
முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கும்பொழுது பலரும் தோப்புக்கரணம் போடுவதுண்டு. அப்படிப் போடப்படுவதின் காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ராவணன் ஒரு தீவிர சிவ பக்தன். ஆதலால், கயிலையில் தவம் இருந்து, சிவனை வேண்டி இலங்கையில் பிரதிஷ்டை செய்திட ஒரு லிங்கத்தை சிவனிடமிருந்து பெற்று வந்தான். இலங்கையில் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டால் ராவணனை அழிப்பதற்கு யாரும் துணிய மாட்டார்கள். மேலும், ஆணவத்துடன் அவன் நடந்து கொள்வான் என்பதால், அவனின் விருப்பப்படி அதை நடக்காமல் தடுத்து விட தேவர்கள் விரும்பினர். ஆதலால் விநாயகரின் உதவியை நாடி, விநாயகரை ஒரு பிராமண இளைஞன் உருவத்தில் ராவணனை தொடர்ந்து செல்லும்படி வேண்டினர்.
அப்படிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், ராவணனுக்கு இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்ற உணர்வை விநாயகர் ஏற்படுத்தினார். ராவணன் வேறு வழியின்றி சிவலிங்கத்தை கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையினால் அந்த சிவலிங்கத்தை யாரிடம் கொடுக்கலாம் என்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தான். அப்போது தென்பட்ட அந்த பிராமண இளைஞனை அழைத்து அந்த சிவலிங்கத்தை தான் வரும்வரை வைத்துக் கொள்ளுமாறு கூற, அந்தச் சிறுவன் மறுத்தான். பிறகு ஒரு நிபந்தனை விதித்த அந்தச் சிறுவன், அதாவது லிங்கத்தை 3 மணித்துளிகள் மட்டுமே நான் சுமந்திருப்பேன். அதற்குள் வந்து நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
ராவணனும் அந்த நிபந்தனையை ஏற்று, பிராமண வேடம் பூண்ட அச்சிறுவனிடம் லிங்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். சிறுவனான விநாயகர் மூன்று முறை ராவணனை அழைத்து விட்டு பிறகு லிங்கத்தை தரையில் வைத்து விட்டு நின்றான். லிங்கம் தரையில் நன்கு நிலைபெற்று விட்டது.
திரும்ப வந்த ராவணன் தனது திட்டம் வீணானது குறித்து மனம் வருந்தினான். கோபத்துடன் அந்த இளைஞனைப் பிடித்து நெற்றிப்பொட்டில் குட்டினான். பிறகு விநாயகரின் சுயரூபத்தைக் கண்டு, தனது தவறுக்கான தண்டனையாக இரு கைகளால் தன்னுடைய தலையில் குட்டு போட்டுக் கொண்டான். மேலும், இரண்டு காதுகளில் மீது கைகளை வைத்துக்கொண்டு நின்றான். அதாவது, தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான். தோர்ப்பி என்றால் இரண்டு கைகள் என்று அர்த்தம். கர்ணம் என்றால் காது. இதிலிருந்துதான் விநாயகருக்கு பலரும் போடும் தோப்புக்கரணம் ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது.
இப்படிப் போடுவதால் உடலில் சோம்பல் அகன்று, நல்ல மனநிலை ஏற்படும் என்பதால் காலப்போக்கில் விநாயகரை வணங்குவதற்கு தோப்புக்கரணம் போட வேண்டும் என்பது வழக்கமாகிவிட்டது. தலையில் குட்டிக் கொள்வதும் வழக்கத்திற்கு வந்தது.
இன்னொரு கதையில் தனது தங்கையாகிய பார்வதி தேவியை பார்ப்பதற்காக மகாவிஷ்ணு அவர் வீட்டிற்கு சென்றிருந்தபொழுது, விஷ்ணுவின் சக்கரத்தை எடுத்து சுற்றுவதும், சங்கை எடுத்து ஊதுவதுமாக குறும்புத்தனம் செய்த தனது தங்கையின் மகன் விநாயகரை தண்டிப்பதற்காக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டுமே என்று தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடு என்று கூறியதால் விநாயகர் அவ்வாறு செய்ய, அதையே நாம் பின்பற்றலானோம் என்றும் கூறப்படுகிறது.
கஜமுகன் என்ற அசுரன் தேவர்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். அப்பொழுது தேவர்கள் தினமும் தம் முன்பு வந்து இரு கைகளால் காதுகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுந்து தோப்புக்கரணம் போட வேண்டும். இரு கைகளால் நெற்றியில் குட்டிக்கொள்ள வேண்டும் என்றும் விதித்திருந்தான். கணபதி கஜமுகனை அழித்தார். இதனால் தேவர்கள் விநாயகருக்கு முன்பு கஜமுகனுக்கு போட்டது போல தோப்புக்கரணமும், குட்டும் போட்டுக் கொண்டு தங்கள் பணிவை தெரிவித்தனர். அந்தப் பணிவையே நாமும் பின்பற்றலானோம் என்றும் கூறப்படுகிறது.
பின்னர், காக்கை வடிவில் வந்த விநாயகர், அகத்தியரின் கமண்டலத்தை கவிழச் செய்ய, அவரது தலையில் அகத்தியர் குட்டு வைத்ததாகவும் கூறப்படுவது உண்டு. இதனாலும் நாம் விநாயகருக்கு குட்டு, தோப்புக்கரணத்தை சமர்ப்பிக்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப் பல்வேறாகக் கூறப்பட்டாலும், விஞ்ஞானப்பூர்வமாக தோப்புக்கரணம் போடுவதும், தலையில் குட்டிக்கொள்வதும் நமக்கு நல்ல மனநிலையை அளித்து, நேர்மறை எண்ணத்தை உண்டாக்குவதாக கூறப்படுவதுதான் இதன் சிறப்பு. ஆதலால், நாமும் தோப்புக்கரணம் போடுவோம்! விநாயகரைப் பணிவோம்.