நறுமணம் உள்ள அகர்பத்தி ஏற்றியோ அல்லது வித விதமான பூக்களால் அலங்கரித்து பூஜை செய்தாலோ அல்லது மந்திரங்களை உச்சரிப்பதாலோ கடவுளின் அருள் பரிபூர்ணமாக கிடைக்குமா?
சில பேர் காலையில் குளித்து விட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி வித விதமான அகர்பத்தியை ஏற்றி, மலர்களால் அலங்கரித்தும் பூஜை செய்தும் கடவுளை வழிபடுவார்கள். ஆனால் மறுபக்கம் பூஜை அறையில் இருந்து கொண்டே வீட்டில் இருப்பவர்களை கடிந்து பேசுவார்கள்.
பிறகு என்ன லாபம்? பல விதங்களில் கடவுளை வழிபட்டால் மட்டும் போதுமா? வீட்டில் இருப்பவர்களையும், பக்கத்தில் குடி இருப்பவர்களையும், ஆபீஸில் உடன் வேலை செய்யும் சக ஊழியர்களையும் நேசிக்காமல், உதவி புரியாமல், மனிதாபிமானம் இல்லாமல் இருந்து விட்டு பிறகு இவ்வாறு பூஜை செய்வதால் கடவுளுக்குப் பிடிக்குமா?
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.
கோவில்களுக்கு காணிக்கை செலுத்தினால் மட்டும் போதுமா? முடிந்த வரை இல்லாதவர்களுக்கும் கொடுக்கலாமே!
கடவுள் என்றால் என்ன? தெரியுமா?
எல்லாவற்றையும் கடந்து நம் மனதிற்குள் இருந்து நம்மை காப்பவர் தான் கடவுள். அப்படிபட்ட அந்த கடவுளை நாம் எவ்வாறு வணங்க வேணடும்? நாம் என்னசெய்தால் அவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும்? தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து விட்டு பிறகு குளித்து விட்டு விளக்கேற்றி உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு, 'கடவுளே..! இன்றைய தினத்தை நான் நல்லெண்ணத்தோடும் நற்பண்போடும் நல்லவழியில் கழிக்க அருள் புரிய வேண்டும்.' என்று வேண்டிக் கொண்டு நமஸ்கரித்தாலே போதும். மேலும் தினமும் ஒருமுறையாவது நம் நன்றியை கடவுளுக்கு செலுத்த வேண்டும். இது தான் கடவுளை வணங்கும் முறையான முறை. இதை தவிர நீங்கள் உங்களின் மனத் திருப்திக்காக தாரளமாக உங்களுக்கு வேண்டிய விதத்தில் பூக்களாலோ அல்லது அகர்பத்தி ஏற்றியோ பூஜை செய்துக் கொள்ளலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட நாம் மற்ற மனிதர்களையும் உயிரினங்களையும் அன்போடு பாவித்து அரவணைக்க வேண்டும் என்று தான் கடவுள் நம்மிடம் எதிர் பார்க்கிறார். கடவுளை பொருத்தவரையில், அவருக்கு நாம் அனைவருமே சமம்.
நம்மால் முடிந்த பண உதவியை தேவைப்படுபவர்களுக்கு செய்ய வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்குத் தேவைப்படும் உதவியை செய்ய வேண்டும். சாலையில் கண் தெரியாத ஒருவர் சென்றால் அவரின் கையை பிடித்து சாலையை கடக்க உதவி செய்யலாம். அதைப் போல நம் வீட்டின் அருகில் குடியிருக்கும் முதியோர்களுக்கு சில வேலைகளை ஒத்தாசையாக செய்து கொடுக்கலாம்.
நம் வீடுகளில் அன்றாட வேலைகளைச் செய்யும் பணியாளர்களை வீட்டின் ஒரு உறுப்பினராக கருதி அவர்களின் கஷ்டத்தில் பங்கு கொண்டு உதவி புரியலாம். 'நீ வேலைக்காரி தானே...' என்று இழிவாக பார்க்கவோ பேசவோ கூடாது.
நாம் சக மனிதர்களையும் மற்ற உயிரனங்களையும் அன்போடு பாவித்து அணைக்கும் தருணத்தில் கடவுள் நிச்சயமாக பரிபூர்ண அருளை கொடுத்து நம்மை அரவணைத்து கொள்வார்.