மணல் மேடுகளுக்கு அடியில் மீட்கப்பட்ட பழமை: தலகாடு கீர்த்தி நாராயணா!

Thalagadu Keerthi Narayana!
Thalagadu Keerthi Narayana!
Published on

மீபத்தில் மைசூரு செல்லும்பொழுது தலகாடு கீர்த்தி நாராயணா பெருமாளை தரிசனம் செய்ய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. வேறு எந்த வைணவ கோவிலிலும் காணமுடியாத பெறமுடியாத அதிசய சங்கதி பற்றி முடிவில் காண்போம்.

மைசூரிலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் மற்றும் பெங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலகாடு.

காவேரி ஆற்றின் கரையை ஓட்டியுள்ள மணல்மேடுகள் சூழ்ந்த இந்த ஊரில் பல புராதன கோவில்கள் புதைந்துபோய் உள்ளன. சரித்திர புகழ்பெற்ற பல மன்னர்கள் பல்வேறு காலகட்டகங்களில் இந்த அரியவகை கோவில்கள் உருவாக காரணகர்த்தாக்களாக திகழ்ந்துள்ளனர்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (Archaeological Survey of India) (ASI) மகத்தான இடைவிடா முயற்சிகள், பணிகளின் விளைவாக இந்த புகழ்பெற்ற கீர்த்தி நாராயணா கோவில் மணல் (திட்டுக்கள்) மேட்டுக்களின் அடியில் புதைந்து இருந்த நிலையில் தோண்டி எடுத்து மீட்கப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த பாகங்கள் புதுப்பிக்கப்பட்டும், புதிய கற்களால் சில இடங்களில் மாற்றி அமைத்தும் இப்பொழுது புதுபொலிவுடன் காட்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு போகும் வழியில் உடன் காவேரி நீர் ஓடுவதையும், பச்சை பசேல் என்ற வயல்வெளிகளும் நமது ரம்மியமான பயணத்திற்கு கம்பெனி கொடுகின்றன.

கோவில் அருகிலும் காவேரி ஓடும் இடத்தின் அருகே உள்ள மணல் பாங்கான பூமியில் நடந்துசெல்வதே மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

இந்த இடம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இருந்து வருவதாகவும், பல பேரரசர்கள் ஆண்டு வந்ததாகவும் சரித்திர கூறுகள் தெரியப்படுத்துகின்றன. பல இயற்கை மாற்றங்கள், சீற்றங்கள் காரணமாக பல கோவில்கள் புதையுண்டு போய்விட்டன.

இதையும் படியுங்கள்:
மம்மூத் குகைகள்: மனித சரித்திரமும் இயற்கையின் அற்புதமும்!
Thalagadu Keerthi Narayana!

கீர்த்தி நாரயாணா கோவில் புகழ்பெற்ற பஞ்ச நாராயணா கோவில்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஸ்ரீ ராமானுஜர் அறிவுறுத்தலின் பேரில் இந்த கீர்த்தி நாராயணா கோவில் சுமார் 10 ஆம் நூற்றாண்டில் கட்ட துவங்கப்பட்டதாம்.

பிறகு 12 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஹாய்சலா வம்ச பேரரசர் விஷ்ணுவர்த்தனா, சோழர்களை வென்றதை கொண்டாட இந்த கோவிலை புதுபித்தராம் ஹாய்சலா பாணி முறையில். இன்றும் அதே பாணியில் இந்த கோவில் அசத்துகின்றது.

அந்த காலத்திய கனமான உயரம் மிக்க கற்படிகளில் ஏறி கோவில் உள்ளே நுழைந்ததும் ஆஜான பாகுவாக உயரமாக (சுமார் 9.அடி இருக்கும்) நிற்கும் ஸ்ரீ கீர்த்தி நாராயணர் நமது கண்கள கொள்ளைக்கொள்கிறார். அவரை பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் உள்ளார்.

இந்த ஸ்ரீ கீர்த்தி நாராயணா பெருமாள் வேறு எந்த வைஷ்ணவ கோவிலிலும் காணமுடியாத முக்கிய கோலத்தில் காட்சி அளிக்கிறார், ஒரு முக்கிய காரணத்திற்காக. அது என்ன என்று பார்ப்போம்.

பொதுவாக பல கோவில்களில் ஸ்ரீ விஷ்ணு பெருமாள் வலது கரத்தில் சுதர்ஷன சக்கரம் மற்றும் இடது கரத்தில் சங்குவுடன் காட்சி அளிப்பார்.

மாறாக இந்த தலகாடு ஸ்ரீ கீர்த்தி நாராயணா பெருமாள் வலது கரத்தில் சங்கும், இடது கரத்தில் சுதர்சன சக்கரத்தோடும் காட்சி அளிக்கின்றார்.

ஐதீகம் படி இந்த நிலை ஒரு புண்ணிய செயலுக்காக இப்படி காட்சியளிப்பதாக கருத்தப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
மனதுக்கு சந்தோஷத்தையும் உடலுக்குப் புத்துணர்வையும் தரும் ராணிபுரா மலை ஏற்றம்!
Thalagadu Keerthi Narayana!

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பின் மற்றும் தர்மம்படி பூணூல் போட்டுக் கொண்டதும், சமாஷ்ணம் செய்து கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி சங்கு, சக்கரங்களின் உருவங்களை முறைப்படி வலது மற்றும் இடது கைகளில் தரித்துக் கொள்வது ஆகும். (நெருப்பில் காண்பித்து கைகளில் பதிய வைத்துக்கொள்ளும் வைபவம் ஆகும். அவ்வாறு செய்து கொள்வதை அவர்கள் மிக முக்கியமான கடமையாக கொள்கிறார்கள்) .

அவ்வாறு செய்துகொள்ள முடியாத திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆன தம்பதியினர் இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்தால், நின்றுகொண்டு தரிசனம் கொடுக்கும் ஸ்ரீ கீர்த்தி நாராயணா பெருமாள் அவர்களுக்குத்தானே சமாஷ்ணம் செய்து வைத்து ஆசீர்வதிக்கிறார் என்று நம்பபடுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com