
ஆடி அமாவாசையில் இராமேஸ்வர அக்னி தீர்த்த கடலில் நீராடுவது மிகுந்த பலனைத் தரும் என்கிறது புராணங்கள். ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்திருந்தான். ஸ்ரீராமன் வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று போரிட்டு சீதையை மீட்டு வந்தான். சில காலம் அன்னியன் வசம் சீதை இருந்ததால் ஊரார் அவளை தவறாய் பேசி விடக் கூடாதென, ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டான். இதனால் அக்னி குண்டம் முன்பாக வந்து நின்ற சீதை, ‘அக்னி தேவனே நான் உனக்குள் இறங்குகிறேன். நான் கற்பிழந்திருந்தால் என்னை பொசுக்கி விடு’ என கூறியபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள்.
சீதையின் கற்பின் வெம்மை அக்னி தேவனை சுட்டெரித்தது. ‘சீதை பரிசுத்தமானவள். இவளை சுட்டுப் பொசுக்க என்னால் இயலாது’ எனக் கூறியபடியே சீதையை கையில் ஏந்தி ராமனிடம் ஒப்படைத்துவிட்டு தனது வெம்மையை தீர்க்க, அருகிலிருந்த ராமேஸ்வரக் கடலில் குதித்தான் அக்னி தேவன்.
அக்னி தேவன் கடலுக்குள் இறங்கியதால் ராமேஸ்வரக் கடல் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து, கடல்வாழ் உயிரினங்கள் துடித்தன. கடலரசன் அலறினான். சீதையை அனைவரும் தஞ்சமடைய, அக்னி தேவனின் சூட்டைத் தணித்து கடலரசனை சாந்தப்படுத்தி அனைத்து உயிரினங்களையும் சீதா தேவி காப்பாற்றினாள்.
தன்னை பணிந்து நின்ற அக்னி தேவனை ஆசிர்வதித்த சீதை, ‘இன்றிலிருந்து இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று உமது பெயரால் அழைக்கப்படும். மற்ற கடல்களைப் போல் சீற்றம் கொள்ளாமல் பூமா தேவியின் மகளான என்னைப்போல் சாந்தமாய் விளங்கும்’ என கடலரசனுக்கும் அருளினாள்.
அதோடு, இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போகும் எனவும் அருளினாள். அன்றிலிருந்து ராமேஸ்வர கடலில் அலைகள் அடிப்பதில்லை. அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போக்கப்பட்டு புண்ணியம் கிடைக்கும்.
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் ஏராளமானோர் இங்கு வருகை தருகிறார்கள். அதுபோல் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, மஹாளய பட்ச நாட்களில் கூட இங்கு கூட்டம் அலைமோதும். திதி கொடுத்துவிட்டு கடலில் குளித்துவிட்டு பிறகு அறைக்கு சென்று அங்கும் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்லலாம். ஈரத் துணியுடன் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் 22 கிணறுகளில் குளித்தாலும் ஈரத்துடன் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மண்ணை மிதிப்பதே பெரும் பாக்கியம் என்கிறார்கள். வட இந்தியாவை சேர்ந்தவர்கள் முதலில் காசியிலும் பிறகு ராமேஸ்வரத்திலும் திதி கொடுக்க வேண்டும். அதுபோல் தென்னிந்தியர்கள் முதலில் ராமேஸ்வரத்திலும் பிறகு காசியிலும் திதி கொடுத்தால் மிகவும் புண்ணியம். இதனால் பித்ரு தோஷங்கள் விலகி, நன்மை கிடைக்கும். அத்துடன் திருமணமாகாதவர்களுக்கு சில பரிகாரங்களைச் செய்கிறார்கள். அதுபோல் பெண் சாபம் குடும்பத்தில் இருந்தால் அந்த வீட்டில் நல்லதே நடக்காது. அந்த தோஷத்திற்கும் இங்கு பூஜை செய்து நிவர்த்தி செய்கிறார்கள்.