மகாபாரதத்தில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும், மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தார்கள். மகாபாரதத்தை பொறுத்த வரையில் கதையின் நாயகர்களாக பாண்டவர்கள் ஐவர் இருந்தாலும், அவர்களை விட அதிகமாக தனது உயரிய குணத்தினால் கர்ணன் போற்றப்படுகிறான். தனது எதிரிகளாலும் மதிக்கப்படும் உத்தமவீரனாக இருந்தான்.
கடவுள் ஶ்ரீகிருஷ்ணர் தனது மைத்துனர்களான பாண்டவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தாலும் அவ்வப்போது, அவர்களிடத்தில் கர்ணனை பற்றி புகழ்வதை தொடர்ந்தார். ஆராய்ந்து பார்த்தால் ஶ்ரீகிருஷ்ணரின் மூத்த மைத்துனன் கர்ணன்தான். அதனால்கூட அவருக்கு கர்ணன் மீது மறைமுகமாக அன்பு இருந்திருக்கலாம். அதன் காரணமாக கூட பலமுறை அவர் கர்ணனின் புகழ் பாடி இருக்கலாம்.
மகாபாரதப் போரின் போது கீதை உபதேசத்திற்குப் பின் ஒருமுறை ஶ்ரீகிருஷ்ணர் கர்ணனை பற்றி அர்ஜுனனிடம் பின்வருமாறு கூறினார்.
"கர்ணன் மிகப்பெரிய ஒரு வீரன். உலகின் மிகச்சிறந்த மனிதன். எதையும் யோசிக்காமல் கொடுக்கும் ஒரு கொடையாளி. ஆயினும் அவன் வாழ்வில் தர்மம் மற்றும் அதர்மத்தை பற்றி அவன் அறியவில்லை. தர்மத்தின் புதல்வனாக அவன் இருந்தாலும், அவன் அநீதிக்கு துணை நின்றான் அல்லது அவன் கண் முன் நடக்கும் அநீதியை தடுக்கவில்லை.
ஒரு இடத்தில் அதர்மம் தலை தூக்கும் போது அதை அழிப்பது தான் சிறந்த மனிதனின் கடமையாகும். அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், அந்த அநீதியில் தனக்கு பங்கில்லை என்று எவரும் மறுக்க முடியாது . அநீதியை தடுக்காமல் இருப்பவனும் அந்த அநீதிக்கு துணை நின்ற குற்றத்திற்கு ஆளாகிறான். கர்ணன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், திரெளபதி துகிலுரிக்கப்படும் போது அதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அனால், அமைதியாக இருந்தான் , அதுவே கர்ணனின் அழிவிற்கும், துரியோதனன் அழிவுக்கும் காரணமாக இருந்தது.
ஒரு நபரின் உண்மையான அடையாளம் அவர்களின் நம்பிக்கையிலிருந்து வருகிறது. மிகவும் கடினமான காலங்களில் கூட, நமது முடிவுகளில் உறுதியாக இருப்பது எப்படி என்பதை கர்ணனை விட வேறு யாரும் நமக்குக் கற்றுக் கொடுக்க முடியாது. கர்ணனின் வாழ்க்கை நமக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக் கற்றுக் கொடுக்கிறது. கர்ணன் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டான். ஆனால், அவன் தன் திறமையில் கவனம் செலுத்தினான். கர்ணனின் திறமையைப் பார்த்து துரியோதனன் அங்கீகாரம் அளித்தான், ஆட்சியையும் அளித்தான். ஒருவனது திறமை எந்த ஒரு சூழலிலும் அவனுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும் என்பதை நாம் அறிய வேண்டும்.
கர்ணனிடம் நான் அவனது பிறப்பு ரகசியத்தை வெளிப்படுத்தி , உங்களுடன் சேர வற்புறுத்தினேன். ஆனால், கர்ணன் உங்களுடன் சேர ஒப்புக் கொள்ளவில்லை. அவன் முழுமையாக துரியோதனனுக்கு விசுவாசமாக இருந்தான். தன் உடன் பிறந்த சகோதரர்களை விட, பெற்ற தாயை விட, அனைவரும் கைவிட்ட வேளையில் , தனக்கு கை கொடுத்த நண்பன் தான் தனக்கு முக்கியம் என்று உறுதியாக இருந்தான்.
இந்த உலகத்தை காக்கும் நான், உங்களுடன் இருப்பதால், இந்த பாரதப் போரில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பது கர்ணனுக்கு நன்றாகத் தெரியும். தோல்வி மட்டுமல்ல , போர்க்களத்தில் தனது உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டி இருக்கும் என்பதையும் அவன் அறிவான். எதுவாகினும் இறுதி வரை நண்பனுக்காக போராட வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தான். வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இறுதி வரை கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் என்று அனைவரும் உணர வேண்டும். இதனால் தான் கர்ணனின் புகழ் என்றும் பரவிக் கொண்டே இருக்கிறது."
இவ்வாறாக, கர்ணனின் குணங்களைப் பற்றி அர்ஜுனனுக்கு விளக்கும் வகையில் நமக்கும் பல விஷயங்களை புரிய வைக்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.