மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், சரியான உடற்பயிற்சி இல்லாததாலும் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டு பிரச்னைகள் அதிகம் உண்டாகின்றன. அதில் குறிப்பாக இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து நம்முடைய உடல் அமைப்பையே மாற்றி விடுகிறது. இதற்கு நாம் சரியான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் செய்து வர சிறந்த பலனைப் பெற முடியும்.
உணவு முறை: கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், குறைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அத்துடன் பிரஷ்ஷான பச்சை காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வதும் அவசியம். முழு தானியங்கள், முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தால் நம்மால் எளிதில் தொடை, இடுப்பு பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க முடியும்.
உடற்பயிற்சி: உடலின் கீழ்ப்பகுதிக்கான சிறந்த பயிற்சியை செய்து வர நம்முடைய தோற்றம் மேம்படும். கால் தசைகள் வலுப்பெறும். இதயத் துடிப்பையும் சீராக்க உதவும். அத்துடன் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது முதலில் நேராக நின்று கொண்டு கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். அத்துடன் பாதி அமர்ந்த நிலையில் நின்று கொண்டு இந்த பயிற்சியை 10 நொடிகள் செய்துவிட்டு பழைய நிலைக்கு திரும்பி மீண்டும் இப்பயிற்சியைத் தொடர நல்ல பலன் கிடைக்கும்.
இதனை தினம் 10 முறை காலையும், மாலையும் 1 மாதம் வரை செய்து வர இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள கொழுப்புகள் கரைந்து விடும். லிஃப்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்க, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைவதுடன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும்.
எளிய பயிற்சி: வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளை அல்லது கதவுப் பிடிகளை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து, உட்கார்ந்து எழுந்து என்று தினம் காலையும் மாலையும் 10 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இப்பயிற்சி இடுப்பு, தொடைப் பகுதிகளின் கொழுப்பை குறைப்பதுடன் மூட்டு வலிக்கும் சிறந்ததாகும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி செய்ய, உடல் எடை குறைவதுடன், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
சைக்கிளிங்: உடல் எடையை பராமரிப்பதுடன், இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க சைக்கிளிங் மிகவும் சிறந்த பயிற்சியாகும். இத்துடன் ஹைக்கிங் (Hiking) எனப்படும் நீண்ட தூர நடைப்பயணம் மேற்கொள்வதும் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதனை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் செய்து வரலாம்.
தவிர்க்க வேண்டியது: எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள், சோம்பல், அதிகத் தூக்கம் ஆகியற்றை தவிர்த்து விடுவது சிறந்த பலனைத் தரும்.