
தானியங்கள் பல வகைகளில் இருந்தாலும் நம் நாட்டில் சிறந்ததாகவும், சமய பண்பாடாகவும் பார்க்கப்படுவது நவதானியங்களே. நவ என்றால் ஒன்பது என்று பொருள்; அதாவது ஒன்பது வகையான தானியங்களைத்தான் நவதானியங்கள் என்று சொல்கின்றனர். இந்த நவதானியங்களை உணவாக மட்டும் உண்ணாமல் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகின்றனர். வீடு கட்டும்போது, திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள், மற்றும் கோவிலின் நிகழ்ச்சிகளின் போது இதை முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.
நவக்கிரகங்களுக்கு பூஜை செய்யும் போது இந்த ஒன்பது நவ தானியங்கள்தான் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒன்பது தானியங்களும் ஒன்பது கிரகத்திற்கு உரிய அதிபதி. ஆகவே நவக்கிரக ஹோமத்தின் போது அந்தந்த கிரகத்திற்கு உரிய தானியத்தை வைத்து பூஜை செய்வார்கள்.
ஒன்பது கிரகங்களுக்குரிய நவதானியங்கள் என்னென்ன? அந்த நவதானியங்களை அந்த கிரகத்திற்கு சமர்ப்பித்து வழிபாடு செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் – கோதுமை
சந்திரன் – நெல்
செவ்வாய் – துவரை
புதன் – பச்சைப்பயிறு
குரு – கொண்டைக்கடலை
சுக்கிரன் – மொச்சை கொட்டை
சனி – கருப்பு எள்
ராகு – கருப்பு உளுந்து
கேது – கொள்ளு
இந்த ஒன்பது நவதானியங்களையும் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்....
கோதுமை :
இது சூரிய பகவானின் தானியம் ஆகும். எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்து வர நன்மைகள் நம்மை வந்து சேரும்.
நெல் :
இது சந்திர பகவானின் தானியம் ஆகும். சிலர் பச்சரிசியைக் கூட சந்திர பகவானின் தானியம் என்றே சொல்வர். அந்த வகையில் சொந்த ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் திங்கட்கிழமையில் பச்சரிசியை தானம் செய்வது சிறப்பு.
துவரை :
இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும். துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க் கிழமைகளில் தானம் செய்து வர நன்மை பெருகும். தொழில் விருத்தி ஆகும்.
பச்சைப்பயறு :
'பச்சைப்பயறு' புதனின் தானியம் ஆகும். ஜாதகத்தில் புதனால் பாதிக்கப்படுபவர்கள் பச்சைப் பயிறு சுண்டல் செய்து புத பகவானுக்கு நிவேதனம் செய்து தானம் அளிப்பது சிறப்பு.
கொண்டைக்கடலை :
இது குரு பகவானின் தானியம் ஆகும். இதனை வியாழக் கிழமைகளில் குரு பகவானுக்கு நிவேதனம் செய்து தானம் அளிப்பது நன்மை தரும். இதனால் குரு அருள் சித்திக்கும். திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித் தருவார் குரு. வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.
மொச்சை :
இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும். சொந்த ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சரி இல்லாதவர்கள், திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகம் இருப்பவர்கள், வெள்ளிக் கிழமைகளில் மொச்சை தானம் செய்தால் பிரச்னைகள் தீரும் மேலும் செல்வம் பெருகும் மற்றும் தொழில் மேன்மை அடையும்.
கருப்பு எள் :
இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்மச் சனி ஆகிய சனியினால் அல்லல் படுபவர்கள், எள் கலந்த உணவை சனிக் கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்.
உளுந்து :
இது ராகு பகவானின் தானியம் ஆகும். ராகு தோஷம் இருப்பவர்கள் உளுந்து வடை அல்லது உளுந்தால் செய்யப்பட்ட பலகாரங்களை சனிக் கிழமையில் தானம் செய்ய அளப்பரிய நன்மைகளைப் பெறலாம்.
கொள்ளு :
இது கேது பகவானின் நவ தானியம் ஆகும். கேதுவால் ஜாதகத்தில் பாதிக்கப்படுபவர்கள் கொள்ளில் உணவுகள் தயாரித்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.
பொதுவாக அனைத்து வகையான பயிறுகளில் ப்ரோட்டீன் என்று சொல்லப்படுகின்ற புரத சத்து அதிகமாக உள்ளது. நம் முன்னோர்கள் தானியங்களை அதிக அளவில் உணவுகளில் பயன்படுத்தினர். அதனால்தான் நீண்ட நாட்கள் எந்தவிதமான நோயுமின்றி உடல் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு பழக்கம் மாறி உள்ளதால் உடலில் சத்துக்கள் குறைந்து பெயர் தெரியாத நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தானியங்களை உணவில் பயன்படுத்துவது சிறந்தது.