
உங்களுக்கு நல்லநேரம் இருந்தால் மட்டுமே இந்த கோவிலில் நீங்கள் காலடி எடுத்து வைக்க முடியும். அப்படிப்பட்ட கோவில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் வழியில் திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ளது பாம்புரநாதர் திருக்கோவில். ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், (பாம்புரம்) எனப் பெயர் கொண்டது. சேஷபுரீஸ்வரர் என்ற பெயரும் இந்த கோவிலுக்கு உண்டு. திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் 'பாம்புர நன்னகர்' என்று குறிப்பிடுகிறார்.
இந்த கோவில் 3000 ஆண்டுகள் மேல் பழமையான கோவில். நாகங்கள் வணங்கிய சிவபெருமான் தான் இந்த பாம்புரநாதர். இங்கு வணங்கி தான் பாம்புகளுக்கு விஷ சக்தி கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த இடத்துடன் தொடர்புடைய சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இங்கு பாம்புகள் யாரையும் கடிக்காது, பாம்பு கடித்தால் இங்கு விஷம் இருக்காது.
இன்றளவும் நாகங்கள் வந்து இந்த சிவபெருமானை வழிபடுவதாக சொல்லப்படுகிறது. சித்தர்கள் இங்கு நாக எந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுடைய அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதாக சொல்லப்படுகிறது.
நாகதோஷம், ராகு கேது தோஷத்திற்கு இந்த கோவிலில் சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகிறது. திருப்பாம்புரம் ராகு கேது கோவில் அதன் ராகு கேது பூஜைக்கு பெயர் பெற்றது. சிவபெருமான் சுயம்பு லிங்கம் (சுய வெளிப்பாடு). திருப்பாம்புரம் ராகு கேது கோவிலில் ராகு கேது பூஜை மற்றும் நாகதோஷத்திற்கு பூஜை செய்தால் 48 நாட்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இந்த கோவிலில் ராகுவும், கேதுவும் ஒரே உடலில் காட்சி தருவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
இந்த கோவில் நவகிரக சன்னதி கிடையாது. அதேபோல் கோஷ்ட மூர்த்திகள் இல்லை. இன்னும் பல அதிசயங்கள் இந்த கோவிலில் நிறைந்துள்ளது.
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
திருப்பாம்புரம் கோவிலில் ராகு கேது பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் :
* தம்பதிகளுக்கு ஏற்படும் கருவுறுதல் பிரச்சனைகளை நீக்குகிறது,
* திருமணத் தடைகளை நீக்கும்,
* தொழில் வளர்ச்சி மற்றும் வேலையின்மை தடைகள் நீங்கும்,
* உங்கள் திட்டமிடலில் உள்ள தடைகளை நீக்குகிறது,
* 18 வருட ராகு தோஷம், 7 வருட கேது தோஷம் நீங்கும்.
ஜாதக ரீதியாக நமக்கு கொட்ட நேரம் நடந்தால் இந்த கோவிலுக்கு வரமுடியாது என்று சொல்லப்படுகிறது. கொட்ட நேரம் முடிந்த நல்லநேரம் ஆரம்பித்தால் தான் இந்த ஸ்தலத்திற்கு வந்து இந்த இறைவனை தரிசனம் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.