‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க; நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல; நாலு காசு சம்பாதிக்கவாவது படிக்கணும்; நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்; அவரு நாலும் தெரிஞ்சவரு; நாலு வார்த்த நறுக்குன்னு கேட்டுட்டு வர வேண்டியதுதானே’ என எதற்கெடுத்தாலும் நாலு பேரை மையப்படுத்தி பேசுவதைக் கேட்டிருப்போம். இந்த ‘நாலு’க்கு என்னதான் அப்படி சிறப்பு என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில், பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என நான்கு வரும். நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அகநானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம். ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து நான் உனக்குத் தருவேன்’ இது ஔவையாரின் நல்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். இவர்களை ‘நால்வர்’ என அழைக்கிறோம். மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் நான்கு அவதாரங்கள் மட்டுமே மனித ரூபம் (கர்ப்பவாசத்தில்) எடுத்ததாகும்.
வேதங்களை நான்காகப் பகுத்த வேதவியாசர், ருக் வேதத்தை பைலர், யஜூர் வேதத்தை ஜைமினி, சாம வேதத்தை வைசம்பாயனர், அதர்வண வேதத்தை சுமந்து என்னும் ‘நாலு ரிஷிகளிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆதிசங்கரர் சனாதான தர்மத்தை பரப்ப பாரத நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி நான்கு சீடர்களை நியமித்தார்.
தசரதருக்கு ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கன் என்னும் நான்கு பிள்ளைகள். தர்மம், அதர்மம், காமம், மோட்சம் என்னும் நான்கு புருஷார்த்தங்கள். ஒவ்வொரு மனிதனும் கடக்க வேண்டிய பிரம்மசர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் கடக்க வேண்டிய நான்கு நிலைகள்.
நான்கு தலைகள் (சதுர்முகன்) கொண்டிருந்த பிரம்மாவுக்கு சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர் என நான்கு மானஸ புத்திரர்கள். அக்னிக்கு கம்பீரா, யமலா, மஹதி, பஞ்சமி என நான்கு வடிவங்கள். ஹரித்வார், பிரயாகை, த்ரிவேணி சங்கமம், உஜ்ஜையினி என நான்கு கும்ப மேளா நிகழ்விடங்கள்.
ரத (தேர்), கஜ (யானை), துரக (குதிரை), பதாதி (காலாட் படைகள்) என நால்வகை படைகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம என உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்கியங்கள்.
கிருத, திரேதா, துவாபர, கலி என நான்கு யுகங்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என பெண்டிரின் நால்வகை குணங்கள் யோசித்தால் இப்படி நாலின் சிறப்பைக் கூறும் பல விஷயங்களைக் கூறலாம்.