அமாவாசைதோறும் அங்காளம்மனுக்கு ஏன் ஊஞ்சல் உத்ஸவம் தெரியுமா?

மேல்மலையனூர் அங்காளம்மன்
மேல்மலையனூர் அங்காளம்மன்
Published on

ங்காளம்மன் கோயில் என்றதும் மேல்மலையனூர்தான் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வரும். இங்கு மாதம் தோறும் நடைபெறும் அமாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உத்ஸவம் மிகச்சிறப்பு வாய்ந்தது. ஏன் இத்தனை தெய்வங்களைத் தவிர்த்து அங்காளம்மனுக்கு மட்டும் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிரம்மனின் ஒரு தலையை கொய்ததால் சிவன் கையில் அந்தக் கபாலம் ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதையடுத்து, மலையனூரில் புற்றில் வீற்றிருந்த அங்காளம்மன் விஸ்வருபம் எடுத்து, தனது காலால் பிரம்ம கபாலத்தை மிதித்து பூமிக்குள் அழுத்தி, சிவனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். அதன் பிறகே சிவபெருமானுக்கு பாவ விமோசனம் கிடைத்தது.

ஆனால், விசுவரூபம் எடுத்த அங்காளம்மனின் சீற்றமும், ஆக்ரோஷமும் குறையவில்லை. அது மட்டுமின்றி, தன்னை நாடி, தேடி வரும் ஒவ்வொரு பக்தனையும் பிடித்துள்ள தீய சக்திகளையும் அங்காளம்மன் வீறு கொண்டு அழிக்கிறாள் என்பதை பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

இப்படி தினம், தினம் தீய சக்திகளை விரட்ட ஆங்காரம் கொள்ளும் அம்மனை அமைதிப்படுத்தி சாந்தம் செய்யவே அமாவாசை நள்ளிரவு அவளை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுகிறார்கள். இதைத்தான் ஊஞ்சல் உத்ஸவம் என்று அழைக்கிறார்கள். தூக்கத்துக்கு அழும் குழந்தைகளை தொட்டிலில் போட்டு தாலாட்டியதும், அடுத்த வினாடியே அமைதி கொண்டு குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அது போலத்தான் அங்காளம்மனை தொட்டிலில் வைத்து தாலாட்ட, தாலாட்ட அவள் மனம் அமைதி பெற்று குளிர்ந்து போவதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
வாத நோய்களைப் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகை பழம்!
மேல்மலையனூர் அங்காளம்மன்

இந்தத் தாலாட்டு நடைபெறும்போது, அங்காளம்மனை புகழ்ந்து பாடுவார்கள். இது அம்மனை மேலும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் என்று கூறுகிறார்கள். இத்தகைய சமயத்தில் நாம் அங்காளம்மனை வழிபட வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த நேரத்தில் அம்மனின் அருளைப் பெறவே அமாவாசை தோறும் மேல்மலையனூர் தலம் நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தபடி உள்ளனர்.

அங்காளம்மனின் ஊஞ்சல் உத்ஸவத்தை காண நெடுந்தொலைவில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து, அமைதி பெற்று செல்கிறார்கள். அங்காளம்மன் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த அமைதியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சனமான உண்மையாகும். உங்களுக்கும் வாய்ப்பு அமையும்பொழுது ஒரு அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் சென்று அன்னையை வழிபட்டு அளவில்லாத ஆனந்தத்தை அடையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com