டிசம்பர் மாதத்தின் இதமான குளிர்கால வானிலை, பயணங்கள் செல்வதற்கு மிகவும் ஏற்றது. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சிறிய பயணம் செல்ல நினைப்பவர்களுக்குத் தமிழ்நாட்டில் பல சிறந்த இடங்கள் உள்ளன. குறிப்பாகச் சென்னையிலிருந்து சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குள் சென்றடையக்கூடிய 6 சிறந்த சுற்றுலா தலங்களை இப்போது பார்க்கலாம். இந்த இடங்கள் நிச்சயம் உங்களது நினைவுகளை இனிமையாக்கும்.
மாமல்லபுரம்!
சென்னையிலிருந்து ECR சாலை வழியாகச் சென்றால், சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்தில் மாமல்லபுரத்தை அடையலாம். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புகழ்பெற்ற கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு சிற்பங்கள் மற்றும் மனதை மயக்கும் கடற்கரை ஓய்வு விடுதிகள் இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்களாகும்.
பிரெஞ்சு அழகைக் காட்டும் புதுச்சேரி!
சென்னையில் இருந்து சுற்றுலா செல்வோரின் விருப்பமான இடங்களில் புதுச்சேரிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ECR சாலை வழியாகப் பயணித்தால் சுமார் மூன்று மணி நேரத்தில் இங்கு சென்றுவிடலாம். டிசம்பர் குளிரில் White Town பிரெஞ்சு வீதிகளில் நடப்பது புதுமையான அனுபவத்தைத் தரும். Rock Beach, ஆரோவில் மற்றும் பாரடைஸ் கடற்கரை ஆகியவையும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
பழவேற்காடு மற்றும் வேடந்தாங்கல்!
இயற்கையையும் பறவைகளையும் விரும்புபவர்களுக்குப் பழவேற்காடு ஏரி மற்றும் வேடந்தாங்கல் சிறந்த இடங்கள். சென்னையிலிருந்து வடக்கே சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரப் பயணத்தில் பழவேற்காடு ஏரியை அடையலாம். டிசம்பர் மாதத்தில் இங்கு வலசை வரும் ஃபிளமிங்கோ எனப்படும் பூநாரை பறவைகளைக் காண்பதும், ஏரியில் படகு சவாரி செய்வதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
அதேபோல, GST சாலை வழியாகச் சுமார் இரண்டு மணி நேரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் செல்லலாம். நவம்பர் முதல் பிப்ரவரி வரை பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி தங்கும். எனவே, குடும்பத்துடன் சென்று ரசிக்க இது ஒரு அற்புதமான இடம்.
ஆன்மீகப் பயணத்திற்கு காஞ்சிபுரம் மற்றும் வேலூர்!
ஆயிரம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக இரண்டு மணி நேரத்தில் சென்றடையலாம். கைலாசநாதர், ஏகாம்பரநாதர் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களைத் தரிசிப்பதோடு, பாரம்பரியப் பட்டுப் புடவைகளையும் இங்கு வாங்கலாம்.
சாலை வழியாக இரண்டரை முதல் மூன்று மணி நேரத்தில் வேலூரை அடையலாம். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாண்டமான கருங்கல் கோட்டை, அதைச் சுற்றியுள்ள அகழி மற்றும் உள்ளே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் ஆகியவை காண்போரைக் கவர்ந்திழுக்கும். மேலும், அருகிலுள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோயிலும் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகும்.
பயணத்தை இனிமையாக்கச் சில டிப்ஸ்!
விடுமுறை நாட்களில் ஈசிஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அதிகாலையிலேயே பயணத்தைத் தொடங்குவது நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
பழவேற்காடு மற்றும் வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்களுக்குச் செல்லும்போது தொலைநோக்கி எடுத்துச் செல்வது பறவைகளைத் தெளிவாகக் காண வசதியாக இருக்கும்.
காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்லும்போது அதற்கேற்ற மிதமான ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.
வார இறுதியில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல், உங்களுக்குப் பிடித்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயணத்தைத் தொடங்குங்கள்; மனதுக்கும் உடலுக்கும் அது புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.