

பூட்டான், இந்தியாவுக்கு மேலே நேபாளத்திற்கு அருகே அமைந்துள்ள குட்டி நாடு. நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 லட்சம் தான். தலைநகர் திம்புவில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் தான் வசிக்கின்றனர். இந்த குட்டி நாடு பல ஆச்சரியங்களை தன்னுடன் வைத்துள்ளது. மன்னர் ஆட்சி முறைதான் இங்கு. மக்கள் மகிழ்ச்சி மட்டுமே அரசின் இலக்கு. எந்த நாட்டுடனும் போர் புரிந்ததில்லை. விவசாயம்தான் முக்கியத் தொழில். அதுவும் 100 சதவீதம் இயற்கை விவசாயம்.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் (வெறி நாய்க்கடி) நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக கருதி முழுமையாக ஒழித்த முதல் நாடு என்ற சாதனையை பூடான் படைத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் எந்தவொரு நாட்டையும் ரேபிஸ் நோய் அற்ற நாடாக இதுவரை அறிவிக்கவில்லை. பூடானுக்கு அந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது, நாய்களால் பரவும் ரேபிஸ் நோய் பொதுச் சுகாதார பிரச்சினையாக இல்லாத நிலை என்பதற்கான அங்கீகாரமே அது.
பல்வேறு ஆசிய நாடுகளிலும் நாய்த் தொல்லையும், வெறி நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயும் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்னையாக இருக்கும் சூழலில், பூடான் போன்றதொரு சிறிய நாட்டில் ரேபிஸ் பொதுச் சுகாதாரப் பிரச்னையாக இல்லை என்ற நிலை எப்படி சாத்தியமானது?
அப்படியான அங்கீகாரத்தை வழங்க உலக சுகாதார நிறுவனம் சில அடிப்படைத் தகுதிகளை வகுத்து வைத்துள்ளது. அதன்படி ஒரு நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு வெறி நாய்க்கடி (ரேபிஸ்) நோயால் ஒரே ஒரு மனித உயிரிழப்பு சம்பவம் கூட நிகழாமல் இருக்க வேண்டும். கூடவே, இனியும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் தேவையான கட்டமைப்புகளையும் தொடர்ந்து உறுதிப்படுத்தும் நிலையில் அந்த நாடு இருக்க வேண்டும்.
அந்த வகையில் பூடானில் கடைசியாக ரேபிஸ் நோயால் மனித உயிரிழப்பு நேர்ந்தது ஜூன் 2023-ல். அதன் பின்னர் அங்கு ரேபிஸ் உயிரிழப்பு ஏற்படவில்லை.
அதற்கு தீவிர கண்காணிப்பு, நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், நாய்க் கடிக்கு உள்ளானவர்களுக்கு post-exposure prophylaxis (PEP) நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பூடான் திறம்பட மேற்கொண்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.
பூடான் இதில் மட்டுமல்ல, பல விஷயங்களில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பூட்டானில் உள்ள எந்த சாலையிலும் போக்குவரத்து சிக்னல்கள் என்பதே இல்லை. தலைநகர் திம்புவில் 1990-ம் ஆண்டு போக்குவரத்து சிக்னல்களை அமைத்தபோது அதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த காரணத்தால், அவை நீக்கப்பட்டு மீண்டும் கைமுறை சைகைகள் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. அது இன்றும் தொடர்கிறது.
கடற்படையோ, விமானப்படையோ இல்லாத நாடு பூடான். வில் வித்தை பூட்டானின் தேசிய விளையாட்டு. பூட்டானின் உணவு பொதுவாக காரமாக இருக்கும். பூடான் நாடு முழுவதும் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட ஒரே நாடு. பூடான் பயணம் செய்கின்றவர்கள் பயணக் காப்பீடு எடுப்பது அவசியம்.
பூடான் நாட்டின் உயரமான மலையின் பெயர் ' கங்கர் புனாசம்' இன்று வரை எந்த மனிதனும் 24,840 அடி உயரம் கொண்ட இந்த மலையில் ஏறியதில்லை, பூடான் அரசும் யாரையும் இதில் ஏற அனுமதிப்பதில்லை. காரணம் பூடான் மக்கள் மலைகளை கடவுளாக பார்ப்பது தான். கங்கர் புனாசம் ஒரு புனிதமான இடம். பூடான் நாட்டில் 20,000 அடி உயரத்தில் உள்ள மலைகளில் மட்டுமே ஏறலாம் என்று சட்டம் அங்கு உள்ளது.
பூடான் நாட்டில் சொத்துரிமையில் பெண்களுக்கே முதலிடம். சொத்துக்களை நிர்வகிப்பது வீட்டிலேயே உள்ள மூத்த பெண்மணிகள் தான். திருமணம் முடிந்ததும் மணமகன் பெண் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும். அவரது வருமானம் தன்னிறைவு பெற்ற பிறகே அவர்கள் தனியாக குடும்பம் நடத்தச் செல்லலாம்.
பூடானில் விநோத பழக்கம் ஒன்று உள்ளது. இந்நாட்டில் யாராவது உணவு கொடுத்தால் உடனே வாங்கி சாப்பிடக் கூடாது மூன்று முறை மறுத்த பின்பே ஏற்க வேண்டும். இதை அந்நாட்டு மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார்கள். டி.வி. பார்ப்பதைக்கூட மக்கள் விரும்புவதில்லை. சமூக வலைதளங்கள் பக்கம்கூடப் போவதில்லை.
நாட்டில் 50 சதவீத வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை. காடுகளை அழித்து விட்டு இஷ்டத்துக்கு கட்டடங்கள் கட்டிவிட முடியாது. பொதுவாகவே புத்த மதம் அமைதியை விரும்புகிறது. காடுகள் மட்டும்தான் அமைதியைத் தரமுடியும் என்பது பூட்டானின் நம்பிக்கை. எங்கு நோக்கினாலும் வனச் சரணாலயங்கள் இருக்கின்றன. உலகிலேயே அதிக நீர் வளம் கொண்ட நாடுகளில் பூடான் 4 வது இடத்தில் உள்ளது.
நாட்டு மக்களுக்கு கல்வி, மருத்துவம்,வீடு என திகட்ட திகட்ட சலுகைகளை அள்ளி வழங்கும். பூடான் அந்த நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய கண்டிஷனையும் போட்டுள்ளது. அதாவது பூடான் மக்களுக்கு வெளிநாட்டினரை திருமணம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. மன்னர் குடும்பம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு உண்டு.
பூடானில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்போது, அவை பாரம்பரிய பூடான் கட்டிடக்கலை பாணியை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. கட்டிடங்களின் வெளிப்புற வடிவமைப்பு, மர வேலைப்பாடுகள், ஜன்னல்கள், கூரைகள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் பாரம்பரிய தோற்றத்துடன் அமைக்கப்பட வேண்டும். இதனால், நகரங்களின் இயற்கை அழகையும், கலாசார அடையாளத்தையும் பாதிக்கும் வகையில் மிக உயரமான கட்டிடங்களை கட்ட அங்கு ஊக்குவிப்பதில்லை.
தென்கிழக்கு ஆசியாவிலேயே வெறிநாய்க்கடி இல்லாத முதல் நாடாக பூடான் உருவெடுத்த முறையான திட்டமிடலையும், அந்நாட்டின் தனித்துவமான வாழ்க்கை முறையையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.