
ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய செயற்கை ஏரி ஆகும். பார்ப்பதற்கு இதய வடிவில் தோன்றும் இந்த ஏரி, ஹைதராபாத்தையும், செகந்திராபாத்தையும் பிரிக்கிறது. இந்த ஏரியின் அருகில் பிர்லா மந்திர், என்டிஆர் தோட்டம், லும்பினி பூங்கா ஆகியவை பார்ப்பதற்கு இயற்கையாகவும் ரம்யமாகவும் உள்ளது.
முசி ஆற்றின் கரையை சுற்றி சுமார் 5.7சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. 1526 இல் இப்ராஹிம் குதுப்சாவின் ஆட்சி காலத்தில் அசரத் உசேன் என்பவரால் கட்டப்பட்டது. எனவே, அவர் பெயரால் 'உசேன் சாகர்' என பெயர் பெற்றது.
முதலில் குடிநீர் தேவைக்காக தான் இந்த ஏரி அமைக்கப்பட்டது. பின்னர் இந்த ஏரி பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டது. இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 32 அடியாகவும் குறைந்தபட்சம் 10 அடி ஆகும் உள்ளது. ஏரியின் நடுவில் ஜிப்ரால்டர் என்ற மிகப்பெரிய பாறை உள்ளது.
அதில் தான் 17.5 மீட்டர் உயரம் கொண்ட 350 டன் எடைக் கொண்ட ஒரே வெள்ளை நிற கிரானைட் கல்லால் ஆன புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலை 1992 இல் அமைக்கப்பட்டது. இந்த ஏரியின் முடிவில் சையத் தனிமாவின் கல்லறையும், தர்காவும் உள்ளது.
கிழக்குக்கரை செகந்திராபாத், ஹைதராபாத் இரண்டையும் இணைக்கிறது. இந்த ஏரியை சுற்றி உள்ள சாலைகளில் அழகான சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஏரியின் வடபகுதியில் லும்பினி பூங்கா உள்ளது. இந்த ஏரியை எந்திரப் படகிலும், சாதா படகிலும் சுற்றி வரலாம். அதற்கு கட்டணம் உண்டு. நுழைவுக் கட்டணம் மட்டும் இலவசம். இந்த ஏரியின் வடபுறம் சஞ்சீவையா பூங்கா அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றியுள்ள பூங்காக்கள் இந்த ஏரியை அழகு படுத்துகிறது. இந்த ஏரியில் படகு சவாரி செய்வது ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த ஏரியை ஒட்டி 48 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய நிலையில் ஒரு சிற்றுண்டி நிலையம் உள்ளது. எல்லா நாட்களும் திறந்து இருக்கும்; காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை. திங்கட்கிழமை மட்டும் படகு சவாரி கிடையாது.
இந்த ஏரியின் நீளம் 3.2 கிலோ மீட்டர் அகலம் 2.8 கிலோ மீட்டர். இரவு நேரத்தில் இந்த ஏரி மின் ஒளியில் ஜொலிக்கும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். இந்த ஏரியில் நடைபெறும் லேசர் ஷோ மிகவும் பிரபலமானது.
இதை ஒட்டி உள்ள ஈஸ்ட் ஸ்ட்ரீட் உணவகம் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த ஏரியில் நீர் விளையாட்டு, சறுக்கு விளையாட்டு போன்றவை பிரபலம். ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதை மக்கள் நடைப்பயிற்சி செல்ல பயன்படுத்துகின்றனர்.
ஒருமுறை இந்த ஏரியை பார்வையிட்டால், அடிக்கடி பார்க்கத் தோன்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் செகந்திராபாத் செல்பவர்கள் இந்த ஏரியை கண்டிப்பாக பார்வையிட்டு தான் செல்வார்கள்.