இந்த அனுமன் கோயிலின் கதையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்துக்கு அருகில் அமைந்துள்ளது கர்மன்காட் ஆஞ்சனேய சுவாமி திருக்கோயில். வீரம் என்பதை ஒருவரின் உடல் பலத்திலும், அவர் பயன்படுத்தும் ஆயுதப் பிரயோகத்திலும் வைத்து கணிக்க முடியும். ஆனால், ஸ்ரீராம பக்தன் அனுமன் உடலின் ஒவ்வொரு பகுதியும் வீரம் செறிந்தது. அதிலும் குறிப்பாக, அனுமனின் வாலுக்கும் மிகப் பெரிய பலம் உண்டு என்பதைப் பலரும் அறிவர். அந்த வகையில் ஸ்ரீ ஆஞ்சனேயரின் வால் பலத்தை நிரூபிக்கும் திருக்கோயிலாக அமைந்துள்ளது கர்மான்காட் அனுமன் கோயில்.
ஒரு நாள் காகட்டிய வம்சத்தை சேர்ந்த மன்னன் ப்ரோலா காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அப்போது களைப்பாற ஒரு மரத்தடியில் சிறிது நேரம் படுத்துக் கொண்டார். அப்போது யாரோ, ‘ராம் ராம்’ என்று ஜபிப்பது அவர் காதுகளில் விழுந்தது. இந்த நட்ட நடு காட்டில் யார் ராம நாமத்தை ஜபிக்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்ட மன்னன், சுற்றும் முற்றும் தேடினார். அப்போது உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமன் விக்ரகம் அவர் கண்களில் பட்டது. அந்த விக்ரகத்தின் வாயிலிருந்துதான் ராம நாமம் வருவதை உணர்ந்தார். உடனே அந்த ஹனுமன் விக்கிரகத்தின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அரண்மனை திரும்பினார்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய ஹனுமன், காட்டில் கண்ட ஹனுமன் விக்கிரகத்திற்கு கோயில் ஒன்றை காட்டுமாறு கூறினார். மன்னனும் ஹனுமனின் கட்டளைப்படி அவ்விடத்தில் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். இது நடந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில். இந்தக் கோயில்தான் தற்போது மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கும் கர்மன்காட் ஆஞ்சனேய சுவாமி கோயிலாகும்.
15ம் நூற்றாண்டில் முகலாய அராஜக மன்னன் அவுரங்கசீப் இந்தக் கோயிலை இடிப்பதற்கு தனது படையை ஏவினான். ஆனால், அவனுடைய சிப்பாய்கள் கோயிலின் மதில் சுவரை கூட இடிக்க முடியாமல் திரும்பினர். இதனால் கோபப்பட்ட அவன், தானே அங்கு சென்று கடப்பாரை கொண்டு இடிக்கத் தொடங்கினான்.
அப்போது கோயில் உள்ளிருந்து இடி போன்ற குரலில் அசரீரியாக அனுமன், 'முட்டாள் மன்னா, உனது இதயம் நொறுங்கிப் போக வேண்டும் என்றால் இந்தக் கோயிலை இடிக்க முயற்சி செய்யலாம்' என்று ஒலித்தது. அதைக் கேட்ட அவுரங்கசீப் நடுங்கி போய் கடப்பாரையை போட்டு விட்டு தனது படைகளுடன் அந்த இடத்தை காலி செய்து விட்டு ஓடி விட்டான்.
அனுமனின் வாலுக்கு இருக்கும் அசாத்திய பலம் பற்றி புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா? ஆயிரம் சாதாரண யானைகளின் பலம் கொண்டது ஒரு கஜராஜன். பத்தாயிரம் கஜராஜன்களின் பலம் கொண்டது இந்திரனின் வாகனமான ஐராவதம். லட்சம் ஐராவதங்களின் பலம் கொண்டவர் இந்திரன். அப்பேற்பட்ட பலசாலியான இந்திரனின் பலம் அனுமானின் வாலில் உள்ள ஒரு முடிக்குக் கூட சமமாகாது. அப்பேர்ப்பட்ட அவரது பலத்தின் முன்பு யாரால் வாலாட்ட முடியும்?