுளோடு ஆனந்தமாக வாழ்வார்கள். சகல ஐஸ்வர்யங்களும், குடும்ப நலன்களும் விருத்தி அடையுமாம் இவர்களுக்கு...
கலைமானின் கண் போன்ற கண்களை உடையவர்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும் எவ்வித செயல்களையும் தந்திரமாக சாதித்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்களாம்.
கண்கள் யானை கண்களைப் போன்று இருந்தால் அவர்கள் லட்சுமி கடாட்சத்துடன் கூடியவர்களாகவும், உடல் உள்ளம் இவற்றின் வலிமைகளை உடையவர்களாவும், மக்களிடத்தில் மதிப்புடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம்.
வளைந்த பார்வை உடையவர்கள் துப்பறியும் ஆற்றலை கொண்டவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும், தமது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்த காரியங்களையும் செய்வதற்கும் தயங்காதவர்களாகவும் இருப்பார்கள் என்பதாக கூறப்பட்டுள்ளது.
பக்கப்பார்வை உடையவர்கள் மற்றவரின் உள்ளத்தில் உள்ள உட்கருத்துகளை எளிதில் அறிந்து கொள்வார்கள். தைரியம் உடையவர்களாகவும், வீரப்பார்வை உடையவர்களாகவும், துஷ்டர்களை தண்டிப்பவர்களாகவும், புகழ்பெற்று விளங்குபவர்கள் இவர்கள் தானாம்.
குழிக் கண்களை கொண்டவர்கள் தங்களை மற்றவர்கள் போற்றி பூஷிப்பதையும் ஏசித்தூஷணை செய்வதையும் பொருட்படுத்தாதவர்கள். மேலும் இவர்கள் ஆழ்ந்த யோசனை உடன் எந்த காரியத்தையும் செய்பவர்களாகவும், எதையும் நிதானமாக செய்பவர்களாகவும், மற்றவர்கள் மிகவும் கடுமையாக பேசினாலும் சிரித்துக் கொண்டே தம் காரியத்தை சாதித்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு, தக்க சமயத்தில் பழிவாங்கும் குணம் உடையவர்களாகவும் இவர்கள் இருப்பார்களாம்.
கண்கள் நீல நிறம், ஸ்படிக நிறம், சிவந்த நிறம் பெற்று சிறிதளவு மென்மையாகவும், நடுவில் கறுத்தும், கடைப்பகுதி சிவந்தும் இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். இவர்கள் பாக்கியசாலிகள்.
கண் விழிகள் கருத்தும், சிவந்து தாமரை இதழ் போலவும் அமைய பெற்றவர்கள் பலவிதமான அறிவியல் நூல்களை கற்றறிந்து பண்டிதராகவும், பிறரால் வழிபடத்தக்க ஞான நிலையை அடைந்த அறிஞராகவும் விளங்குவார்கள்.
கண்களின் பார்வை நேர் பார்வையாக இருந்தால் தூய்மையான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் காரணமாக இருக்கும். மேற்பார்வை நல்வினைக்கு காரணமாகும். கீழ் பார்வையாய் இருப்பின் தீவினைகளுக்கு காரணமாகும். குறுக்குப் பார்வை கோபத்தால் தீவினைகளை உண்டாக்குவதாகும்.
குறுகியும் ஆழ்ந்தும் அமைந்த கண்களை உடையவர்களே போர் வீரர்களாக விளங்குவதற்கு, போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சிறப்பாக திகழ்ந்து செயலாற்றுவதற்கு, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டு வீரராக திகழ்வதற்கு பொருத்தமானவர்கள்.
சின்னஞ்சிறிய ஒளி மிகுந்த கண்களை உடையவர்கள் ஆன்ம ஞானிகள் ஆகவும், அறிவியல் மேதைகளாகவும், பழகுவதில் மிகவும் உயர்ந்தவர்களாகவும், அழியாப் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
இப்பொழுது உங்களின் கண்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்து விட்டீர்கள் தானே!