
இன்றைய நவீன உலகில் மக்களின் பயண போக்குவரத்தில் விமான நிலையங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தனிப்பட்ட காரணம் மற்றும் பல பன்னாட்டு சேவைகளுக்காக, நாட்கள் போகப் போக, இதன் தேவை அதிகரித்துக்கொண்டே போகும். இதை ஈடுகட்ட என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
உலகின் மிகப்பெரிய விமான நிலையங்கள் எது?
சவூதி அரேபியாவில் உள்ள கிங் ஃபஹ்த் (King Fahd) சர்வதேச விமான நிலையம், அமெரிக்காவில் உள்ள டென்வர் (Denver) சர்வதேச விமான நிலையம் மற்றும் அதே அமெரிக்காவின் டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த்(Dallas/Fort Worth) சர்வதேச விமான நிலையம் ஆகியவை இன்று உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களாகும்.
இந்த விமான நிலையங்கள் பெரியவையாக கருதப்படுவதே அதன் பரந்த நிலப்பரப்பு, அவை கையாளும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஒரு நாளில் கையாளப்படும் சரக்கு பொருட்களின் (Goods) அளவின் அடிப்படையிலே. இதன் பெரிய பரப்பளவுதான், பல ஓடுபாதைகள் அமைக்கவும், பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பல நுழைவுவாயில்களுக்கான (Terminals) இடத்தையும் மற்றும் பயணிகள் தங்களின் பயண நேரத்தை இனிமையாக செலவழிக்க பல கூடுதல் வசதிகளையும் பெற உதவுகிறது.
புதிய விமான நிலையம் அமைய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
விமான நிலைய கட்டுமானம் தொடங்கும் முன், சம்பந்தப்பட்ட நிலத்தின் ஒட்டுமொத்த தன்மையை ஆராய்வார்கள். அதற்கு முதலில் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கான மதிப்பீடுகள் (environmental impact assessments), புவியியல் ஆய்வுகள் (geological surveys) மற்றும் மண் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும். காரணம் ஒரு விமான நிலையம் அமைய ஆழ்ந்த அஸ்திவாரத்திலிருந்து பெரிய கட்டமைப்புகளை எழுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக அன்றாடம் விமான நிலைய செயல்பாடுகளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அழுத்தங்களை (Traffic signals and noise pollution) தாங்கும் அளவில் இருக்கிறதா என்பதை கட்டுமானம் தொடங்கும் முன்பே கணக்கிட வேண்டும்.
அந்த பகுதியில் ஏற்கனவே மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தால்?
காலம் காலமாக மக்கள் வசித்து வரும் பகுதிகளில் அல்லது அவற்றின் அருகில் விமான நிலையம் அமைக்கும் போது, பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கும். அதற்கு முதலில் விரிவான கட்டுமானப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குவார்கள் (construction safety plans). விபத்துகளைத் தடுக்க போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் (implementing traffic control plans) போன்றவையும் அடங்கும்.
சிலர் தாங்கள் வாழ்ந்த வசிப்பிடத்தையே இழக்க நேரிட்டு வேறு இடத்திற்கு மாறுவது என்பது குறிப்பிடத்தக்க சவாலான காரியம் தான். அதற்கு முதலில் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கான பல திட்டங்களை உருவாக்குவதில் அந்தந்த அரசாங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக நிதி இழப்பீடு, புதிய வீடுகளைக் கட்டி எழுப்ப தேவையான உதவி மற்றும் அதற்கு தேவையான சமூக உதவிகளை கட்டுமானம் தொடங்கும் முன்னே வழங்கப்படுகின்றன. உதாரணமாக, நம் தமிழ்நாட்டில் விமான நிலையம் வர போகும் பரந்தூர் கிராம மக்களுக்கு அவர்களின் நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு மற்றும் தேவைப்பட்டால் விமான நிலையத் திட்டம் தொடர்பான வேலை வாய்ப்புகளையும் வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதுபோக இந்த விமான நிலையத்தால் இடம்பெயரும் மக்களுக்கு பெரும்பாலும் அவர்களின் தேவைக்கேற்ப வீட்டுக் கட்டுமானத்திற்கான நிதி உதவி, அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை கண்டறிய உதவும் தொழில் பயிற்சி மற்றும் சுகாதாரம், கல்விச் சேவைகளுக்கான அணுகல்கள் அமைத்து தருவார்கள். மேலும் மக்களுக்கு விரைவான ஆதரவை வழங்கவும் மற்றும் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவை உறுதி செய்வதற்கும் அரசு சாரா நிறுவனங்களும் (non-governmental organizations) இதில் களம் இறங்குவார்கள்.
ஆக, மேலே குறிப்பிட்டதை போல் உலகில் உள்ள பெரிய விமான நிலையங்கள் வெறும் புகழ்ச்சிக்காகவும், சாதனைக்காகவும் அமைக்க படுவதில்லை. காலத்தின் கட்டாயம் மற்றும் மனித சமுதாயத்தில் ஊடுருவியுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் இது போல் மாற்றங்கள் உலகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.