
'நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள். இதுவே குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை நமக்கு சிறப்பாக விளங்குகிறது. குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தினுடைய முன்னோர்களால் வழிபடப்பட்ட தெய்வம். இவை பெரும்பாலும் கிராம தேவதை அல்லது காவல் தெய்வமாக இருக்கும். பொதுவாக, குலதெய்வம் என்பது நம் மீது ஒரு சிறப்பு பார்வையும், பாதுகாப்பும் வைத்திருப்பதுடன் சிறந்த ஆன்மிக வழிகாட்டியாகவும் கருதப்படுகிறது.
குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியமானது?
குலதெய்வ வழிபாடு குடும்பத்தின் / சமூகத்தின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் வளர்க்கக் கூடியது. சமூகத்திற்குள் ஒருவித ஆன்மிகப் பிணைப்பை ஏற்படுத்துகிறது. குலதெய்வ வழிபாடு வாழ்வில் வளம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் இது முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது.
குலதெய்வ வழிபாடு ஒரு குடும்பத்தின் அல்லது சமூகத்தின் ஆன்மிக மற்றும் கலாசார அடையாளத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாகும். இது அந்தக் குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை வழங்குவதாகக் கருதப்படுகிறது.
ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வத்திற்கு ஈடு இணை கிடையாது. நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. குலதெய்வத்திற்குதான் முதல் முடி காணிக்கை மற்றும் காது குத்து செய்யப்படுகிறது. குலதெய்வம் கோயிலில் விளக்கு ஏற்றுவது நம்முடைய பிரச்னைகளை தீர்க்கவும், கஷ்டங்களை போக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
நடக்காத காரியங்களையும் நடத்தித் தரும் வல்லமை குல தெய்வங்களுக்கு உண்டு. வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையும், தடைகளையும் சந்திப்பவர்கள் மனம் வெறுத்து ஜோதிடர்களை அணுகினால் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் பதில், ‘குலதெய்வத்தை வணங்குங்கள்’ என்பதுதான். சிலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாமலே இருப்பார்கள். ஊர் விட்டு ஊர் வந்து வேலை விஷயமாக செட்டிலானவர்கள், இரண்டு மூன்று தலைமுறைகளைக் கடந்தவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை விட்டு விடுவதால் அடுத்த தலைமுறைக்கு குலதெய்வம் எது என்பது தெரியாமலே போய் விடுவதுண்டு.
குலதெய்வத்தை கண்டுபிடித்து வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?
சில சமயங்களில் பரம்பரையில் உள்ள பெயர்களை ஆராய்ந்தாலே குலதெய்வத்தின் பெயர் தெரிந்துவிடும். தாத்தா, கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா ஆகியோரின் பெயரை தெரிந்துகொள்ள முயலுங்கள். பெயர்கள் என்பது வழிவழியாக வருபவை. எனவே, மூதாதையர்களின் பெயர்கள் குல தெய்வத்தின் பெயராக இருக்கும்.
நாம் மறந்தாலும் நம் வம்சத்தைக் காக்கும் குலதெய்வம் நம்மை ஒருபோதும் மறக்காது. வெள்ளிக்கிழமை அன்று குத்துவிளக்கு ஏற்றி, பூ வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, தூப தீபம் காட்டி மனமுருக வேண்டி நின்றால் குலதெய்வம் பற்றிய விவரம் நமக்குத் தெரியவரும். சிறந்த ஜோதிடரிடம் காட்ட, ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றை ஆராய்ந்து குலதெய்வத்தை கண்டுபிடிக்க உதவுவார்கள்.
குலதெய்வம் எது என்று தெரிந்ததும் வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை வழிபட வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத்து நிற்கும்.