

வரப்போகும் நவம்பர் டிசம்பர் விடுமுறை நாட்களில் சென்று வருவதிற்கேற்ற, இந்தியாவிலுள்ள மலைப் பிரதேசங்கள் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் வட மாநிலங்களில் பனி மூடிய மலைச் சரிவுகளையும், தென் பகுதியில் பனி மூட்டம் சூழ்ந்த தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைகளையும் நவம்பர் மாதம் இதமாக கண்டுகளிக்க முடியும். இங்கெல்லாம் காலைக் குளிர் நடு நடுங்கச் செய்யும். அப்போது, சூடான பராத்தா மற்றும் ஒரு சுவையான டீயை எடுத்துக்கொண்டு உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்திக் கொள்ளலாம்.
1. மணாலி: மணாலியில் பைன் மரக்காடுகளின் வாசனை மற்றும் ரோட்டோரக் கடைகளிலிருந்து வரும் மோமோக்களின் வாசனையையும் முகர்ந்தபடி, பள்ளத்தாக்கில், கைகளை உறைய வைக்கும் குளிர் நீர் கொண்ட பியாஸ் (Beas) நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அழகை ரசிப்பது ஆனந்தத்தின் உச்சம் எனலாம்.
மலைக்கு மேலே செல்லச் செல்ல குளிர் காற்றின் வேகம் அதிகரித்து நம் தலைமுடி பிய்த்துக்கொண்டு செல்வது போன்ற உணர்வை உண்டு பண்ணி நம்மை நடுநடுங்க செய்யும்.
அங்குள்ள பழங்குடியினர் அவர்களின் பாரம்பரிய உடையை நமக்கு அணிவித்து 'யாக்' எனப்படும் நீண்ட கொம்புகளுடைய எருமை மாடு மீது உட்கார வைத்து போட்டோ எடுத்துக்கொள்ளவும் உதவி புரிவது சிறப்பான அனுபவம்.
2. சிம்லா: பழமை வாய்ந்த கட்டிடங்கள், காற்றோட்டமான மால் ரோடு, சீடர் (Ceder) மரங்களால் சூழப்பட்ட மலைகள் ஆகியவை நவம்பர் மாதம் சிம்லாவில் இருப்பவர்களுக்கு பழங்கால வாழ்க்கையை அனுபவிப்பது போன்ற உணர்வைத் தந்து ஆச்சரியப்பட வைக்கும். மலையின் மேற்பரப்பிற்கு செல்ல செல்ல பனிப்பொழிவு அதிகரிப்பதையும் பனிக்கட்டிகள் தரை முழுக்க மூடியிருப்பதையும் காணமுடியும்.
1864 ல் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது, சிம்லா அவர்களின் கோடைகால தலைநகரமாக விளங்கியது. அப்போது கட்டப்பட்ட கலைநயம் மிக்க கட்டிடங்கள் தற்போதும் சுற்றுலாப் பயணிகளை சுற்றிச் சுற்றி வந்து ரசிக்க வைக்கின்றன.
இங்கு தங்குமிடங்களில் வழங்கப்படும், பன்னீர் பட்டர் மசாலாவில் சேர்க்கப்பட்டிருக்கும் உள்ளங்கை அளவிலான பன்னீர் துண்டுகள் மற்றும் பாறாங்கல் போன்று இறுகியிருக்கும் கெட்டித் தயிர் போன்றவை, சாப்பிடும்போது நம்மை திக்கு முக்காடச் செய்யும். இரவு நேரங்களில், மலைச் சரிவில் அமைந்துள்ள வீடுகளில் ஒளிரும் விளக்கு வெளிச்சத்தில் பூலோக சொர்க்கம் போல் மின்னும் சிம்லாவின் அழகைக்காண, கண் கோடி வேண்டும்.
3. டார்ஜிலிங்: இங்கு தயாரிக்கப்படும் ஃபிரஷ் டீயின் வாசனை மூக்கில் நுழைந்து டீ பிரியர்களின் நாவிலுள்ள சுவை அரும்புகளை சுண்டி இழுக்கும். குளிர் காற்று உடலை தழுவ, தூரத்தில் கேட்கும் டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வேயின் தொடர் வண்டிச் சத்தம், நம்மை அதில் பயணிக்க அழைப்பது போலிருக்கும். 1999 ல் UNESCO World Heritage Site டின் வரிசைப் பட்டியலில் டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வே சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேக மூட்டம் இல்லாத தெளிவான காலை நேரங்களில் டார்ஜிலிங்கிலிருந்து இமய மலை உச்சியைப் பார்ப்பது பிரமிக்க வைக்கும் அனுபவம் தரும்.
