
அழகான வீடுகள், தேவாலய கோபுரம், உயரமான டாக்ஸ்டீன் ஆல்ப்ஸ் மலையால் சூழப்பட்ட கண்ணாடி போன்ற ஏரி. ஆஸ்திரியாவின் ஹால்ஸ்டாட் (Hallstatt), ஒரு கனவு கிராமம். சுமார் 700 குடியிருப்பாளர்களைக் கொண்டது இந்த சிறிய கிராமம். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குவதோடு, கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு இடமாக உள்ளது.
ஆனால், இந்த இடத்தை பகலில் பார்த்து ரசிப்பதை விட இரவில் சுற்றி பார்ப்பது ஒரு மாயாஜால உலகில் இருப்பது போன்ற உணர்வைத் தரவல்லது.
ஏனெனில், மாலையில் சூரியன் ஆல்ப்ஸ் சிகரங்களுக்குப் பின்னால் மறையத் தொடங்கும் போது, பகல்நேரத்தின் பயணிகளின் கேமராக்களின் சலசலப்பும் கூட்டமும் மறைந்துவிடும். நீண்ட நிழல்கள் படரும், மலைகள் ஆழமான, பிரதிபலிக்கும் ஊதா நிறமாக மாறும். இந்த நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயணம், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.
பகல் பொழுதில், மாபெரும் சுற்றுலாப் பயணிகளால் பெரும்பாலும் மறைக்கப்பட்ட ஹால்ஸ்டாட்டின் அழகு, இறுதியாக தன்னை வெளிப்படுத்துகின்ற நேரமாக மாலைப்பொழுது இருக்கும்.
இங்குள்ள ஏரிக்கரையை ஒட்டிய குறுகிய, கல் பதிக்கப்பட்ட தெருக்களில் நடக்கும்போது, ஹால்ஸ்டாட் ஏரியின் மென்மையான அலைகள் படகுத்துறையில் மோதும் ஒலி இனிமையாக இருக்கும்.
ரெயின்போ கலர் வீடுகளின் மரச் சுவர்களில் பூசப்பட்டிருக்கும் மஞ்சள், பச்சை, ரோஸ் வண்ணங்கள் அனைத்தும், உள்ளே இருக்கும் கதவுகளுக்குப் பின்னால் எரியும் விளக்குகளின் சூடான ஒளியில் பளபளக்கும். அந்தப் பிம்பம் ஏரியின் மீது அச்சு அசலாகப் பிரதிபலிக்கும்போது, நீங்கள் ஒரு ஓவியத்துக்குள் நடந்து கொண்டிருப்பதை உணர்வீர்கள்.
மாலை நேரத்தின் குளிர்ச்சியான காற்றில், உள்ளூர் கடைகளைத் தாண்டி, சந்து பொந்துகளில் ஏறி நடக்கும்போது, பூங்கொத்துகள் தொங்கும் பால்கனிகளுக்குப் பின்னால், உள்ளூர் மக்களின் எளிய வாழ்வின் காட்சிகள் மெல்லத் தெரியும். இந்தச் சிறிய கிராமம், தன்னை வந்து ரசிப்பவர்களுக்காக, ஒரு ரகசியமான காட்சியைத் திறந்துவிடுகிறது.
சின்னஞ்சிறிய சந்துகள் வழியாக மலைப்பகுதிக்குச் செல்லுங்கள். இங்கே, எம்பிராய்டரி செய்யப்பட்ட திரைச்சீலைகளுக்குப் பின்னால், உள்ளூர் வாழ்க்கையை காணலாம். காற்று குளிர்ச்சியாக இருக்கும். தேவாலய மணிகள் மெதுவாக எதிரொலிக்கும்.
நீங்கள் ஹால்ஸ்டாட்டை ஒரு நாள் பயணமாகப் பார்வையிடாமல், இரவு தங்கி சுற்றிப்பார்ப்பது, ஹால்ஸ்டாட் கிராமத்தின் உண்மையான தூய்மையான, அமைதியான வடிவத்தைக் காண முடியும். இது என்றும் மறக்க முடியாத இனிமையான அனுபவத்தை தரும்.
அதே சமயம், இங்குள்ள இரவு உணவு முன்பதிவுகளும் தங்குமிடங்களும் வேகமாக நிரம்பும். முன்பதிவை உறுதி செய்த பின் புறப்படுவது சிறந்தது.