
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மி தாயாரை வழிபடுவதும், மகாலக்ஷ்மி மந்திரங்களை ஜபிப்பதும், மகாலக்ஷ்மி பூஜை செய்வது மற்றும் குபேர வழிபாடு போன்றவை செல்வத்தை ஈர்க்கும் என்பது நம்பிக்கை. பாற்கடலைக் கடைந்தபோது ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலக்ஷ்மியும் வெளிப்பட்டாள். இந்த மகாலக்ஷ்மிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்கு திரும்பக் கொடுத்தவள். குபேரனை அழகாபுரிக்கு அதிபதியாக ஆக்கியவள் மற்றும் கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற செல்வத்தை கொடுத்தவள் இவளே. மகாலக்ஷ்மி அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.
வலம்புரி சங்கு: வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் வற்றாத செல்வத்தையும், எல்லா வளங்களையும் தரும் என்று நம்பப்படுகிறது. வலம்புரி சங்கு மகாலக்ஷ்மி தேவியுடன் தொடர்புடையது மற்றும் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வலம்புரி சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்ய செல்வ வளம் பெருகும். செல்வத்திற்கு அதிதெய்வமான மகாலக்ஷ்மி தாயார் பிறந்த ஆடி மாதம் பூர நட்சத்திரத்திலும், புரட்டாசி பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி நாட்களில் வலம்புரி சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், மகாலக்ஷ்மியையும் அலங்கரித்து, சந்தன குங்குமமிட்டு, பால் பாயசம் நிவேதித்து பூஜை செய்ய எல்லாவிதமான வளங்களும் செல்வங்களும் வந்து சேரும்.
செல்வ வளம் கொழிக்க வீட்டில் இருக்க வேண்டியவை: சில மூலிகைகள் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டிருக்கின்றன. துளசி செடி மற்றும் வில்வ மரங்களை வீட்டில் வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பணப்பெட்டியில் வெற்றிலையும் பாக்கும் வைத்து பணம் வைக்க செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. நெல்லி மரத்திலும், வில்வ மரத்திலும் மகாலக்ஷ்மி தாயார் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. தெய்வாம்சம் பொருந்திய இந்த மரங்களை வீட்டில் வளர்ப்பது நல்லது. பாற்கடலில் உருவான மகாலக்ஷ்மி கடலில் இருக்கும் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, வீட்டில் எப்பொழுதும் கல் உப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், அரிசி மற்றும் தானியங்களுக்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
வாஸ்து சாஸ்திரம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டை அமைப்பதும், செல்வத்தை ஈர்க்கும் இடங்களில் பொருட்களை வைப்பதும் செல்வத்தைப் பெருக்க உதவும். வீட்டின் வடகிழக்கு திசையில் நீரூற்று அல்லது நீர்நிலைகளை அமைப்பது, வீட்டின் நுழைவாயிலில் கண்ணாடிகளை வைப்பது, வடமேற்கு திசையில் காற்றாடி மணி கட்டுவது போன்றவை செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் படிகங்கள், மணி பிளான்ட் போன்றவற்றை வைப்பதும் செல்வத்தை ஈர்க்கும்.
வருமானம் வந்ததும் முதலில் செய்ய வேண்டியவை: மாதம்தோறும் வருமானம் வந்ததும் முதல் செலவாக உப்பு, இனிப்பு, மல்லிகைப்பூ போன்றவற்றில் ஏதேனும் ஒன்று வாங்குவது செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. பணப்பெட்டியை தென்மேற்கு மூலையில் வைத்து, அதில் சிறிது மல்லிகை பூவையும் போட்டு வைக்க செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும். மல்லிகை பூ வாடியதும் புதிதாக வேறு பூவை மாற்றி வைக்கலாம். வருமானம் வந்ததும் ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக எடுத்து வைத்து, அதில் பாலால் செய்த இனிப்புகளை வாங்கி ஆதரவற்றவர்கள், சாலையோர பணியாளர்கள் போன்றவர்களுக்குக் கொடுத்து வர செல்வத்திற்கு பஞ்சமோ, தடையோ வராது பெருகிக்கொண்டே இருக்கும்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது: வீட்டை தினமும் காலையில் சுத்தம் செய்வது, வாசலில் நீர் தெளித்து கோலமிட்டு, தீபம் ஏற்றுவது மகாலக்ஷ்மி தேவியை வரவேற்கும். தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வழிபடுவது வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வழிவகுக்கும். அத்துடன் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவதும் வீட்டில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் நிலைக்கச் செய்யும். மகாலக்ஷ்மியானவள் சுத்தமான இடத்தில்தான் வாசம் செய்வாள்.
எனவே, வீட்டில் குப்பைகள், அழுக்குகள் சேராமல் சுத்தமாக வைப்பது மகாலட்சுமியின் அருளைப் பெறுவதுடன், செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.