
வார இறுதி நாட்களில் ஆனந்தமாக செல்ல ஒரு மினி மூணாறு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பநாடு எஸ்டேட் (Ambanad Hills) ஆகும். பிரம்மாண்டமாக ஓங்கி உயர்ந்த மலைகள், புல்வெளிகள், நீரோடைகள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கும். இங்கு தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் நிறைந்துள்ளன. இது ஒரு மினி மூணாறு என்று அழைக்கப்படுகிறது. காரணம் இதன் இயற்கை அழகு மூணாறைப் போலவே காணப்படுவதால் மினி மூணாறு என்று அழைக்கப்படுகிறது.
அம்பநாடு எஸ்டேட்டில் ஒரு பயணம் மேற்கொள்வது என்பது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இங்கு அதிக ஈரப்பதம் நிலவுவதால் அட்டைகள் அதிகம் காணப்படுகின்றன.
எனவே அவற்றின் மீது சிறிது கவனம் வைத்து ஜாக்கிரதையாக நடந்துகொள்வது நல்லது. இந்த எஸ்டேட் கொல்லம் மாவட்டத்தின் புனலூர் தாலுகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அச்சன்கோவில் காட்டில் மறைந்திருக்கும் இயற்கை அழகாகும். இது வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாததால் குறைவான சுற்றுலா பயணிகளே இங்கு பார்வையிட வருகிறார்கள். எனவே அதிக நெரிசல் இல்லாமல் அழகாக அனுபவிக்க முடிகிறது.
பசுமையான மலைகள், புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், எங்கும் மேகம் சூழ்ந்த காட்சிகள் நம் மனதை மயக்குகின்றது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரே தேயிலை தோட்டம் இங்குள்ளது. இந்தத் தோட்டமானது திருவிதாங்கூர் ரப்பர் மற்றும் தேயிலை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்கலாம். பரந்த ரப்பர் தோட்டங்களையும் காணலாம். மேலும் கேரளாவின் மிகப்பெரிய கிராம்புத் தோட்டங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள காலநிலை மிகவும் இதமாகவும் குளிர்ச்சியாகவும் உள்ளது.
இந்த இடம் வார இறுதி பயணத்திற்கு ஏற்ற இடமாகும். 300 மீட்டர் உயர மலையின் உச்சிக்கு அருகில் அம்பநாடு எஸ்டேட்டில் ஒரு தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு தேயிலை பதப்படுத்துதலைப் பார்த்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. ஆங்கிலேயர்கள் நிறுவிய அம்பநாடு எஸ்டேட்டில் தேயிலையை பதப்படுத்தும் இயந்திரங்கள் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவை. இன்றும் இங்கு செயல்பட்டு வருகின்றது.
பிரிட்டிஷ் காலத்து தொழிற்சாலையான இதில் இன்னும் பழங்கால இயந்திரங்களை பயன்படுத்துகிறது. அம்பநாடு மலை தேயிலை தோட்டங்களாலும், காபி, கிராம்பு மற்றும் ஆரஞ்சு தோட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது. விடியற்காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைச்சரிவுகளை மூடும் மூடுபனி ஒரு அழகிய உணர்வைத் தருகிறது.
மலைச்சரிவுகளும், மூடுபனி மூடிய மலைகளும், முடிவற்ற நீலத் தொடு வானங்களும் நம்மை இயற்கையின் அழகில் மயங்க வைக்கிறது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் மற்றும் எளிதில் அணுகக்கூடிய தன்மை ஆகியவை உள்ளூர் வாசிகளையும், இயற்கை ஆர்வலர்களையும் ஈர்க்கிறது. இங்கு மலையேற்றம், உள்ளூர் உணவுகளை ருசிப்பது, எஸ்டேட் பங்களாவில் தங்குவது என இயற்கை அழகை ரசித்து அனுபவித்துவிட்டு வரலாம்.
அம்பநாடு எஸ்டேட் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரை. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு நூறு ரூபாய் கட்டணமும், குழந்தைகளுக்கு இருபது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
அம்பநாடு மலைகள் கழுதுருட்டியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரியங்காவு பஞ்சாயத்தில் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம். ரயில் நிலையம் செங்கோட்டை 29 கி.மீ.