

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால், அதற்கான விசா நடைமுறைகளை நினைத்தாலே ஒருவித சோர்வு வந்துவிடும். முந்தைய காலங்களில் விசா பெறுவதற்காக தூதரக அலுவலகங்களில் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்பதும், கட்டுக்கட்டாக ஆவணங்களை சமர்ப்பிப்பதும் மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. இப்போதெல்லாம் அந்த பழைய கஷ்டங்கள் எதுவுமே கிடையாது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீட்டில் சோபாவில் அமைதியாக அமர்ந்தபடியே ஆன்லைனில் ஈ-விசா (E-visa) பெறும் அட்டகாசமான வசதியை பல நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. இதனால் பேப்பர் வேலைகளைப் பற்றியோ விசா டென்ஷனைப் பற்றியோ கவலைப்படாமல், பயணத் திட்டங்களை வகுப்பதிலும், எந்தெந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என பிளான் பண்ணுவதிலும் நமது முழு கவனத்தையும் செலுத்தலாம். அப்படி இந்தியர்களுக்காகவே சுலபமாக விசா வழங்கும் சில அற்புதமான நாடுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
துருக்கி!
இரண்டு கண்டங்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான நாடு தான் துருக்கி. இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீல மசூதி, ஹேகியா சோபியா மற்றும் கப்படோசியாவில் வானில் மிதக்கும் வண்ணமயமான ஹாட் ஏர் பலூன் பயணம் என அனைத்தையும் ரசிக்க இது ஒரு அற்புதமான இடம். இந்தியர்கள் ஆன்லைன் விசா மூலம் இங்கு முப்பது நாட்கள் வரை எந்த தடையுமின்றி தங்கி ஊர் சுற்றலாம். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், அதேபோல செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் இங்கு செல்வது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும்.
வியட்நாம் மற்றும் கம்போடியா!
விதவிதமான உணவுகள், பழமையான கலாச்சாரம் மற்றும் இயற்கையை நேசிப்பவர்களுக்கு வியட்நாம் ஒரு மாபெரும் சொர்க்கம். ஹா லாங் பே பகுதியில் உள்ள சுண்ணம்பு பாறைத் தீவுகள், ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை முறை பயணிகளை வெகுவாக ஈர்க்கும். இந்தியர்களுக்கு ஒருமுறை மட்டும் நுழையும் ஈ-விசா மூலம் முப்பது நாட்கள் அங்கு தங்கும் அனுமதி ஈஸியாக கிடைக்கிறது.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான காலகட்டமும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையான மாதங்களும் இங்கு செல்ல மிகவும் ஏற்றது. அதேபோல, பழங்கால கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற நாடான கம்போடியாவும் இந்தியர்களுக்கு ஒற்றை நுழைவு ஈ-விசா வழங்குகிறது. உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்டமான அங்கோர் வாட் கோயிலைக் காண நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களுக்குள் செல்வது சிறந்தது.
ஆப்பிரிக்க நாடுகள்!
வனவிலங்குகளை அதன் உண்மையான இயற்கை சூழலில் மிக அருகில் பார்க்க ஆசைப்பட்டால் ஆப்பிரிக்க நாடான கென்யா உங்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும். அங்குள்ள மாசாய் மாரா தேசிய பூங்காவில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற விலங்குகளின் பிரம்மாண்டமான இடப்பெயர்ச்சி, கூட்டமாகத் திரியும் யானைகள் மற்றும் சிங்கங்களை நேரில் பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சாகச நினைவாக மாறும்.
ஜூலை முதல் அக்டோபர் வரை கென்யா செல்வதற்கு அருமையான காலநிலையாகும். அதேபோல ஆப்பிரிக்காவின் மற்றொரு அதிரடி நாடான தான்சானியாவும் இந்திய பயணிகளுக்கு எளிதாக விசா வழங்குகிறது. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோ மலை மற்றும் செரெங்கேட்டி தேசிய பூங்கா போன்ற இயற்கை அதிசயங்களை ரசிக்க ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீங்கள் தாராளமாகப் பயணம் செய்யலாம்.
விசா எடுப்பது ஒரு காலத்தில் மலையை உடைக்கும் கடினமான வேலையாக இருந்தது. ஆனால், தற்போது எல்லாமே உங்கள் விரல் நுனியில் ரொம்பவே சுலபமாக வந்துவிட்டது. இனிமேல் விசா நடைமுறைகளை எண்ணி பயப்பட வேண்டாம். உங்களுக்குப் பிடித்தமான நாடு எது என்பதை மட்டும் முடிவு செய்துவிட்டு, அடுத்த நிமிடமே ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பித்து உங்களின் கனவுப் பயணத்தை உடனடியாகத் தொடங்குங்கள்.