
ஜோடியாக சென்று வர நினைப்பவர்களுக்கு மலைத்தொடர்கள், கடற்கரைகள், கோட்டைகள், கலாச்சார பாரம்பரிய இடங்கள், நிறைந்த சிம்லா, டார்ஜிங்தான் முதல் விருப்பமாக இருக்கும். ஆனால் ஜோடியாக துணையுடன் விடுமுறையை ஜாலியாக கழிக்க தென்னிந்தியாவிலேயே சிறந்த 10 இடங்கள் உள்ளன .அவற்றை இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .
1.தரங்கம்பாடி
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோர மண்டல கடற்கரையில் அமைந்துள்ள தரங்கம்பாடி பாரம்பரிய மற்றும் அழகான கடற்கரைக்கு பிரசித்தி பெற்றது. இங்கு17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டான்ஸ் போர்க் கோட்டையுடன் , சூரிய அஸ்தமனத்தையும் துணையுடன் ரசித்து மகிழலாம்.
2.தென்மலா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள தென்மலாவில் பாலருவி நீர்வீழ்ச்சி, ஏரியில் படகு சவாரி, கயிறு பாலம், மலையேற்றம் மற்றும் பைக் சவாரி, இயற்கை நீர் ஊற்றுகள் கொண்ட அழகான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால் சிறந்த சூழலியல் சுற்றுலாவை ஜோடிகளுக்கு வழங்குகிறது.
3.லம்பசிங்கி
ஆந்திர பிரதேசத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் லம்பசிங்கி மேகங்கள் சூழ்ந்த இடமாகவும் தென்னிந்தியாவின் பனிப்பொழிவு ஏற்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகவும் இருக்கிறது. இம்மலைப்பகுதியில் உள்ள காபி, பைன் மரங்கள், தைலம் மரங்கள் சிறிய ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெரி தோட்டங்கள் பார்ப்பதற்கு இனிமையான ஒன்றாகவும், மூடு பனி நிறைந்த காலை மற்றும் மாலை வேளைகள் காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ரொமான்டிக்கான இடமாகவும் உள்ளது.
4.பூவார் தீவு
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பூவார் தீவு, அழகிய கடற்கரைகள், மிதக்கும் குடிசைகள், தங்க மணல் கடற்கரை மற்றும் சதுப்பு நிலக்காடுகள் வழியாக செல்லும் படகு சவாரி ஆகியவற்றை வழங்குவதால் ஜோடிகளுக்கேற்ற ரம்மியமான இடமாக உள்ளது.
5.வட்டக்கணல்
இந்தியாவின் சிறிய இஸ்ரேல் என்று அழைக்கப்படும் வட்டக்கணல், கொடைக்கானலுக்கு அருகில் உள்ள அமைதியான இடமாகும். அழகான மரகுடில்கள், காடுகளுக்கு இடையே உள்ள நீர்வீழ்ச்சி மூடுபனி கொண்ட பசுமையான பள்ளத்தாக்குகளை துணையுடன் கண்டுமகிழ ஏற்ற இடமாக இருக்கும்.
6.மரவந்தே
ஒருபுறம் அரபிக் கடலும், மறுபுறம் சௌபர்ணிகா நதியும் கொண்ட கர்நாடகாவில் உள்ள மரவந்தே , தங்க மணல் கடற்கரையாக இருப்பதோடு அரபிக்கடலுக்கு இணையான நெடுஞ்சாலை பயணம் சூரிய அஸ்தமனம் ஆகியவை ஜோடிகள் ரசிப்பதற்கு ஏற்ற இனிய இடமாகவும் உள்ளது.
7.ஹார்ஸ்லி ஹில்ஸ்
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியில் உள்ள ஹார்ஸ்லி ஹில்ஸ் வளைந்து செல்லும் பாதைகளில் இயற்கையின் மத்தியில் அமைதியான மாலை நேரத்தை துணையுடன் நடந்து சென்று ரசிக்க ஏற்ற இடமாக உள்ளது.
8.கவி
படகு சவாரி, மலையேற்றம், வனவிலங்கு சஃபாரி, இரவு நேரத்தில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் போன்ற இளம் ஜோடிகளுக்கு உற்சாகம் நிறைந்த பயணத்தை கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள கவி கிராமம் வழங்குகிறது.
9.அரக்கு பள்ளத்தாக்கு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைவாழ்விடம். அடர்ந்த காடுகள் பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு, காபி தோட்டங்கள், மூடுபனி நிறைந்த மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சி, போரா குகைகள் மற்றும் பழங்குடியின அருங்காட்சியகம் போன்ற ஜோடிகளை ஏற்ற இடங்களை அள்ளி வழங்குகிறது.
10.அகும்பே
அதிக மழைப்பொழிவு காரணமாக தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே மலைப்பகுதி பசுமைக்கு பெயர் பெற்ற ,மனதை மயக்கும் சூரிய அஸ்தமன காட்சியையும் பிரமிக்க வைக்கும் நீர் வீழ்ச்சியையும் கொண்டுள்ளது.
மேற்கூறிய 10 இடங்களும் புதுமண தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையான அனுபவங்களை வழங்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.