
பயண அனுபவங்கள் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றன. பயணம் என்பது ஆடம்பரமான பொருட்கள் தரும் மகிழ்ச்சியைவிட பயணஅனுபவங்கள் நீடித்த மகிழ்ச்சியை தரும் என்பதை உணர வைக்கிறது. பயணங்கள் செய்வது உலகைப் பற்றியும், நம்மை பற்றியும் புரிந்துகொள்ளவும், விசாலமான பார்வை பெறவும் உதவுகிறது. பொறுமை மற்றும் பணிவு போன்ற நற்பண்புகளை வளர்க்க உதவுகிறது.
1) சகிப்புத்தன்மையை வளர்கிறது:
பயணம் செய்யும்போது பலதரப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். பலவிதமான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறவும் கற்றுத் தருகிறது. பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மீது சகிப்புத்தன்மையுடன் இருப்பது எப்படி என்பதையும், மக்களின் மதங்களை மதித்து போற்றுவது எப்படி என்பதையும் கற்றுத்தருகிறது.
2) தன்னம்பிக்கையை வளர்க்கிறது:
தனிமையில் பயணம் செய்வது தன்னம்பிக்கையை வளர்க்கும். பயணத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் மிக முக்கியமான பாடங்களில் ஒன்று நாம் நினைத்ததை விட, அதிக திறமையானவர் தான் நாம் என்பதை உணரவைக்கிறது. பயணம் நமக்கு தன்னம்பிக்கை, சுதந்திரம் ஆகியவற்றைக் கற்றுத் தருகிறது. இது சுயவிழிப்புணர்வையும், பிரச்னைகளை தீர்க்கும் திறனையும், கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
3) இயற்கையை நேசிக்க சொல்லித்தருகிறது:
இயற்கை மிகவும் அழகானது. பயணங்களின் மூலம் இயற்கையை நேசிப்பதை கற்றுக்கொள்கிறோம். பிரம்மாண்டமான உலகில் நம் கால் தடம் எவ்வளவு சிறியது என்பதை உணரமுடிகிறது. பயணம் பணிவின் மதிப்பையும், தாராள மனப்பான்மையின் செயல்களையும் ஊக்குவிக்கிறது. நட்பையும், நன்றியையும் வெளிப்படுத்துகிறது.
4) பாராட்ட கற்றுத் தருகிறது:
பயணம் செய்வது நம்மை சிறிய விஷயங்களையும் பாராட்ட கற்றுத் தருகிறது. அன்றாட வாழ்வில் பரபரப்பாக இயங்கும் நாம் பயணத்தின் பொழுது சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, புதுவிதமான உணவுகளை ருசிப்பது, நட்பை போற்றுவது, சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பது போன்ற சாதாரண விஷயங்களில் கவனம் செலுத்தி அதன் அழகையும், பாராட்டும் குணத்தையும் இந்தப் பயணங்கள்தான் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. பயணத்தின் மூலம் புதிய நண்பர்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது.
5) பொறுமையின் அவசியத்தை உணர்த்துகிறது:
ரயில் நிலையத்திலோ, பேருந்துக்காக காத்திருக்கும் பொழுதோ பொறுமையின் அவசியத்தை கற்றுத்தருகிறது. பயணத்தின்போது பிற மொழியில் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டாலும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டாலும், பயணத்தில் சிறிய ஏமாற்றங்களை சந்திக்க நேரிட்டாலும் பயணத்தின் முடிவில் கிட்டத்தட்ட எதையும் சமாளிக்க கூடிய தைரியத்தையும், திறமையையும் பெற்றுத் தருகிறது.
6) புதிய விஷயங்களை ஏற்கும் மனப்பான்மையை அதிகரிக்கிறது:
வெவ்வேறு கலாச்சாரங்கள், உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை சந்திக்கும் பொழுது புதிய விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வளரும். இது சிறந்த மனப்பக்குவத்தைக் கொடுக்கும். பயணம் என்பது மானுடவியலின் சிறந்த ஆசிரியர். அது சமூகத்தைப் புரிந்துகொள்ளவும், மக்களின் செயல் பாடுகளை அறிந்து கொள்ளவும், தவறான புரிதலை ரத்து செய்யவும் உதவுகிறது.
7) புதிய பார்வையைத் தருகிறது:
பயணங்களை மேற்கொள்வது ஒருவரின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க உதவுகிறது. வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வைகளைத் தருகிறது. பயணம் செய்வது நிறைய பாடங்களை நமக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கிறது.
நாம் அதிகமாக பயணம் செய்யும்பொழுது இந்த உலகத்தைப் பற்றிய அதிக வெளிப்பாடு நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம் பார்வை மாறுகிறது. நிறைய புதிய விஷயங்களைக் காண்பதும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்வதன் மூலமும் நம்மை நாமே அறிந்துகொள்ள உதவுகிறது.