
ஆயுத பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை வரப்போகிறது. விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்திருந்தால் இந்த தகவல்கள் உங்களுக்குத்தான்.
ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் குழந்தைகள், பெரியவர்கள் எனக் குடும்பத்தினர் அனைவருடனும் நமது பட்ஜெட்டில் மகிழ்ச்சியாகச் சுற்றிப்பார்க்க தமிழ்நாட்டில் பல அழகான சுற்றுலா இடங்கள் உள்ளன. மலைகள், அருவிகள், கடற்கரைகள், கோயில்கள் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யலாம். இதோ நீங்கள் சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டின் அழகான 7 இடங்கள்.
இயற்கையும் குளிர்ச்சியும் நிறைந்த மலைவாசஸ்தலமான ஊட்டி குடும்பச் சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம்.
இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, தொட்டபெட்டா மலைச்சிகரம், நீலகிரி மலை ரயில், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்கள். இந்த மாதங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன் எச்சரிக்கையாக குளிராடை, குடை ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். மலை ரயிலில் பயணிக்க விரும்பினால் முன்கூட்டியே டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளுமையான ஊட்டியை குழந்தைகள், இளம் தம்பதிகள், இயற்கையை விரும்புபவர்கள் என அனைவரும் ரசிப்பார்கள்.
ஏரியும் அருவிகளும் தரும் அனுபவம் அலாதியானது. இயற்கை அழகுடன் அமைதியாக விடுமுறையை ரசிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்றது. கொடைக்கானல். கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக்ஸ், பிரையன்ட் பூங்கா, சில்வர் கேஸ்கேட் அருவி ஆகியவை இங்கு காணவேண்டிய இடங்களாக உள்ளது. ஏரியில் படகு சவாரி, இயற்கைக் காட்சிகள், குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுப்பது என விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கலாம். ஆனால் மழைக்காலத்தில் அருவிகள், மலைப்பாதைகள் மற்றும் காட்சியிடங் களுக்கான பாதைகள் குறித்து உள்ளூர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம்.
குறைந்த செலவில் குடும்பச் சுற்றுலா செல்ல உகந்த இடம் சேலம் அருகே அமைந்துள்ள அழகான மலைவாசஸ்தலமான ஏற்காடுதான் ஒரே சாய்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் மலைவாசஸ்தலமான இங்கு உள்ள அழகிய ஏரி, லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், பசுமையான காபி தோட்டங்கள், கிளியூர் அருவி ஆகியவைகள் காணவேண்டிய இடங்களாகவும் சாக்லேட் காபி ஆகிவற்றின் விற்பனை வாங்க ஏற்றதாகவும் இருக்கும். ரிச்சான
ஊட்டி, கொடைக்கானலைவிடக் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்பும் குடும்பங்கள் ஏற்காட்டை தாராளமாக பரிசீலிக்கலாம். தங்குமிடம், போக்குவரத்து மற்றும் விடுமுறைக் கூட்டத்தைப் பொறுத்து செலவு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவுடன் குஷியாக பொழுதுபோக்க கடற்கரையும் அறிந்து வியக்க அந்தக்கால வரலாறும் தேவை என்பவர்களுக்கு சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு சிற்பம், கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை, மாமல்லபுரம் கடற்கரை ஆகியவை அனைவரையும் கவரும். குழந்தைகளுக்கு வரலாற்றையும் சிற்பக்கலையையும் அறிமுகப் படுத்துவதுடன், குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலாவுக்கும் ஏற்றது இந்த மாமல்லபுரம் என்பது சிறப்பு.
ஆனால் முன் எச்சரிக்கையாக கடலில் குளிக்கும்போது பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுங்கள். மழை மற்றும் கடல் சீற்றம் இருந்தால் கடற்கரையில் இறங்குவதைத் தவிர்க்கவும்.
