

நீரில் பயணம் செய்ய பலவகையான கலங்கள் பயன்படுகின்றன. அவை அவற்றின் அளவு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து பெயர்களும் மாறுபடும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மக்களையோ, பொருட்களையோ நீர் வழியாக எடுத்துச்செல்ல பயன்படும் வாகனம். இயற்கையான சூழலில், நீரின் சலசலப்பில் பயணம் செய்வது என்பது ஒரு சுகமான அனுபவம்தான். நம்முடைய முன்னோர்கள் பயணம் செய்யவும், வாணிபம் செய்யவும் கப்பல், படகு போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி உள்ளனர்.
படகு:
படகு என்பது கப்பலை விட சிறிய போக்குவரத்து வாகனமாகும். இது மனித சக்தியால் துடுப்பு கொண்டு இயக்கப்படுவது மற்றும் இயந்திரம் கொண்டு இயக்கப்படுவது என இரண்டு வகைகள் உள்ளன. சுற்றுலா தலங்களில் கால்களால் மிதித்து இயக்கப்படும் வகையிலும் படகுகள் உள்ளன.
பரிசல்:
அதிக ஆழமில்லாத நீரில் செல்லும் வட்ட வடிவ படகு போன்ற கலம் இது. மூங்கிலால் செய்யப்பட்டு எருமைத் தோலால் போர்த்தப்பட்டு இருக்கும். பரிசல்காரர் நீண்ட கம்பை வைத்து உந்தி நகர்த்த முன்னேறிச் செல்லும். ஆறுகளிலும், அமைதியாய் உள்ள நீர் நிலைகளிலும் பரிசல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
வள்ளம்:
நீரில் பயணிக்கவும், மீன் பிடிக்கவும் பயன்படும். பாய்மரப் படகு, கப்பல் போன்றவற்றுடன் இதனை ஒப்பிடும்பொழுது மிகவும் சிறியது. இப்படகுகள் மூங்கிலால் வேயப்பட்டு இருக்கும். படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது.
தோணி, ஓடம்:
சிறிய நீர்நிலைகளைக் கடந்து செல்ல பயன்படுத்தப்படும் சிறிய படகுகள்.
தெப்பம்:
பல மரக்கட்டைகளைக் கட்டி இணைத்து உருவாக்கப்படும் ஒரு தளம். இவை பண்டிகைகள் மற்றும் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வங்கம்:
பாய் மரக்கப்பலை உணர்த்தும் சொல் இது. இவை கடல் நீரைப் பிளந்து கொண்டு வேகமாகச் செல்லும். வெள்ளை துணியாலான பாய் அதில் கட்டப்பட்டிருக்கும். வாணிபம் செய்யும் பொழுது அரிய பொருட்களை வங்கத்தில் வைத்து, கொண்டு வருவார்களாம். இதை இயக்குபவர்களை 'மீகாமன்' என்பார்கள்.
பாய்மரக் கப்பல்:
பாய்மரக் கப்பல் என்பது காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி, உயரமான மரத்தூண்களில் கட்டப்பட்ட சிறப்புத் துணிகளான பாய்களைக் கொண்டு செல்லும் ஒருவகை மரக்கப்பலாகும். இது காற்றின் உந்துதலை மட்டுமே பயன்படுத்தி, இலக்கை நோக்கி பயணிக்கிறது.
கப்பல்:
கடலில் செல்லும் பெரிய ஊர்தி இது. பல அடுக்குகளுடன் வீடு போன்ற அமைப்பில் காணப்படும். இவற்றில் அவசரகாலத் தேவைகளுக்காக உயிர் காக்கும் படகுகள், திருப்புப் படகுகள், இழுவைப் படகுகள் போன்றவை இருக்கும். பெரிய அளவிலான, நீண்ட தூரப்பயணம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படும் பெரிய கலம்.
நீர்மூழ்கிக் கப்பல்:
நீரில் மூழ்கிச் செல்லும் திறன் கொண்டது. மனிதர்களை ஏற்றிச்செல்ல அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
நீர்வீழ்ச்சி வாகனங்கள் (Amphibious Vehicles):
நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் செல்லக்கூடியவை. இவை சக்கரங்கள் அல்லது தடங்களைப் பயன்படுத்தி நிலத்திலும், நீர்ப்புகா ஹல்கள் மூலம் நீரிலும் பயணிக்கும். இவை பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயன் படுத்தப்படுகின்றன.