
மகாளய அமாவாசைக்கு முன்பு இருக்கும் 15 நாட்களை தான் 'மகாளய பட்சம்' என்று சொல்லுவோம். அதாவது ஆவணி பௌர்ணமிக்கு பிறகு வர பிரதம திதியில் துவங்கி புரட்டாசி அமாவாசை வரையிருக்கிற 15 நாட்களை தான் மகாளய பக்ஷம் என்று சொல்வோம்.
இந்த வருடம் மகாளய பட்சம் திங்கட்கிழமை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது. மகாளய அமாவாசை செப்டம்பர் 21 ஆம் தேதி வருகிறது. ஆடி மாதத்தில் பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பின நம் முன்னோர்கள் பூமியில் வந்து 15 நாட்கள் நம்முடன் தங்கியிருக்கும் காலத்தை தான் மகாளய பட்சம் என்று கூறுகிறோம்.
'மகாளயம்' என்றால் கூட்டாக வருதல். 'பட்சம்' என்றால் 15 நாட்கள் என்று பொருள். இந்த 15 நாட்களும் நம் முன்னோர்கள் நம்முடனே தங்கியிருப்பார்கள். மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம், அவர்கள் பெயரில் தானம் செய்வது மிகவும் விஷேசமாகும். முன்னோர்களே நேரடியாக வந்து இந்த தர்பணத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
அமாவாசையன்று யாருடைய பெயரை சொல்லி தர்பணம் தருகிறோமோ அவர்களுக்கே அந்த தர்பணம் சென்று சேரும். ஆனால், மகாளய காலக்கட்டத்தில் நாம் செய்யும் தர்பணம் நம் முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மகாளய காலத்தில் நாம் செய்யும் தானத்தை நம் முன்னோர்களே நேரடியாக வந்து பெற்றுக் கொண்டு நமக்கு ஆசிகள் வழங்குவார்கள் என்பது ஐதீகம்.
அதனால் தான் மகாளய பட்சம் மிகவும் முக்கியமான வழிப்பாடாக சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் நாம் முன்னோர்காளுக்கு செய்யும் வழிப்பாட்டால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசியையும், அருளையும் பெற முடியும். இந்த 15 நாட்களும் வழிப்பாடு செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசையன்று திதி, தர்பணம் கொடுத்து வழிப்பாடு செய்வது நன்மையைத் தரும்.
ஒரு வருடத்தில் கொடுக்க வேண்டிய 96 தர்பணங்கள் இந்த மகாளய பட்சத்தில் 15 நாட்களில் கொடுக்கும் தர்பணத்தில் அடங்கும். மகாளய பட்சத்தில் பசுவிற்கு அகத்திக்கீரை, நாய் மற்றும் காகத்திற்கு உணவளிப்பது நல்ல பலனைத் தரும். இந்த மகாளய பட்சம் திதியில் நம் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். திருமண யோகம், வீடு மனை வாங்கும் வாய்ப்புகள், வழக்குகளில் வெற்றி, நல்ல வேலைக் கிடைக்கும்.