
நுற்றுக்கணக்கான யோகாசனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு நன்மையை வழங்கக்கூடியதாகும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு யோகாசனமும் ஒவ்வொரு விதமான செயல்முறையைக் கொண்டிருக்கும்.
உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது.
பயன்கள்:
* தோள்பட்டை, கைகளின் பைசெப்ஸ், டிரைசெப்ஸ் தசையை வலிமையாக்குகிறது.
* மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரா சக்ராவை செயல்படுத்துகிறது, அதே நேரத்தில் உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்கி சமநிலையில் வைக்கிறது.
* கோர் மற்றும் வயிற்று தசைகள் பலமடைகின்றன.
* செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
* குடல் இறக்கம், வாயுத் தொல்லை வராமல் தடுக்கிறது.
* உத்தித பத்மாசனம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது
* இந்த ஆசனம் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் அதே வேளையில், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* இதயம் மற்றும் நுரையீரலை பலப்படுத்தும்.
* தொப்பை கொழுப்பை திறம்பட அகற்ற இந்த ஆசனம் உதவும்.
* கணையம் நன்கு வேலை செய்வதால், நீரிழிவு நோய் வராமல் தடுக்க இவ்வாசனம் சிறந்தது.
செய்முறை
யோகா மேட்டில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டிக்கொண்டு நிமிர்ந்த நிலையில் (கூன் போடாமல்) அமர வேண்டும். வலது காலை தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்க வேண்டும். பின்னர் அதேபோல் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்க வேண்டும்.
இப்போது உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். அடுத்து உள்ளங்கைகளை தரையில் நன்றாக பதித்து மூச்சை மெதுவாக உள்இழுத்துக் கொண்டே, முழு உடலையும் தரையில் இருந்து உயர்த்தி, முழு உடலின் பாரமும் உள்ளங்கைகள் மற்றும் கைகளில் மட்டும் தாங்கி பிடித்தபடி உயர்த்த வேண்டும்.
அதாவது புட்டப்பகுதியை முழங்கை வரை (படத்தில் உள்ளபடி) உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் மெதுவாக கீழே இறங்கி பழைய நிலைக்கு வர வேண்டும். அடுத்து கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 4 முறை செய்யலாம்.
எச்சரிக்கை:
* கைகள், தோள்பட்டை, மணிக்கட்டுகளில் காயம் அல்லது வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* இந்த ஆசனம் மன அழுத்தத்தைக் குறைக்க நல்லது என்றாலும், யாராவது தூக்கமின்மை அல்லது கவலைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். ஏனெனில் மனம் தடுமாறும் போது கீழே விழ வாய்ப்புள்ளது.
* முழங்கால்கள், கணுக்கால், இடுப்பு ஆகியவற்றில் காயங்கள் அல்லது சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் செய்ய வேண்டாம்.
* உங்களுக்கு கடுமையான முதுகுப் பிரச்னைகள் இருந்தால் தவிர்க்கவும்.
* கர்ப்பிணிகள், உயர் இரத்த அழுத்தம், வயிற்று குடலிறக்கம், சியாட்டிகா வலி இருந்தால் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* இந்த ஆசனம் செய்யும் போது உங்களுக்கு உடலில் ஏதாவது வலி ஏற்பட்டால் நிறுத்தி விடுவது நல்லது.
* இந்த ஆசனத்தை பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரின் முன்னிலையில் செய்வது ஆபத்தை ஏற்படுத்தாது.