உளவியலில் 'கனவு' என்கிற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரவேண்டியவர், சிக்மெண்ட் ஃப்ராய்டு!
“கனவுகளின் விளக்கங்கள்“ என்று இவர் சொன்னது தான் இன்று வரை உலகின் உளவியலின் தத்துவம்.
கனவுகள் எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கும் என்பது ஃப்ராய்டின் கருத்தாகும்.
“நாம் காணும் கனவுகள் எல்லாமே நம்மால் முடியாதவற்றைக் கற்பனையாக நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு குறுக்கு வழி தான்“ என்பது ஃப்ராய்டின் கண்டுபிடிப்பு.
உலகத்தின் அழகான பொய்... 'கனவு'! ஆனால், 'கனவு நகரம்' பொருத்தமட்டில் முற்றிலும் நிஜம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
உலகம் அமெரிக்காவை கனவு காண்பதைப் போல, இந்தியாவில் மும்பையை கனவு காண்கிறார்கள், தெரியுமா?
இந்தியாவின் மாயநகரி அல்லது கனவுகளின் நகரம் என்று அழைக்கப்படும் மும்பை, இந்தியாவில் மட்டுமல்ல, எல்லைகளுக்கு அப்பாலும் இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களிலும், கண்களிலும் கனவு நகரமாக தனித்துவம் பெற்று விளங்குகிறது.
மும்பை 'கனவு நகரம்' என்று அழைக்கப்படுவது ஏன்?
இந்தியாவின் முக்கிய கார்ப்ரேட் நிறுவனங்களின் தலைமையகங்களாக பம்பாய் என்று அழைக்கப்பட்டு வந்த இன்றைய மும்பை சிறந்து ஓங்கி வருகிறது.
பாலிவுட் தலைநகரம், இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்துறையின் தாயகமாகவும், ஆர்வமுள்ள கலைஞர்களை ஈர்க்கும் நகரமாகவும் மும்பை இருக்கிறது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்பு, மரைன் டிரைவ் போன்ற கலை மற்றும் பொழுது போக்கு மையம், இன்னும் உள்ள சில சுவாரஸிய அம்சங்களையும் கண்டு மகிழ்வோமா?
1. சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் வரலாற்று சிறப்பு மிக்க ரயில்வே முனையம் ஆகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இந்த முனையம் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஃபிரெடெரிக் வில்லியம் ஸ்டீவன் ஸால் ஆக்செல் ஹெய்க் என்பவரால் இத்தாலிக் கோதிக் பாணியில் அற்புதமானதாக வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானம் 1878 ஆம் ஆண்டு பழைய போரி பந்தர் ரயில் நிலையத்திற்கு தெற்கே, ஒரு இடத்தில் தொடங்கி, 1887 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இது விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
2. பாந்த்ரா – வோர்லி சீ லிங்க்
இந்தியாவின் மிக நீண்ட பாலமான பாந்த்ரா – வோர்லி சீ லிங்க் ரூ.1600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ராஜீவ் காந்தி சீ லிங்க் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பாலம் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளுக்கு இடையே கடல் நீருக்கு மேலே 5600 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.
3. மரைன் டிரைவ்
மரைன் டிரைவ் என்பது மும்பையில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சாலையில் 3 கி.மீ. நீளமுள்ள ஒரு நடை பாதை ஆகும். இந்த சாலை மற்றும் நடைபாதை பல்லோன்ஜி மிஸ்திரியால் கட்டப்பட்டது. இது ஒரு இயற்கை விரிகுடாவின் கரையோரத்தில் “C“ வடிவ ஆறு வழி கான்கிரிட் சாலையாகும். குயின்ஸ் நெக்லஸ் என்று அழைக்கப்படும் மரைன் டிரைவ் மும்பையில் எளிதில் அடையாளங் காணக்கூடியது. தெற்கு மும்பையின் அரபிக்கடலின் ஓரமாக அமைந்துள்ள இந்த வளைவு வடிவ விரிகுடா பவுல்வர்டு, அழகான சூரிய அஸ்தமனத்தைக் காணவும், நிதானமான நடைபயணம் மேற்கொள்ளவும் சிறந்த இடமாகும்.
4. இந்தியாவின் நுழைவுவாயில்
இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மும்பை மாநகரில் கட்டப்பட்ட ஒரு வளைவு நினைவுச் சின்னம் ஆகும். இந்தியாவிற்கு வருகை தந்த முதல் பிரிட்டிஷ் மன்னரான ஜார்ஜ் V, டிசம்பர் 1911-ல் வெலிங்டன் நீரூற்றுக்கு அருகிலுள்ள ஸ்ட்ராண்ட் சாலையில் தரையிறங்கியதை நினைவு கூறும் வகையில் இது அமைக்கப்பட்டது.
5. தொங்கும் தோட்டம்
மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழைமையானதும், பாதுகாக்கப்பட்டு வருவதும் தொங்கும் தோட்டமாகும். இந்த தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை படம் பிடிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகைப்பட ஆர்வலரும் விரும்புவார்கள்.
6. கொலாபா காஸ்வே
இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகம் ஆனது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல பிரபல பிராண்டுகளின் ஷோரூம்களும் உள்ளன.
7. சோர் பஜார்
தெற்கு மும்பையின் பேண்டி பஜார் அருகே அமைந்துள்ளது சோர் பஜார். சோர் என்றால் இந்தி மொழியில் திருடன் என்று அர்த்தம். இங்கு திருட்டுப் பொருட்கள் பிரதானமாக விற்கப்படுகின்றன . செகண்ட் ஹேண்ட் பொருட்களும் விற்கப்படுகின்றன . மும்பையில் உங்களுடைய பொருட்கள் காணாமல் போனால் அதை சோர் பஜாரில் நீங்கள் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் உண்டு.