போக்குவரத்து நெரிசல் இல்லாத சொர்க்கம்: ஜருகு மலைக்கு ஓர் பயணம்!

Jarugumalai
A trip to Jarugumalai
Published on

மூச்சு விடக்கூட நேரமின்றி எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் சூழல்தான் தற்போது அனைவருக்கும். மனதுக்கு அமைதிதரும், கண்களுக்கு இதம்தரும் பசுமையான இடம் கிடைத்தால் போய் ரிலாக்ஸ் செய்யலாம். ஆனால் அதற்கு தகுந்த இடம் எது என்று தேடுகிறீர்களா? யோசிக்காம சேலத்துக்கு வாங்க. சேலம் சுற்றுலாவுக்கு ஏற்ற நகரம் என்று அனைவருக்கும் தெரியும். சேலம் நடுவில் அமைந்து இருக்கும்  இந்த அழகான ஜருகு  மலைக்கு வாங்க. நீங்க தேடுற அமைதியும் உற்சாகமும் நிச்சயம் கிடைக்கும்.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு இயற்கையாகவே பசுமை தவழும் கிராமங் களுடன் கண்டு மகிழ ஏழைகளின் ஊட்டி ஏற்காடு முதல் பல சுற்றுலா இடங்கள் சேலத்தில் உள்ளதால் தமிழகத்தின் சிறப்பு மிக்க மாநகராட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஆனால் இங்கு  இன்னும் அறியப்படாத பல அழகிய இடங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான்  சேலத்தின் தென்பகுதியில்  குரால் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களை கொண்ட ஜருகு மலை. சேலத்தில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் சேலம் நடுவில் அமைந்துள்ளது இந்த ஜருகுமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார்  3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த  மலையில் மேலூர், கீழுர், ஓட்டப்பள்ளி, எனும் மலைகிராமங்களும் அதில் சுமார்  500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.

அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த மலைக்கு 15 நிமிடங்களில் செல்லலாம். ஆனால் சுமார் 20 அல்லது 25 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலை சற்று செங்குத்தாகவும்  இருப்பதால் வெகு கவனமாக வாகனத்தை இயக்குவது நல்லது. சுதந்திரம் அடைந்தாலும் வசதிகளைப் பெறாத மலைக் கிராமமாக இருந்த ஜருகு மலைக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்தான் சாலை வசதி போடப்பட்டுள்ளது. சாலை வசதி வந்ததும் நிறைய சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
படகு முதல் கப்பல் வரை: நீர்வழிப் போக்குவரத்து வாகனங்களின் பட்டியல்!
Jarugumalai

மலைக்கு வந்தவுடன் நம்ம கண்களில்படுவது அழகான பெரிய கிணறுதான். நகரங்களில் காண முடியாத ஊர் கிணறுகளை இங்கு அதிகமாக பார்த்து ரசிக்கலாம். கோடையிலும் வற்றாத கிணறுகள் இங்குள்ள மக்களின் பாசனத்துக்கு  உதவுகிறது. அந்தப் பெரிய கிணறின் அருகிலிருக்கும் நீர் சேமிக்கும் ஒரே கல்லினால் செய்யபட்ட தொட்டி ஒன்று கவனத்தைக் கவர்கிறது. கல்வெட்டுகள் போன்று சில எழுத்துக்களை அதில் காணலாம்.  அந்தக் கிணறுக்கு சற்றுத்தொலைவில் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது.

மலையின் இறுதியில் அரசின் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் ஆடு மாடு மேய்த்தல், சாமை, திணை, அவரை, கொள்ளு   விளைவித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வாழ்வாதாரம் பெறுகின்றனர். இயற்கையின் மடியில் எவ்வித நஞ்சும் இன்றி விளையும் பயிர்களை தங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு சேலம் எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் இங்கு செல்லும் வழியெங்கும் பலாப்பழ மரங்களை காணமுடிகிறது. சீசனின் போது நீங்கள் அங்கு சென்றால் ருசியான பழங்கள் கிடைக்கும்.

இங்குள்ள மக்கள் எவ்வித நாகரீகங்களுக்கும் உட்படாமல் இயற்கையின் மடியில் சுவாசித்து அன்பு நேசத்துடன் ஒற்றுமையுடன் இருப்பதைக் காணமுடிகிறது. நகர வாழ்க்கையில் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு சற்று பொறாமையும் வருகிறது. முக்கியமாக இங்கு சிக்னல் வசதி இல்லாததால்  செல்போன் பயன்படுத்தும் வசதி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பயணம் ஒரு புதிய அனுபவம்: உள்நாடு மற்றும் வெளிநாடு!
Jarugumalai

பசுமையான மலைப்பாதையில் பயணித்து மலை உச்சியை அடைந்தால் அங்கு உள்ள வியூ பாயிண்ட்டுகள் நம் மனதை கொள்ளை கொள்ளும் என்பது உறுதி. அதிலும் சூரியன் மறையும் வேளை என்றால் சிறப்பு. அங்கிருந்து சேலம் மாநகரின் அழகிய முழுத் தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.

சேலம் வரும்போது மறக்காமல் ஜருகு மலைக்கு சென்று ரம்யமான சூழலில் இயற்கையை அனுபவித்து புத்துணர்வுடன் செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com