அம்பாளுக்கு ஏன் தனி சந்நிதி இல்லை? காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சொல்லும் ஆச்சரியக் கதை!

Kanchi Ekambaranathar Temple - ஏகாம்பரநாதர் கோவில்
Kanchi Ekambaranathar Temple - ஏகாம்பரநாதர் கோவில்AI image
Updated on

காஞ்சிபுரத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனி வரலாறு உள்ளது, தனிச்சிறப்புகள் உள்ளன. ஏகாம்பரநாதர் ஆலயம் இங்கே அமைந்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமான் தியானத்தில் இருந்தபோது, அன்னை பார்வதிதேவி விளையாட்டாக ஈசனின் இரு கண்களையும் தன் கைகளால் மூடினார். இதனால் கிரகங்கள் இயக்கத்தை நிறுத்தின. சூரியன் உதிக்கவில்லை. உலகமே இருண்டு இயங்காமல் போனது. தன் விளையாட்டு இத்தனை பெரிய அபாய விளைவுகளைத்தரும் என்று எதிர்பார்க்காத அன்னை, தன் தவறை உணர்ந்து வருந்தினார்.

சிவபெருமானின் கண்களைப் பொத்திய தன் கரங்களை சட்டென்று எடுத்துவிட்டு, தன்னை மன்னிக்கும்படி ஈசனிடம் வேண்டினார். செய்த தவறுக்கு தண்டனையில்லாமல் அப்படியே மன்னிக்க இயலுமா? ஈசன் ஒத்துக்கொள்ளவில்லை.

பூலோகத்தில் தன்னை வழிபட்டுத்  தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என ஈசன் அருளினார். அன்னை தவம் செய்யத் தகுந்த இடமாகக் காஞ்சியை (முற்காலத்தில் கச்சி என்று அழைக்கப்பட்டது) ஈசன் சொல்ல, அன்னை காஞ்சிக்கு வந்தார்.

இத்தலத்தில் ஒரு மாமரத்தடியில் மணலினால் லிங்கம் அமைத்து, இறைவனை எண்ணித் தவமிருந்தார் அன்னை பார்வதி. அன்னையின் தவத்தை, பக்தியை சோதித்து உலகறியச் செய்ய  எண்ணிய ஈசன், தன் சடாமுடியில் இருந்து கங்கையை அனுப்பி, கம்பா நதியில் கலந்து வெள்ளமாகப் பிரவாகமெடுத்து காஞ்சியில் பாயச் செய்தார். மணலால் தான் செய்த லிங்கம், பெருக்கெடுத்துவரும் கங்கை வெள்ளத்தில் கரைந்துவிடுமே என்ற கவலையில், லிங்கத்தை மார்போடு அணைத்துக்கொண்டார் அன்னை பார்வதி.

Kanchi Ekambaranathar Temple - ஏகாம்பரநாதர் கோவில்
Kanchi Ekambaranathar Temple - ஏகாம்பரநாதர் கோவில்AI image

அம்பாளின் பக்தியாலும் தவத்தாலும் மகிழ்ந்த ஈசன், அன்னைக்குக் காட்சி தந்து தவறை மன்னித்து திருமணம் செய்துகொண்டார். அன்னை மணலால் அமைத்த லிங்க மூர்த்திதான் இப்போதும் இத்தலத்தில் அருள்கிறார். மணலால் அமைந்த லிங்கம் என்பதால் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசி, வெள்ளிக் கவசம் சாற்றி வழிபடுகிறார்கள். அன்னை அணைத்த தடம் இப்போதும் லிங்கத் திருமேனியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். லிங்கம் அமைந்துள்ள ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகங்கள் நடக்கின்றன. மணலால் அமைந்த லிங்கம்தான் ப்ருத்வி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் ஈசனின் பஞ்ச பூதத் தலங்களில் இத்தலம் ப்ருத்வி (நிலம்) தலமாகத் திகழ்கிறது.

கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் அருள்கின்றனர். ஏகாம்பரநாதர் ஆலயத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. இந்த மாமரத்தடியில்தான் ஈசன் அன்னைக்குக் காட்சி தந்து திருமணம் செய்துகொண்டார்.

இப்போதும் இந்த மாமரத்தடியில் ஈசனும் அன்னையும் அமர்ந்த கோலத்தில் அருள்கின்றனர். மணக்கோலம் என்பதால் அன்னை நாணத்துடன் சற்றே தலையைக் குனிந்துகொண்டு, ஈசனை நோக்கித் திரும்பியபடி பேரழகுடன் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
உலகின் ஒரே சங்கு வடிவ கோவில்! விஷ்ணு, சிவபெருமானாக மாறிய அதிசய வரலாறு!
Kanchi Ekambaranathar Temple - ஏகாம்பரநாதர் கோவில்

இந்த மாமரத்தில் நான்கு விதமான கிளைகளில் நான்கு வேறுபட்ட சுவைகளில் பழங்கள் இருக்கும் என்பது சிறப்பு. நான்கு கிளைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மரம் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஒரே மாமரம் என்னும் பொருளில்தான் ஏக + ஆமரம் = ஏகாம்பரம் என்ற பெயர் வந்தது.

கம்பை ஆற்று மணலில் அருளிய பெருமை மிக்கவர் – (ஏ – பெருமை) அதனால் ஏகம்பர் என்று பெயர் வந்தது என்றும் சொல்வார்கள். கச்சி ஏகம்பனே என்று பதிகங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.    

இவ்வாலயத்தில் அன்னைக்கு தனி சந்நிதி இல்லை. இறைவனும் இறைவியும் சேர்ந்தே அருள்கின்றனர். அருளைப் பெற்று வள்மோடு வாழ்வோம்.    

logo
Kalki Online
kalkionline.com