
இந்தியாவில், தனித்துவத்தன்மை வாய்ந்த கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளில் சிலவற்றின் சிறப்பான மற்றும் சுவாரசியமான விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா..!
சனி சிங்கனாப்பூர் மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சனி சிங்கனாப்பூர். முழு கிராமத்திலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கதவுகள் இல்லை. திருட்டுக்கள் கிடையாது. இங்கேயுள்ள காவல் நிலையத்தில், இதுவரை எந்த ஒரு குற்றமும் பதிவாகவில்லையெனக் கூறப்படுகிறது. சிவன் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு முன்பாக. கருங்கல்லினாலாகிய சனிபகவான் திறந்த வெளியில், 5 1/2 அடி உயரத்தில் சுயம்பு வடிவில் நின்று காட்சியளிக்கிறார்.
ஷெட்பால், மகாராஷ்டிரா
ஸோலாப்பூர் மாவட்டத்திலுள்ள ஷெட்பால் கிராமம், பாம்புகளின் கிராமமாகும். கொடிய விஷமுள்ள பாம்புகளுடன் கிராமவாசிகள் அமைதியாகவும், ஒன்றிணைந்தும் வாழ்கின்றர்., தங்கள் குடும்ப உறுப்பினர்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் பாம்புகளைக் கொண்டுள்ளனர். குழந்தைகளும் பயமில்லாமல் விளையாடுகின்றன.
ஹைவேர் பஜார், மகாராஷ்டிரா
இந்தியாவின் பணக்கார கிராமம் ஹைவேர் பஜார். ஒரு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமம், படிப்படியாக பொருளாதார ரீதியாக உயர்ந்து, இன்று இங்கே 60 மில்லியனர்கள் உள்ளனர். எவரும் ஏழைகள்கிடையாது.
பன்சாரி, குஜராத்
மிக நவீன கிராமமாகிய பன்சாரியில், சிசிடிவியும் வைஃபையும் கொண்ட அனைத்து வீடுகளும், தெரு விளக்குகளும் சூரிய சக்தியால் இயங்குகின்றன.
குல்தாரா, ராஜஸ்தான்
18 ஆம் நூற்றாண்டில் குல்தாரா கிராமத்தில் வசித்து வந்த பாலிவால் பிராமணர்கள், ஒரே இரவில் மர்மமான முறையில், கிராமத்தை காலி செய்துவிட்டுச் சென்றனர். காரணம் ஒருவருக்கும் தெரியாது. இன்று குல்தார், ஒரு பாரம்பரிய இடமாக ராஜஸ்தான் அரசால் பாதுகாகக்கப்பட்டு வருகிறது. பேய் கிராமம் எனப்படும் குல்தாராவில் யாரும் வசிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்குமிடமிது.
கோடின்ஹி, கேரளா
கோடின்ஹி கிராமம், இரட்டையர்களின் கிராமம் என அழைக்கப்படுகிறது. இங்கே, 400க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருக்கின்றனர். தண்ணீரில் கலந்திருக்கும் ஒருவித கெமிகல் இதற்கு காரணமெனக் கூறப்படுகிறது.
மத்தூர், கர்நாடகா
ஷிமோகாவில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள மத்தூரில், வசிப்பவர்கள், சம்ஸ்கிருதத்தை தொடர்பு மொழியாக கொண்டுள்ளனர். கன்னட மொழியில் பேசினாலும், சமஸ்கிருத மொழியின் பாதுகாவலராக செயல்படுகின்றனர். பண்டைய மரபுகளைக் கொண்டிருந்தாலும், நவீன உலகத்துடன் இணைந்தவர்கள். தங்கள் அன்றாட உரையாடலில் சம்ஸ்கிருதத்தில் பேசும் மக்களைக்கொண்ட கிராமம்.
பர்வான் காலா, பீகார்
பீகார் மாநிலத்தில், கைமூர் மாவட்டத்திலுள்ள கிராமம் பர்வான்காலா. அடிப்படை வதிகள், சாலை இணைப்புகள் போன்றவைகள் கிடையாது. உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள கிராமம். கடந்த 50 ஆண்டுகளாக ஒருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. கிராமத்து இளைஞர்கள் முன்வந்து சாலை இணைப்பு அமைத்துள்ளனர். முதன் முறையாக 2017 இல் ஒரு திருமணம் நடந்துள்ளது.
மவ்லின்னாங், மேகாலயா
மவ்லின்னாங், ஆசியாவின் தூய்மையான கிராமம். இங்கே வசிக்கும் மக்கள், குப்பைகளை கீழேகொட்டாமல், கழிவுகளைச் சேகரித்து, மக்கச் செய்து, கிராமத்தை தூய்மையாக வைத்துள்ளனர். 2003 இல் ஆசியாவின் தூய்மையான கிராமம் என பெயர் பெற்றுள்ளது மவ்லின்னாங் கிராமம்.
இதுபோல தனித்துவத்தன்மை வாய்ந்த கிராமங்கள் இந்தியாவில் அநேகம்.