சொர்க்கமே கண்முன்! கர்நாடகாவின் மறைந்திருக்கும் முத்து 'அப்சர கொண்டா' நீர்வீழ்ச்சி!

தேவதைகள் குளிக்கும் நீர்வீழ்ச்சியில் ஒரு ஆனந்தக் குளியல் போட வேண்டுமா? உடனே இதைப் படியுங்கள்!
அப்சர கொண்டா
அப்சர கொண்டாAI image
Updated on

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான அப்சர கொண்டா அனுபவம்

ட்டுக்கடங்காமல் அலைபாயும் மனது கூட நீர்வீழ்ச்சியை பார்க்கும்போது அதனைப் போலவே மனம் ஒருமுகப்பட்டு நீர்வீழ்ச்சியின் சப்தத்திலும், அழகிலும் ஒன்றிப்போய் இருக்கும். அதிலும் குளித்து, ஆட்டம் போடும் நீர்வீழ்ச்சியாக இருந்தால் சந்தோசத்திற்கு எல்லை இருக்காது. அந்த வகையில் பார்த்து ரசிப்பதோடு குளித்து அனுபவிக்கும் அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி குறித்து இக்கட்டுரையில் தெளிவாகக் காண்போம்.

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் உத்தர கனடா மாவட்டத்தில் அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஹொன்னாவரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் முருடேஷ்வராவிற்கு அருகில் அமைந்துள்ளது. அழகிய சுற்றுலாத் தலங்களில் அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

கடற்கரையை நோக்கி 33 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து நீர் கொட்டுவது  அப்சரகொண்டா நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சமாக உள்ளது. நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் தண்ணீர் தேங்கும் குளத்தில் சொர்க்கத்திலிருந்து தேவதைகள் வந்து குளிப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் இந்த நீர்வீழ்ச்சியை 'அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி' என்று அழைக்கின்றனர்.

நீர்வீழ்ச்சியை கண்டு ரசிப்பது மட்டுமல்லாமல் எளிதாக படிக்கட்டுகள் வழியாக நீர்வீழ்ச்சியின் அடிவாரம் வரை சென்றடையும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . இதனால் இங்குள்ள குளத்தில் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்றடைந்து குளிப்பதற்கும் விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது.

அப்சர கொண்டா
அப்சர கொண்டாAI image

மலையில் இருந்து நீர்வீழ்ச்சியாக கொட்டும் நீர் கடலில் கலக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக நீர்வீழ்ச்சியில் இருந்து சில நிமிடங்கள் வாக்கிங் சென்றால் மலை உச்சியை அடைந்து, அங்கிருந்தபடியே கடற்கரையையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த மலை வரலாற்று சிறப்புமிக்க இடத்தையும் பெற்றுள்ளது. ஏனென்றால் பாண்டவர் குகைகள் என சிறிய, பெரிய குகைகள் இந்த மலையில் உள்ளன. இங்குள்ள மக்கள் வனவாசத்தின்போது பாண்டவர்கள் இக்குகையில் தங்கியிருந்ததாக நம்புகின்றனர். நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து குளித்து ஆடி பாடி மகிழ்வதை தவிர குழந்தைகள் விளையாட பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மகா கணபதி, உக்கிர நரசிம்மர் போன்ற கோவில்களும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதோடு, ராமச்சந்திர மடத்தின் ஒரு கிளையும் ஹொச நகரில் உள்ளது.

அப்சர கொண்டா நீர்வீழ்ச்சியை எளிதாக அடைவது எப்படி?

அப்சர கொண்டா நீர்வீழ்ச்சிக்கு விமானத்தில் செல்பவர்கள் முதலில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹொன்னாவருக்கு 165 கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில் வரும் பேருந்தில் பயணித்தால் அப்சர கொண்டா நீர்வீழ்ச்சியை அடையலாம்.

இதையும் படியுங்கள்:
இருண்ட காட்டில் த்ரில் பயணம்: இருட்டுக்குள் ஒளிந்திருக்கும் காட்டின் விசித்திர உலகைக் காணலாமா?
அப்சர கொண்டா

ரயிலில் பயணம் செய்பவர்கள் ஹொன்னாவர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். பஸ், டாக்ஸி அல்லது ஆட்டோவில் ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் பயணம் செய்தால் அற்புதமான அப்சர கொண்டா நீர்வீழ்ச்சியை அடையலாம்.

பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஹொன்னவர் பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து பேருந்து,  டாக்ஸி மூலமாக நீர்வீழ்ச்சியை எளிதில் அடையலாம்.

பாண்டவர் குகைகள், நீர்வீழ்ச்சி நீர் கடலில் கலப்பது, நீர்வீழ்ச்சி குளத்தில் ஆனந்த குளியல், விளையாட பூங்கா, வழிபட கோவில் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற இடமாக அப்சரகொண்டா நீர்வீழ்ச்சி உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது குடும்பத்தோடு சென்று குளித்து விளையாடி அனுபவித்து மகிழுங்கள்.

இதையும் படியுங்கள்:
அடுத்த இந்தியா பயணமா? மகாராஷ்டிராவின் 7 காலத்தால் அழியாத கடல் கோட்டைகள்!
அப்சர கொண்டா

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் அடுத்த குடும்பச் சுற்றுலாவுக்கான ஒரு அற்புதமான மற்றும் அமைதியான இடத்தைக் கண்டறிவதுடன், அங்குள்ள வரலாற்றுப் பின்னணி மற்றும் பயண வழிகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, உங்கள் விடுமுறையைத் திட்டமிடத் தேவையான அனைத்துத் தெளிவான வழிகாட்டல்களையும் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com