
தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனுக்கு குருவாக பிரகஸ்பதி விளங்கினார். தேவையான அறிவுரைகளை அவ்வப்போது அவர் இந்திரனுக்கு வழங்குவது உண்டு. இந்திரனின் போதாத காலம், குரு பிரகஸ்பதியை ஒரு தடவை அவமதிக்க, இந்திரனுக்கு அறிவுரைகள் கூறுவதை அவர் நிறுத்தி விட்டார்.
குருவின் வழிகாட்டுதல் இல்லாத காரணம், இந்திரன் பல தீய செயல்களைச் செய்ய ஆரம்பித்தான். இதைக் கண்ட குரு பிரகஸ்பதி, இந்திரன் மீது கருணை கொண்டு தனது பணியை மீண்டும் ஆரம்பித்தார்.
குரு இல்லாத நேரத்தில், தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய எண்ணிய இந்திரன், இது பற்றி குரு பிரகஸ்பதியிடம் கேட்டான். தீர்த்த யாத்திரை ஒன்றை மேற்கொள்ள குரு கூறியதும், இந்திரன் புறப்பட்டான். தீர்த்த யாத்திரை பயணம் செல்கையில், ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் (மதுரைக்கு அருகே) தங்குகையில், தன்னுடைய தீங்கிற்கான பாவச்சுமை அகன்றது போல இந்திரன் உணர்ந்தான். அப்போது அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். அதன் காரணம்தான் தனது பாவம் நீங்கியது என நம்பி, சிவனை வணங்கினான்.
உடனே தேவதச்சனான விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அங்கே கோயில் கட்டியதோடு, அம்பாளுக்கென தனிச் சன்னிதியும் அமைத்தான் தேவேந்திரன். பிறகு, அங்கிருந்த குளத்தில் பொற்றாமரையை வரவழைத்து சிவலிங்கத்தை வழிபட்டான். இந்த சம்பவம் ஒரு சித்ரா பௌர்ணமியன்று நடந்தது. அந்த காட்டுப் பகுதியே பிறகு மதுரை நகரமானதென்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி தினமும், இந்திரன், சிவபெருமானை வழிபட மதுரைக்கு வருவதாக ஐதீகம்.
சித்ரா பௌர்ணமி கொண்டாட்டம்:
சித்ரா பௌர்ணமி தினம் கடற்கரைகளிலும், ஆற்றங்கரை மற்றும் நீர் நிலை பகுதிகளிலும் மக்கள் கூடுவது வழக்கம். ஆற்றங்கரையில், ‘உறல்’ தோண்டி அதற்கு ‘திருவுறல்’ என்று பெயரிடுவார்கள். அங்கே இறைவனை வலம் வரச்செய்வதோடு, சித்திரை மாதத்தில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை நிவேதனம் செய்து மக்கள் வழிபடுவார்கள். இச்செய்தியை சிலப்பதிகாரம் மூலம் அறியலாம்.
சித்ரா பௌர்ணமியன்று முழு நிலவு தோன்றிய பின், கிராமத்து மக்கள் அவரவர் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் செய்து வைத்து அதற்கு பூவும், அறுகம் புல்லும் வைத்து வணங்குவார்கள். மேலும், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றைத் தயாரித்து பிள்ளையார் முன்பாக ஐந்து தலைவாழை இலைகளைப் போட்டு அதில் படையல் வைப்பார்கள். அத்துடன் தேங்காய், மாங்காய், பழம், காய்றி, பருப்பு வகைகள், தயிர் கடையும் மத்து ஆகியவற்றையும் வைப்பார்கள். பூஜை செய்த பின்பு தேங்காய் உடைத்து தூப, தீபம் காட்டி வழிபட்ட பிறகு, பொங்கலை அனைவருக்கும் விநியோகிப்பார்கள்.
ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மதுரையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாத சித்திரை நாளில்தான் சித்திர புத்திரன் (சித்திர குப்தன்) தோன்றினார். அதனால், சித்ரகுப்தருக்கும, சித்ரா பௌர்ணமி அன்றுதான் விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் நடை பெறுகின்றன. இன்றைய நாளில் ஏழை எளியவர்களுக்கு தானமளிப்பது பலன் தரும்.
சித்திர குப்தர் வழிபாட்டு ஸ்லோகம் :
‘சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனீ பத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதாரம்
மத்யஸ்தம் ஸர்வா தேஹினாம்’
சித்ரா பௌர்ணமியன்று கடைப்பிடிக்கும் விரதம் மற்றும் சடங்குகளால், அறியாமையால் நாம் செய்யும் தவறுகள் நீங்கும் என நம்பப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த சித்திரை மாதப் பௌர்ணமியையும், சித்திர குப்தரையும் மனதார வணங்கி வழிபடுவோம்.