சாதாரணமாக திருதியை திதியை சிறப்பித்துக் கூறுவது உண்டு. இறைவன் திருதியை திதி மூலமாகத்தான் பிரம்மன், திருமால், மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளையும் மற்ற தேவி, தேவதைகளையும் படைத்ததாகக் கூறுவதுண்டு. அதனால் திருதியை திதியில் எந்தக் காரியமும் செய்தாலும் விருத்தி ஆகும். நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகம் திருதியை திதியில்தான் தொடங்கிற்று என்கிறது சாஸ்திரம். வீட்டில் ஏதாவது சுப காரியம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நல்ல திதி பார்ப்பது உண்டு. எந்தெந்த திதியில் என்னென்ன சுப காரியங்கள் செய்ய சிறப்பாகும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பிரதமையில் ஸ்திர காரியங்கள், பரிகாரங்கள் செய்ய ஏற்றதாகும்.
துவிதியையில் சுப காரியங்கள், மந்திர உபதேசம் முதலியவற்றை செய்யலாம்.
திருதியையில் வீடு கட்ட ஆரம்பித்தல், விவாகம், ராஜ அபிஷேகம், பட்ட பந்தனம், கல்வி ஆரம்பம் ஆகியவற்றை செய்தால் சிறக்கும்.
சதுர்த்தியில் யானை கட்டல், யுத்தம் செய்தல், எதிரியை கட்டி இழுத்து வருதல் போன்றவற்றை செய்யலாம்.
பஞ்சமியில் விவாகம், தனம், தானியக் கொள்முதல், குளம் வெட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.
சஷ்டி திதியில் விஷவாத அப்பியாசம் ஔஷத சாஸ்திரக்கார தகனங்கள், சத்ரு தரிசனம், வாத்து விடுதல் போன்றவற்றை செய்யலாம் என்கிறது ஜோதிடம்.
சப்தமியில் யாத்திரை, நீர் திறந்து விடுதல், ஆபரணம் பூணுதல், சகல சுப காரியங்கள் செய்தல், விவாதம் செய்தல் முதலியவற்றை செய்யலாம்.
அஷ்டமியில் அறுத்தல், சுடுதல், அட்டை விடல், காரமிடுதல், மருந்துண்ணல், சத்ரு ஜயம், அட்டகை, உருத்திராபிஷேகம் முதலியவற்றை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நவமியில் துர்கா பூஜை, அட்டகை செய்வது மிகவும் சிறப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.
தசமியில் தவம், விவாகம், கிராம, கிரகப்பிரவேசம், தன தானிய கொள்முதல் முதலியவற்றை செய்யலாம்.
ஏகாதசியில் உபநயனம், கன்னிகா தானம், கோதானம், பூமி தானம் போன்ற தானங்களை செய்வது சிறப்புப் பெறும்.
துவாதசியில் சோலை வைத்தல், பூ மரங்கள், தர்மம் பண்ணுதல், உழுதல், விதைத்தல், நெல்லறுத்தல், தானிய கொள்முதல், விஷ்ணு பூஜை, ஆபரணம் பூணுதல் போன்றவற்றை செய்யலாம்.
திரயோதசியில் வாகனம் ஏறுதல், விவாகம், சித்திர காரியங்கள் செய்வது சிறப்புடையதாக இருக்கும்.
சதுர்த்தசியில் ஆகமம், ஔஷத அப்பியாசம், மந்திர அப்பியாசம், பரிகாரங்கள் முதலியன செய்யலாம்.
பௌர்ணமியில் மங்கல காரியம், தர்ம காரியங்கள், கிரகப்பிரவேசம் போன்றவற்றை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அமாவாசையில் சமுத்திர ஸ்நானம், பிதுர் தர்ப்பணம், தானம், சிராத்த காரியம் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.