
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வளவு வேகமாக நடந்து எத்தனை சீக்கிரத்தில் அந்த இடத்தை அடைகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் உடல்நிலையைக் கூறிவிடலாம்; நீங்கள் எப்படி மூப்பு அடைகிறீகள் என்பதையும் கூறி விடலாம்.
நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால் இன்றைய நவீன சோதனைகள் இதை நிரூபித்து உறுதிப்படுத்தி விட்டன.
ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலைச் சேர்ந்த பேராசிரியை கிறிஸ்டினா டியலி கான்ரைட் (Christina Dieli-Conwright, a professor of medicine at Harvard Medical School) இந்த நடை பற்றி ஏகமாக ஆராய்ந்து வியத்தகும் முடிவுகளைத் தந்துள்ளார்.
நீங்களே உங்களைச் சோதனை செய்து கொள்ளலாம் இப்படி:
நல்ல திறந்தவெளியில் விசாலமான இடத்தில் முதலில் பத்து மீட்டர் (33 அடி) நடந்து பாருங்கள்.
முதலில் ஐந்து மீட்டர் நடந்து விடுங்கள் உங்களது வழக்கமான வேகம் வரும்.
பின்னர் இன்னொரு பத்து மீட்டரைக் கடக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று பாருங்கள். பத்து மீட்டரை நீங்கள் கடக்க எடுத்த விநாடிகளால் வகுத்து விடுங்கள் அது தான் உங்கள் நடை வேகம்.
தினமும் சீராக இப்படி நடப்பது உங்களது மூளையையும் உடலையும் நன்கு பாதுகாத்து இயங்க வைக்கும் என்பது ஆய்வின் முடிவு.
உங்கள் நடைவேகத்தை கீழே கொடுத்துள்ள விவரங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். (இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்)
40 முதல் 49 வயதுடைய ஒரு பெண்மணியின் சராசரி நடை வேகம் விநாடிக்கு 1.39 மீட்டர் (4.6 அடி) இதே வயதுடைய ஆணுக்கு சராசரி நடைவேகம் விநாடிக்கு 1.43 மீட்டர் (4.7 அடி)
50 முதல் 59 முடிய வயது என்றால் பெண்ணுக்கு வேகம் விநாடிக்கு 1.31 மீட்டர் (4.3 அடி) ஆணுக்கு 1.43 மீட்டர் (4.7 அடி)
60 முதல் 69 வயது என்றால் பெண்ணுக்கு விநாடிக்கு 1.24 மீட்டர் (4.1 அடி) ஆணுக்கு 1.43 மீட்டர் (4.7 அடி)
70 முதல் 79 வயது என்றால் பெண்ணுக்கு விநாடிக்கு 1.13 மீட்டர் (3.7 அடி) ஆணுக்கு 1.26 மீட்டர் (4.16 அடி)
கடைசியாக 80 முதல் 89 வயது என்றால் பெண்ணுக்கு விநாடிக்கு 0.94 மீட்டர் (3.1 அடி) ஆணுக்கு 0.97 மீட்டர் (3.2 அடி)
இதை அளக்க ஏராளமான நவீன ஆப்கள் இப்போது வந்து விட்டன. (Walkmeter, MapMyWalk, Strava, and Google Fit ஆகியவை GPSஐ வைத்து நடையைத் துல்லியமாகக் கணிக்கின்றன! இன்னும் பலவற்றை கூகிளில் பார்த்துக் கண்டுபிடிக்கலாம். இவற்றை மொபைல் போனில் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்)
உங்கள் வேகம் சராசரி வேகத்தை விட மிகவும் குறைவாக இருக்கிறது என்றால் கவலைப்பட வேண்டாம் என்கிறார் கிறிஸ்டினா டியலி கான்ரைட்.
இன்னும் சற்று வேகமாக நடக்க ஏராளமான பயிற்சிகள் உள்ளன. அவற்றை மேற்கொண்டால் ஆரோக்கியமான நீடித்த வாழ்வை வாழ முடியும் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
நார்த் கரோலினாவில் ட்யூக் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றும் பெண்மணியான லைன் ராஸ்முஸேன் (Line Rasmussen, Department of Psychology and Neuroscience at Duke University, North Carolina) மிக மெதுவாக நடப்பவர்கள் சீக்கிரமே முதுமையை அடைந்து விடுகிறார்கள் என்கிறார்.
”நடக்கும் போது உங்கள் எலும்புகளும் தசைகளும் உங்களை நடக்க வைக்கின்றன, உங்கள் கண்கள் எங்கு நீங்கள் செல்கிறீர்கள் என்பதைப் பார்க்க உதவுகின்றன. உங்கள் இதயமும் நுரையீரலும் ரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் உடல் முழுதும் சுற்றி ஓடச் செய்கின்றன. மூளையும் நரம்புகளும் இதற்கு ஒத்துழைக்கின்றன” என்று அவர் விவரிக்கிறார்.
இவர் தனது ஆய்வில் ஆயிரம் பேர்களை ஈடுபடுத்தியுள்ளார்; நடை வேகமானது முதுமை எவ்வளவு சீக்கிரம் உங்களை வந்தடையும் என்பதைக் காட்டுவது மட்டுமல்ல; ஆயுள்காலம் முழுவதற்குமான மூளை ஆரோக்கியத்தைக் காட்டும் ஜன்னல் என்கிறார் அவர்.
சரி, முடிவான முடிவு என்ன?
தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதானது உங்கள் நடைவேகத்தை அதிகரிக்க உதவும் என்பது தான்.