அதிகாலை நேரத்தில் யோகா செய்வது சிறந்தது. இரவில் நன்றாக உறங்கிவிட்டு காலையில் எழுந்தவுடன் யோகா செய்யும்போது, மனம் மிகவும் ஃபிரெஷ்ஷாக இருக்கும். விடியற்காலை காற்று மாசில்லாமல் தூய்மையாக இருக்கும். வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது, அலுவலகத்துக்குச் செல்லும் அவசரம் என்று பரபரப்பாக இயங்கும் பெண்களால், காலை நேரத்தில் யோகா செய்வது சாத்தியமாகாது. அதனால் மாலையில் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்யலாம்.
காலையில் லைட்டாக டிஃபன் சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் கழிந்த பிறகு யோகா செய்யலாம். வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு யோகாசனங்களைச் செய்யக்கூடாது. குறிப்பாக. அரிசி சாப்பாடு சாப்பிட்ட பிறகு யோகா செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரிசி சாப்பாடு ஜீரணமாக நீண்ட நேரம் ஆகும் என்பதே இதற்குக் காரணம்.
அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் சரியான உணவு முறை. யோகா செய்பவர்கள் பால், பழங்கள் போன்ற சாத்வீக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
யோகாசனப் பயிற்சிகளை செய்தவுடனே சாப்பிடக்கூடாது அல்லது ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழிந்த பிறகுதான் சாப்பிடவேண்டும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், யோகா பயிற்சிகளை முடித்தவுடனேயே சாப்பிடலாம். தவறில்லை.
சாதாரண உடற்பயிற்சிக்கும், யோகாவுக்கும் என்ன வித்தியாசம்?
யோகாவில் உடம்பும், மனசும், மூச்சும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. மனக்கட்டுப்பாடு யோகாவில் முக்கிய இடம் வகிக்கிறது. மூச்சை உள்ளுக்கு இழுத்து, வெளியே விட்டு மனம் ஒன்றி யோகாசனங்களைச் செய்யும்போது, ஒரு ஃபோகஸ் கிடைக்கிறது. மனது அலைபாயாது. நாம் என்ன செய்கிறோம் என்கிற விழிப்புணர்வுடன் ஆசனங்களைச் செய்யும்போது, மனதுக்குள் ஒரு அமைதியும், நிறைவும் ஏற்படுகிறது.
மற்ற உடற்பயிற்சிகளை நாம் இயந்திரத்தனமாக செய்துகொண்டே போகலாம். அதில் மனசுக்கோ, மூச்சுப் பயிற்சிக்கோ இடமில்லை. உடம்பு மட்டும் ஒரு இடத்தில் இருக்கும்; பயிற்சி செய்துகொண்டே இருப்போம். மனசு எங்கேயோ அலைபாயும். யோகாவில் அதற்கெல்லாம் இடமேயில்லை. அதுவும் ஒரு குருவின் நேரடி மேற்பார்வையில் யோகா செய்யும்போது, மனதுக்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடும்.
நன்றி: கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம்