‘தக்காண ராணி‘ சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தெரியுமா உங்களுக்கு? அதைவிட அது ஒரு ரயில் என்று தெரிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம், டெக்கான் குயீன் எனப்படும் ஒரு ரயில்தான் சிறைப் பிடிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் அந்த ரயிலைப் பற்றி அறிந்து கொள்வோம்.
1930, ஜூன் முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட, இந்தியாவின் முதல் அதிவேக ரயில் இது. புனே – மும்பை வழித்தடத்தில், அதிகபட்சமாக, மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. அதிக தூரத்துக்கு, மின்சார சக்தியால் இயக்கப்பட்ட முதல் ரயில். இந்த ரயிலில்தான் முதன்முதலில் வெஸ்டிபுல் (Vestibule) – அதாவது ரயிலினுள் ஒரு பெட்டியிலிருந்து அடுத்த பெட்டிக்கு உள்ளிருந்தவாறே போய், வரக்கூடிய – வசதி ஏற்படுத்தப்பட்டது.
இன்னொரு முதல் – இந்த ரயில் தொடரில்தான் பெண்களுக்கென்று தனி பெட்டி இணைக்கப்பட்டது. இருங்கள், இன்னும் ஒரு முதல் இருக்கிறது – தனியே உணவுக்கூடப் பெட்டியையும் கொண்டது!
சரி, டெக்கான் குயீன் என்ற பெயர் இந்த ரயிலுக்கு எப்படி வந்தது? டெக்கான் (தக்காணம்) என்பது, புனே நகரின் பூர்வப் பெயர்; அதுதான் காரணம். இந்த ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் முனையத்திலிருந்து புனே சந்திப்புவரை இயக்கப்பட்டது.
சுமார் 75 ஆண்டுகளாக, பல்வேறு மாற்றங்களைக் கொண்டது இந்த ரயில். ஆரம்பத்தில் இரண்டே இரண்டு பெட்டிகள் கொண்டு, மும்பையின் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து புனே சந்திப்புவரை ஓடியது. முக்கியமாக, வார இறுதி நாட்களில், புனே குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்ள மும்பை செல்வந்தர்களை அழைத்துச் செல்வதற்காகவே இந்த ரயில் பயன்பட்டது. இருக்கை வசதி கொண்டதாக மட்டுமே இருந்தது. பிறகு, முதல், இரண்டாவது வகுப்புகள் அறிமுகமாயின. 1955ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு சேர்க்கப்பட்டது. 1974 வாக்கில் 12 பெட்டிகள் கொண்டதாக நீண்டது.
இந்த ரயில் பயணிகள் அதன் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். ஆமாம், பல்லாண்டுகளாக ஜூன் 1ம் தேதியை, புனேயில் ‘டெக்கான் குயீன்‘ நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
அதுசரி, தக்காண ராணி கைது செய்யப்பட்ட விவரம் என்ன?
புனேயிலிருந்து கல்யாண் ரயில் நிலையம் வழியாக சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்குப் போய்க் கொண்டிருந்த இந்த ரயிலின் எஞ்சினைத் தனியே கழற்றி கல்யாண் ரயில் நிலையத்தில் ஓர் ஓரமாக சிறைப்படுத்தி விட்டார்கள். ஏனாம்? அந்த வழியாக ரயில்கள் போவதானால், கல்யாண் நகராட்சிக்கு குறிப்பிட்ட கட்டணம் வரியாகச் செலுத்த வேண்டும். ஆரம்ப வருடங்களில் அவ்வாறு கட்டணம் செலுத்தி வந்த ரயில்வே நிர்வாகம், ஒரு கட்டத்தில் கட்டணத்தை நிறுத்தி விட்டது. பலமுறை கேட்டுப் பார்த்தும், ரயில்வே நிர்வாகம் வரி செலுத்தாததால் நகராட்சி, அந்த ரயிலின் எஞ்சினைப் பறிமுதல் செய்ததோடு, வழக்கும் தொடுத்தது. வழக்கில் நகராட்சி வெற்றி பெறவே, வேறு வழியின்றி அதுவரையிலான மொத்த தொகையையும் ரயில்வே நிர்வாகம் கட்டி விட்டு எஞ்சினை மீட்டுக் கொண்டது. இவ்வாறு நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாதாடிய வழக்கறிஞர் யார் தெரியுமா? டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
ஆனாலும் ரயில்வே நிர்வாகம் பழிவாங்கத் தவறவில்லை; ஆமாம், அந்த அவமான சம்பவத்துக்குப் பிறகு பல மாதங்கள்வரை டெக்கான் குயீன் ரயில், கல்யாண் ரயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து சென்றது! நல்லவேளையாக, இந்திய சுதந்திரத்துக்கு முன்னாலேயே எல்லாம் சுமுகமாயிற்று!