
இந்து மதத்தில் சக்தி தேவியைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தி தேவியரைப் போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 10 நாட்களும், அம்பாளை வழிபடுவதற்குரிய உகந்த நவராத்திரி நாட்களாகும்.
வருடத்தில் நான்கு நவராத்திரிகள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அவை மாசி மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி, பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியாகும். இந்த நான்கு நவராத்திரிகளிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியைத்தான் உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
நவராத்திரி என்பது அம்பிகையின் வழிபாட்டுக்குரிய ஒன்பது இரவுகளாகும். சிவனுக்கு சிவராத்திரி ஒரு இரவு போல, அம்பிகைக்கு நவராத்திரி, அதாவது ஒன்பது இரவுகள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அம்பாள் அவதாரமென்பது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அதாவது, துர்கை, லட்சுமி, சரஸ்வதி என மூவரும் சேர்ந்த அவதாரமாகும். செயல் என்ற கிரியா சக்தியும், இச்சா என்ற அன்புமயமான பக்தியும் இணைந்து நம்மை ஞானமாகிய கடவுளிடம் கொண்டு சேர்க்கும் என்பதை விளக்குவதே இந்த விரதத்தின் அடிப்படைக் கருத்தாகும். இந்து ஒன்பது நாட்களையும் மூன்று மூன்று நாட்களாகப் பிரித்து வீரம், செல்வம் மற்றும் கல்விக்குரிய தெய்வங்களை துதிப்பததாக ஐதீகம்.
முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியின் தோற்றமான வீரக்கடவுள் துர்கையை போற்றும் நாட்களாகும். இந்த மூன்று நாட்களும் துர்கை அம்மனை வழிபாடு செய்யும் நாட்களாகும். நடுவில் உள்ள மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான செல்வக் கடவுளாகிய மகாலட்சுமியை போற்றும் நாட்களாகும். இந்த மூன்று நாட்களும் மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்யும் நாட்களாகும். இறுதி மூன்று நாட்கள் ஞானசக்தியின் தோற்றமான ஞானக் கடவுள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும் நாட்களாகும். இவளே கலைமகள், கலைவாணி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதி தேவி ஞான (கல்வி) அருளை நமக்கு வழங்குகின்றாள்.
இந்த இறுதி மூன்று நாட்களின் கடைசி நாளான ஒன்பதாம் நாள் அன்று நவமி ஆகும். இந்த நவமியானது ‘மகாநவமி’ என்று அழைக்கப்படுகிறது. அன்று வீடுகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் தாம் செய்யும் தொழில்களுக்குரிய ஆயுதங்களுக்கும், வாகனங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். மேலும், மாணவர்கள் தங்களுடைய பாடப் புத்தகங்களை தேவி முன்பு பூஜையில் வைத்து, அவல், பொரி, கடலை, சுண்டல் போன்றவற்றை படைத்து சரஸ்வதி தேவியை வணங்கி அவளுடைய ஆசியையும் அருளையும் பெறுகிறார்கள்.
நாம் நமக்குத் தேவையான கல்வியைப் பெற்று இனிமையாக யார் மனதையும் புண்படுத்தாமல் பேசினால் நிச்சயமாக இறைவனின் திருவடியை அடையலாம். வீரமும் செல்வமும் இருந்தாலும் நம் நாக்கிலே ஒழுக்கம் இருந்தால் மட்டுமே நமக்கு பரிபூரண ஆசி கிடைக்கும். ஆகவேதான் சரஸ்வதி பூஜையானது நவராத்திரியின் இறுதியாக கொண்டாடப் படுகிறது.