
ஆதி கைலாஷ் சிறிய கைலாயம் (சோட்டா கைலாஷ்) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 5,945 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்துக்கள், சமணம், பௌத்தம் மற்றும் பான் போவை சேர்ந்த மக்களுக்கு மிகவும் புனிதமாக இடமாக கருதப்படும் இடம் இது. ஆதி கைலாயம் கைலாய மலையின் ஒரு பிம்பமாக, இந்து மதத்தின் ஒரு புனிதமான தலமாகவும் கருதப்படுகிறது.
இது திபெத்தில் உள்ள கைலாய மலையின் பிரதிபலிப்பு. ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ள இந்த ஆதி கைலாஷ் பயணம் மிகவும் மன நிறைவை தரும் வகையில் உள்ளது. இது 'பஞ்ச கைலாஷ்'களில் (ஐந்து கைலாசங்கள்) இரண்டாவது இடமாக கருதப்படுகிறது. இமயமலை முழுவதும் கைலாஷ் என்ற பெயரைக் கொண்ட ஐந்து சிகரங்கள் உள்ளன. கைலாஷ் மலை முதலிடத்திலும், ஆதி கைலாஷ் இரண்டாவது இடத்திலும், ஷிகர் கைலாஷ்(ஸ்ரீகண்ட் மகாதேவ் கைலாஷ்) மூன்றாவது இடத்திலும், கின்னௌர் கைலாஷ் நான்காவது இடத்திலும், மணிமகேஷ் கைலாஷ் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஆதி கைலாஷ் புராணம் மற்றும் இதிகாசமுடன் தொடர்புடையது. புராணங்களின்படி, கைலாஷ் மானசரோவரில் இருந்து தோன்றிய பார்வதியுடன் சிவபெருமானின் திருமணத்திற்கு ஆதி கைலாயம் முக்கிய இடமாக இருந்தது என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் புனிதமான பகுதியில் சிவபெருமான் தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இங்கு சிவன் மற்றும் பார்வதி தேவியுடன் வீற்றிருந்து அருள் புரிவதாக கூறப்படுகிறது.
பஞ்ச கைலாஷ்:
பஞ்ச கைலாஷ் (ஐந்து கைலாயங்கள்) என்பது இமயமலையில் தனித்தனி இடங்களில் அமைந்துள்ள ஐந்து புனித மலை சிகரங்களின் பெயராகும். ஆதி கைலாயம் என்பது பஞ்ச கைலாஷின் ஒரு பகுதியாகும். மற்ற நான்கு சிகரங்கள்
1) கைலாஷ் மானசரோவர்
2) ஸ்ரீகண்ட் மகாதேவ் கைலாஷ்
3) கின்னௌர் கைலாஷ்
4) மணிமகேஷ் கைலாஷ்
ஆதி கைலாயத்தில்தான் சிவபெருமான் தனது தாண்டவத்தை நிகழ்த்தி, தனது தெய்வீக வடிவத்தை அஷ்டவக்ர முனிவருக்கு வெளிப்படுத்திய இடம் என்று கூறப்படுகிறது. ஆதி கைலாயத்தைக் காண ஆரோக்கியமான உடல் நிலை மிகவும் அவசியம். ஏனெனில் அவற்றின் நிலப்பரப்பு மிகவும் சவாலானதாக இருக்கிறது.
ஆதி கைலாஷ்:
ஆதி கைலாஷ் சின் லா கணவாய்க்கு அருகிலும், பிரம்ம பர்வதத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. ஆதி கைலாய யாத்திரையின் முக்கியமான சிறப்பம்சம் புனிதமான இந்த ஆதி கைலாய மலைத்தொடரை சுற்றி வருவதை(பரிக்கிரமம்) மக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள். இந்த புனித யாத்திரை மே மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தின் நடுப்பதி வரை நீடிக்கிறது.
கௌரி குண்ட்(ஜோலிங்காங் ஏரி):
கௌரி குண்ட் என்று அழைக்கப்படும் ஏரி பிரம்மாண்டமான இந்த சிகரத்தின் அடிவாரத்தில் 5608 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் கரையோரத்திற்கு அருகில் பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் சன்னதிகள் உள்ளன. இந்த கௌரி குண்ட் எனப்படும் ஏரி கைலாஷ் யாத்திரை கொள்பவர்களுக்கு ஒரு முக்கியமான இடமாகும்.
ஜலந்தரனை எதிர்த்து போராடிய பின்பு பார்வதி தேவி தனது தெய்வீக பலத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த ஏரியில் குளித்து அவருடைய சக்தியை மீண்டும் மீட்டெடுத்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள புனிதமான நீரில் நீராடுவதற்காக தேவலோகத்தில் இருந்து முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும் அடிக்கடி இறங்கி வருவதாக நம்பப்படுகிறது. இந்த ஏரியின் நீர் குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் மக்கள் இதில் புனித நீராடுகிறார்கள்.
பார்வதி சரோவர்:
ஆதி கைலாஷ் சிகரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 4497 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்குள்ள ஏரியில் குளிப்பதால் பாவங்கள் நீங்கி வேண்டிய விருப்பங்கள் நிறைவேறுவதாகவும், நல்வாழ்வு பெறலாம் என்று நம்பப்படுகிறது. ஏரிக்கரையை ஒட்டி மிகவும் பழமையான கோவில் ஒன்றுள்ளது. இதில் சிவன் மற்றும் பார்வதிக்கு என சன்னதிகள் உள்ளது.
ஓம் பர்வத்:
ஓம் பர்வத் என்பது ஆதி கைலாயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு புனிதமான மலையாகும். இது அதன் தனித்துவமான வடிவத்திற்கு பெயர் பெற்றது. இந்த மலையின் அமைப்பு ஓம் என்ற பிரணவத்தை ஒத்திருக்கிறது. ஓம் பர்வத்தின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5590 மீட்டர் உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. ஆதி கைலாயமும் ஓம் பர்வதமும் ஒன்றல்ல.
உத்தரகண்ட் மாநிலத்தின் தார்ச்சுலாவில் அமைந்துள்ளது இந்த ஓம் பர்வத் மலை. ஓம் பர்வதம் சிவனுடைய சக்தி மற்றும் கருணையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.
இந்தியாவையும் திபெத்தையும் இணைக்கும் லிபுலேக் கணவாய்க்கு அருகில் உள்ள நபிதாங் முகாமிலிருந்து கைலாய மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் வழியில் ஓம் பர்வதம் அமைந்துள்ளது.
வருகை தர சிறந்த நேரம்:
மே மாதம் நடுப்பகுதியில் இருந்து ஜூன் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரையிலும் இங்கு வருவதற்கு ஏற்ற காலமாகும். புதிதாக கட்டப்பட்ட குஞ்சி- லம்பியா துரா பாஸ் சாலை(GLDPR) இந்த யாத்திரையின் தூரத்தை கணிசமான அளவு குறைத்துள்ளது. ஆதி கைலாஷிற்கு ஹெலிகாப்டர் சேவை வசதிகளும் உள்ளன. பித்தோராகர் ஹெலிபேடில் இருந்து புறப்பட்டு, குஞ்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஜோலிங்காங் செல்லலாம். இது விரைவான மற்றும் வசதியான பயணமாக உள்ளது.