
பூமிக்கு மேல் விண்வெளியில் சுற்றுகின்ற சாட்டிலைட்டுகளைப் பார்த்து வியந்து போயிருந்த காலம் போய், இப்போது பயப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆம், ஏராளமான சாட்டிலைட்டுகள் (துணைக்கோள்கள்) கீழ் சுற்றுப்பாதை எனப்படும் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO – LOW EARTH ORBIT) சுற்றிக் கொண்டிருக்கின்றன.
1957ம் ஆண்டு முதன் முதலாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் என்ற சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டது. அதிலிருந்து வருடா வருடம் சுமார் 50 முதல் 100 துணைக் கோள்கள் வரை விண்ணில் ஏவப்பட்டுக் கொண்டே இருந்தன – 2010ம் ஆண்டு வரை. அதற்குப் பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.
இதன் விளைவு என்ன? ஒவ்வொரு 34 மணி நேரத்திற்கும் ஒரு சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டு, சுமார் 2800 சாட்டிலைட்டுகள் விண்ணில் இப்போது சுற்றிக் கொண்டே இருக்கின்றன!
2025 மே மாத நிலவரப்படி மொத்தமாக 11,700 விண்கலங்கள் விண்ணில் சுழன்று கொண்டே இருக்கின்றன. லோ எர்த் ஆர்பிட் – LEOவில் அதாவது பூமிக்கு 1200 மைல் உயரத்திற்குக் கீழே இவை சுற்றி வருகின்றன என்று ஹார்வர்ட் & ஸ்மித்ஸோனியன் சென்டர் ஃபார் அஸ்ட்ரோ பிஸிக்ஸைச் சேர்ந்த ஜோனாதன் மக்டவல் கூறுகிறார். என்றாலும் விண்ணில் ஏவப்பட்டு இயங்காமல் இருப்பவற்றையும் சேர்த்தால் சுமார் 14,900 சாட்டிலைட்டுகள் விண்ணில் இருக்கின்றன என்று யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுடர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
இது ஒரு பெரும் பிரச்னையை உருவாக்கி இருக்கிறது என்று ஆரான் போலி என்ற விண்ணியல் விஞ்ஞானி கூறுகிறார். இவர் யுனிவர்ஸிடி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணியாற்றுபவர்.
இதன் காரணம் என்ன? தனிப்பட்ட கம்பெனிகளான ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார் லிங்க் போன்றவை தான் காரணம் என்பது இவரது கருத்து. (ஸ்டார்லிங்க் என்பது சாட்டிலைட் இண்டர்நெட் சேவையைத் தரும் குழு) மே, 2025 நிலவரப்படி ஸ்டார்லிங்கின் 7400 சாட்டிலைட்டுகள் விண்ணில் சுற்றி வருகின்றன.
சரி எவ்வளவு சாட்டிலைட்டுகளை விண்வெளி தாங்கும்? இந்தக் கேள்விக்கு பதிலாக ஒரு லட்சம் என்ற பதில் கிடைக்கிறது.
இந்த எண்ணிக்கைக்குக் கேரியிங் கபாசிடி CARRYING CAPACITY என்று பெயர். இதற்கு அப்புறம் எந்த ஒரு சாட்டிலைட் செயலிழந்து விண்ணிலிருந்து பூமியில் விழுகிறதோ அதற்குப் பதிலாக ஏவப்படும் ஒன்றைத் தான் விண்வெளி தாங்கும். இந்த ஒரு லட்சம் என்ற கேரியிங் கபாசிடி 2050ல் அடையப்படும் என்கின்றனர் அறிஞர்கள்.
இதனால் பூமி வாழ் மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
விண்வெளியில் ஸ்பேஸ் ஜங்க் எனப்படும் விண்வெளிக் குப்பை அதிகரித்துக் கொண்டே போகும். இந்தக் குப்பை கலங்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இன்னும் மிக அதிகமான குப்பைத் துகள்கள் உருவாகும். அது விண்வெளிப் பயணத்தையே ஆபத்துக்குள்ளாக்கி விடும். இதை ‘கெஸ்லர் சிண்ட்ரோம்’ (KESSLER SYNDROME) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். அது மட்டுமின்றி. சாட்டிலைட்டுகள் ஏவப்படும் போது உருவாகும் க்ரீன்ஹவுஸ் வாயுக்கள் வேறு சுற்றுப்புறச் சூழலில் ஒரு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
ஒரு விமானம் புறப்படும் போது அது வெளிவிடும் கார்பன் மாசை விட ஒரு சாட்டிலைட் பறக்க ஆரம்பிக்கும் தருணத்தில் அது பத்து மடங்கு அதிகமாக கார்பனை வெளி விடுகிறது. ஆக எல்லா விஷயங்களும் இப்போது தெளிவாகத் தெரிகின்றன!
இந்த அபாயத்தை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்? அது தான் மிகப் பெரும் கேள்வியாக இப்போது நம் முன் இருக்கிறது!