
மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நகரங்களுக்கென சில முக்கியமான குணாதிசயங்கள் உள்ளன. அவை யாவை மற்றும் உலகில் மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நகரங்கள் எவை என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நகரத்தின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் விஷயங்கள்;
திறமையான ஆட்சியாளர், நம்பிக்கையான நிர்வாகம். சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற நல்ல பொதுச் சேவைகள், குறைந்த ஊழல், மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கம், பாதுகாப்புணர்வு, வலுவான சமூகங்கள், மக்களுக்கு தம் வாழ்க்கைத் தேர்வுகளை தேர்வு செய்யும் திறன், நல்ல வேலை வாய்ப்புகள், வசதியான வாழ்க்கை தரத்துடன் கூடிய வலுவான பொருளாதாரம், பிறருக்கு கொடுத்து உதவும் கலாச்சாரம், சுத்தமான காற்று, சிறந்த கழிவு மேலாண்மை, பசுமையான இடங்கள், சிறப்பான பொது போக்குவரத்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளை ஆதரிக்கும் உள் கட்டமைப்பு வசதிகள் போன்றவை மகிழ்ச்சியான நகரத்தில் இருக்க வேண்டிய அடிப்படையான குணாதிசயங்கள் ஆகும்.
மகிழ்ச்சியான 7 நகரங்கள்;
1. கோபன்ஹேகன், டென்மார்க்;
மேலே குறிப்பிட்டுள்ள குணாதிசயங்களைக் கொண்டு கோபன்ஹேகன் நகரம் முதலிடத்தில் உள்ளது. வலுவான சமூக உணர்வு. மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கேற்ற நகரத்தின் உள்கட்டமைப்பு, பயனுள்ள நிர்வாகம், சிறந்த கட்டிடக்கலை, கல்வியில் புதுமை, மக்களுக்கு சிறந்த சேவை, உயர்தர வாழ்க்கை வசதிகள் என நகரம் சிறந்து விளங்குகிறது. இங்கே வசிப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள்.
2. ஜூரிச், ஸ்வட்சர்லாந்து;
இந்த நகரம் ஒரு வலுவான பொருளாதாரம், குறைந்த குற்ற விகிதங்கள், சிறப்பாக செயல்படும் பொது போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜூரிச்சின் அழகிய ஏரிக்கரை அமைப்பு மற்றும் சுற்றியுள்ள மலைகள் போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அளிக்கிறது. உயர் சுகாதாரத் தரங்களும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
3. சிங்கப்பூர்;
சிங்கப்பூர் அதன் தூய்மை, பாதுகாப்பு மற்றும் திறமையான பொது சேவைகளுக்காக பாராட்டப் படுகிறது. அதன் தனித்துவமான கலாச்சாரங்கள் மக்களுக்கு உகந்ததாக இருக்கின்றன. வலுவான பொருளாதாரம் மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. நிதிப் பாதுகாப்பிற்கு உதவுகிறது. பசுமையான இடங்களும் சிந்தனை மிக்க நகர்ப்புற திட்டமிடலும் அதன் மக்களுக்கு உயர்தர வாழ்க்கையை உறுதி செய்கிறது.
4. ஆர்ஹஸ், டென்மார்க்;
புன்னகை நகரம் என்று அழைக்கப்படும் ஆர்ஹஸ், டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரமாகும். இளமை, ஆற்றல் மற்றும் கலாச்சார துடிப்புக்காக பெயர் பெற்றது. இது ஒரு பல்கலைக்கழக நகரமாக பன்முகத்தன்மை கொண்ட மக்களை ஈர்க்கிறது. புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கிறது. ஏராளமான கலாச்சார நிகழ்வுகள், மற்றும் திருவிழாக்கள் இங்கே நடைபெறுகின்றன. சிறப்பான சுகாதாரம் மற்றும் சிறந்த கல்விக்கு இந்த நகரம் முன்னுரிமை அளிக்கிறது.
5. ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்;
இந்த நகரம் அதன் வளமான வரலாறு மற்றும் துடிப்பான கலைக்காக கொண்டாடப்படுகிறது. ஃபேஷன், வைரங்கள் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக இந்த நகரம் உள்ளது. இங்கு சிறந்த போக்குவரத்து, நல்ல சுகாதாரம், சிறப்பான கல்வி ஆகியவை மக்களுக்கு வழங்கப்படுவதால் இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
6. சியோல், தென் கொரியா;
இது ஒரு துடிப்பான பெருநகரமாகும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் இரண்டும் கலந்த கலவையாக உள்கட்டமைப்பு வசதிகள் விளங்குகின்றன. திறமையான பொதுப் போக்குவரத்து, அமைப்பு மற்றும் சிறந்த கல்வி இங்கு வழங்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம் கணிசமாக உயர்ந்திருக்கிறது
7. ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்;
அற்புதமான தீவுக் கூட்டங்கள் இங்கு உள்ளன. சிறந்த பொது சேவைகள் மற்றும் வலுவான சமூக நல அமைப்புடன் இந்த நகரம் உயர்தர வாழ்க்கை தரத்தை வழங்குகிறது. பசுமையான அழகான இடங்கள் இங்கு இருப்பதால் மக்களின் ஆரோக்கியம் நன்றாக மேம்பட்டு இருக்கிறது. வசதியும் வாய்ப்பும் இருந்தால் இந்த ஏழு நகரங்களையும் ஒரு எட்டுப் போய் பார்த்துவிட்டு வருவோமா?