ஆன்மிகச் சுற்றுலாவையும் இயற்கைக் காட்சிகளையும் ஒருங்கே விரும்பும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்றது ராமர் வழிபட்டதாக வரலாறு கூறும் ராமேஸ்வரம். காண வேண்டிய இடங்களாக ராமநாதசுவாமி கோயில், பாம்பன் பாலம், அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி , அப்துல் கலாம் நினைவிடம் ஆகியவை கவனம் ஈர்க்கும். கோயில் தரிசனம், கடற்கரைக் காட்சிகள், வரலாற்று இடங்கள் எனப் பல அனுபவங்களை ஒரே பயணத்தில் பெறம் சிறப்பம்சம் கொண்டது ராமேஸ்வரம் பயணம்.
மூன்று கடல்கள் சங்கமிக்கும் அழகு கொண்ட கன்னியாகுமரி குடும்பத்துடன் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. வெளிநாட்டவரும் விரும்பி வந்து செல்லும் இடம். இங்கு கடற்கரை மேல் எழும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக்காட்சிகள் கொள்ள அழகு. இங்குள்ள விவேகானந்தர் பாறை நினைவிடம், திருவள்ளுவர் சிலை, கன்னியாமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் சுனாமி நினைவிடங்கள் காணவேண்டியவைகளாக உள்ளது.
கடல் அழகு, வரலாறு, ஆன்மிகம் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற அனுபவங்கள் கிடைக்கும் சுற்றுலாத் தளமாக இருக்கும் கன்னியாகுமரி என்பதில் சந்தேகமில்லை. விவேகானந்தர் பாறை செல்லும் படகுச் சேவை வானிலை மற்றும் கடல் நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும்.
இயற்கையுடன் இணைய விரும்புபவர்களுக்கான சிறந்த தேர்வு. கொல்லிமலை. இது பசுமையான மலைகள், வளைந்து செல்லும் மலைப்பாதைகள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. சற்றே சிரமம் தரும் பயணம் என்றாலும் இங்குள்ள ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோயில், மாசிலா அருவி மலையக காட்சியிடங்கள், இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகள் நிச்சயமாக நம்மைக் கவரும். வழக்கமான சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, இயற்கையை ரசிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமான இங்கு விளையும் மசாலாப் பொருள்கள், தேன், பழங்கள் ஆகியவற்றுக்கு மவுசு அதிகம்.
குறிப்பாக ஆகாய கங்கை அருவிக்குச் செல்லப் படிக்கட்டுகளில் இறங்க வேண்டியிருக்கும். முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நடப்பதில் சிரமம் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலைக்கு ஏற்ற பயணத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மழைக்காலத்தில் அருவிக்குச் செல்லும் பாதை திறந்திருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் செல்வது நல்லது.
இந்த இடங்களுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய. 5 முக்கியக் குறிப்புகள் இவைகள்:
தங்குமிடத்தை முன்பதிவு செய்வது டென்ஷனைக் குறைக்கும்.ஏனெனில் தொடர் விடுமுறையில் ஹோட்டல்கள் விரைவாக நிரம்பலாம்.
வானிலையைச் சரிபார்த்த பின் கிளம்புவது நல்லது. காரணம் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால் மழை வாய்ப்பு உண்டு.
பயண நேரத்தைத் திட்டமிடுங்கள். அத்துடன் முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடியுங்கள்.
வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன்படி பயண நேரத்தை திட்டமிடுங்கள்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களின் அவசரத் தேவைகளைக் கவனியுங்கள்: மருந்துகள், குடிநீர், சிற்றுண்டி ஆகியவற்றை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள்.
பட்ஜெட்டை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள்: போக்குவரத்து, தங்குமிடம், உணவு, நுழைவுக் கட்டணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கணக்கிடுவதால் இறுதிநேர பட்ஜெட் உயர்வு தவிர்க்கப்படும்.
என்ன எளிமையான பட்ஜெட்டில் குடும்பத்துடன் இந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ ரெடியா நீங்கள்?