கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் விதவிதமாக ஸ்டார் கட்டுவதைப் பார்த்திருப்போம். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கிறிஸ்மஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை முன்னிட்டு உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். இது டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகையாக இருந்தாலும், உலகெங்கும் பல கலாசாரத்துடன் கலந்துக் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முதலில் மேற்கு ரோமானிய சமயத்தை சேர்ந்தவர்களிடமிருந்து தொடங்கியது. கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாள் 4ம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்டது.
கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் கதையில் முக்கியமான சின்னமாகும். இது பைபிளில் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் வசனத்தில் காணப்படும் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ‘பெத்தலகேமின் நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் இந்த பிரகாசமான நட்சத்திரம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்திற்கு மூன்று ஞானிகளை வழிநடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இதன்படி, இயேசு கிறிஸ்து பிறந்தபோது மேற்கே மூன்று ஞானிகள் வானத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் கவனித்தனர். அவர்கள் அதனை அரசனின் பிறப்பிற்கான தேவாலய சின்னமாக எண்ணி பெத்தலகேமுக்கு சென்று இயேசுவை வணங்கினர். அந்த நட்சத்திரம் தெய்வீக வழிகாட்டியாகக் கருதப்பட்டது.
இப்படி அந்த நட்சத்திரம் இயேசுவின் பிறப்பில் முக்கியப் பங்கு வகித்தது. இயேசுவை அறியாத மக்கள், உண்மையான ரட்சகர் யார்? எங்கள் தேவைகளை நிறைவேற்றுவது யார்? எங்கள் இருளைப் போக்குபவர் யார்? என்று ஏங்கிய சமயத்தில் இந்த நட்சத்திரம் வந்து எப்படி வழி காட்டியதோ அதே போல கடவுளை அடைய நினைப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து நாமும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
கிறிஸ்மஸ் ஸ்டார் என்பது தெய்வீக ஒளி, வழிகாட்டும் சின்னம் என்பதைக் குறிக்கிறது. அதன் ஒளி மனிதர்களைக் கடவுளை நோக்கி அழைக்கிறது. இன்றைய காலத்தில் கிறிஸ்மஸ் மரத்தில் அல்லது வீடுகளில் ஒரு நட்சத்திரம் வைக்கப்படும். அது அந்த பெத்தலகேம் நட்சத்திரத்தின் அடையாளமாகும்.
கிறிஸ்மஸின்போது சான்ட்டா கிளாஸ் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களைக் கொடுத்து மகிழ்வார். உலகமெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த நன்னாளில் இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை பகிர்ந்து கேக் வெட்டி இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.