4. முஸோரி: உத்தர்காண்டில் உள்ளது முஸோரி. உயிரோட்டமுள்ள மால் ரோடு வழியாக செல்லும்போது விரைவிலேயே வனப் பகுதியை சென்றடைந்து விடுவோம். பறவைகளின் 'கீச்' ஒலி, வேகமான காற்றின் ஓசை, இலைகளின் சலசலப்பு ஆகியவை நம்மை சூழ்ந்து சிலிர்க்க வைக்கும்.
இந்தியாவிலுள்ள அமைதியான மலைப் பிரதேசங்களில் முஸோரியும் ஒன்று. நாளின் முடிவில் குளிர் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே போதுமான குளிர்கால ஆடைகளை உடன் எடுத்துச் செல்வது அவசியம்.
5. ஊட்டி: பெரிய அளவிலான ஏரி மற்றும் டீ எஸ்டேட்கள் அதிகமுள்ள அழகிய ஊர் ஊட்டி. மலைகளின் ராணி எனவும் அழைக்கப்படுகிறது. யூக்கலிப்டஸ் வாசனை நிறைந்த காற்று, பச்சைப் பசேலென்ற தேயிலைத் தோட்டங்கள், பனிப் பொழிவில்லாது, மேக மூட்டத்துடன் காணப்படும் காலை மற்றும் மாலை வேளைகள் நம்மை மெய் மறக்கச் செய்யும். அங்குள்ள ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்வது, பைக்காரா நீர் வீழ்ச்சி, பைன் ஃபாரெஸ்ட், தொட்ட பெட்டா சிகரம் ஆகிய இடங்களை கண்டு வருவது போன்றவை மனதில் நீண்ட நாள் நினைவாக நிற்கும்.
குறைந்த பட்ஜெட்டில் இரண்டு மூன்று நாட்களை இனிமையாக கழித்து வருவதற்கு ஏற்ற, இயற்கை அழகு கொஞ்சும் அருமையான இடம் ஊட்டி.
6. மூணாறு: பச்சைப் பசேலென்று பசுமை போர்த்திய மலைகளால் சூழப்பட்ட மூணாறு, கேரளாவில் அமைந்துள்ளது. இங்கு குளிர்ச்சியான பனி மூட்டம் சூழ்ந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் காபி பயிர்களை கண்டு கழிப்பது மனதுக்கு ரம்யம் தரும்.
மலை மீது வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் டீ வாசனையுடன், ஈரமாகவும் கரடு முரடாகவும் இருக்கும்.
இங்குள்ள கொழுக்கு மலைக்கு செல்ல ஜீப் வசதி மட்டுமே உள்ளது. கொழுக்கு மலையில் தேயிலைகளை பல நிலைகளில் பதப்படுத்தி, டீத்தூள் மற்றும் காபி தூள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் தொழிற்சாலை உள்ளது.
இமயமலைக் குளிருக்கு நிகராக இல்லாமல் தாங்கும் அளவு குளிர்ச்சி கொண்ட இந்திய மலைப் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது மூணாறு.
பயண திட்டங்களை பட்டியலிடும் முன், அந்தந்த இடங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் வானிலை முன்னறிவிப்பினை கவனத்தில் கொள்வது, அடுக்குகளைக் கொண்ட கனமான குளிர் தாங்கும் ஆடைகள், சன் ஸ்கிரீன், கையுறைகள், மலைச் சரிவுகளில் ஏறுவதற்கு தோதான காலணிகள் மற்றும் காதுகளை மூடக் கூடிய உல்லன் தொப்பி போன்றவற்றை மறக்காமல் உடன் எடுத்துச் செல்வது விடுமுறையை குறைவின்றி அனுபவிக்க உதவி புரியும்.
குறைவான செலவில் எங்கு செல்வது என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான மலைப்பிரதேசங்கள் பயணத் திட்டத்தை அளிக்கிறது.