தீபாவளிக்கு ஊருக்குக் கிளம்புறீங்களா? வீட்டைப் பூட்டும் முன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்க!

பதற்றமில்லாப் பயணத்திற்கும் உறவினர்களை மகிழ்விப்பதற்கும் தேவையான முழு வழிகாட்டி.
தீபாவளி
தீபாவளிGemini image
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி நெருங்கிடுச்சு! குழந்தைகளும் பெரியவர்களும் அவரவர் சொந்த ஊருக்குச் செல்வதற்கு இப்போதே மகிழ்ச்சியாகத் திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் எனப் பண்டிகைக்கான வேலைகள் ஒருபுறம் இருக்க, சொந்த ஊருக்குச் சென்று பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடப் போகிறோம் என்ற மகிழ்ச்சியே தனிதான்.

ஆனால், ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சில விஷயங்களைச் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டால் பயணத்தின்போது எந்தப் பதற்றமும் இருக்காது. அதேபோல், உறவினர்கள் வீட்டுக்கு விருந்தினர்களாகச் செல்லும்போதும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. வீட்டை விட்டுக் கிளம்பும் முன் கவனிக்க வேண்டியவை!

தீபாவளிக்காக இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெளியூரில் தங்கப்போகிறீர்கள் என்றால், வீட்டை விட்டுச் செல்வதற்கு முன்பு சில வேலைகளை முடித்துவிடுங்கள். பிரிட்ஜில் இருக்கும் காய்கறிகள், பழங்கள், பால், தயிர் போன்ற பொருட்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் கெட்டுப்போகும் பொருட்களை அப்படியே விட்டுச் செல்ல வேண்டாம்.

வீட்டில் உள்ள குடிநீர்க் குழாய்களை நன்றாக மூடிவிடுங்கள். கேஸ் அடுப்பின் ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிட்டு, தேவையில்லாத எலக்ட்ரிக் சாதனங்களின் பிளக்குகளையும் கழற்றிவிடுங்கள். வீட்டின் கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் நன்றாகப் பூட்டிவிட்டுச் செல்லுங்கள். நீண்ட நாட்கள் வெளியூரில் தங்குவதாக இருந்தால், நம்பிக்கையான அக்கம்பக்கத்தினரிடம் தகவல் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

2. பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்து வையுங்கள்!

கடைசி நேரத்தில் அவசரமாகப் பொருட்களைத் தேடுவதைத் தவிர்க்க, இரண்டு நாட்களுக்கு முன்பே டிராவல் பேக்கைத் தயார் செய்யத் தொடங்குங்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான புத்தாடைகள், மாற்று உடைகள், உள்ளாடைகள், துண்டுகள், இரவு உடைகள் எனத் தனித்தனியாக எடுத்து வையுங்கள்.

தீபாவளி
தீபாவளிGemini image

குழந்தைகளுடன் செல்பவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில், மருந்துகள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்லுங்கள். வயதானவர்கள் உடன் வந்தால் அவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை மறக்காமல் வைக்க வேண்டும். பஸ், ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளையும், அடையாள அட்டைகளையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கடைசி நேரத்துல ட்ரெயின் ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா? எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்னு தெரியுமா?
தீபாவளி

3. உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது என்ன வாங்கிச் செல்லலாம்?

தீபாவளிக்கு உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது அவர்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு பொருளை வாங்கிச் செல்வது நல்ல பழக்கம். குறிப்பாக, வீட்டில் செய்த இனிப்பு, கார வகைகளை எடுத்துச் சென்றால் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்பாக் போன்ற பலகாரங்களை அழகான கிஃப்ட் பாக்ஸ்களில் அடுக்கி எடுத்துச் செல்லலாம்.

குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால் அவர்களுக்குப் பிடித்த சாக்லேட், விளையாட்டுப் பொருட்கள், கலர் பென்சில்கள், கதைப் புத்தகங்கள் போன்றவற்றை வாங்கிச்செல்லலாம். பெரியவர்களுக்கு வேட்டி, சேலை, துண்டு போன்றவற்றையும் கிஃப்ட்டாகக் கொடுக்கலாம்.

4. கிஃப்ட் வாங்கும்போது இதையும் கவனியுங்கள்!

பரிசுப் பொருட்கள் வாங்கும்போது அவை விலை உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்முடைய பட்ஜெட்டுக்கும், வாங்கிக் கொடுப்பவர்களின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம். இனிப்பு, கார வகைகள் வாங்கும்போது தயாரித்த தேதி, காலாவதி தேதி ஆகியவற்றைப் பார்த்து வாங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
மன உளைச்சலா? ஒரு முறை தனிப்பயணம் போய் வாருங்கள்; நடக்கும் அற்புதங்கள்!
தீபாவளி

நீண்ட தூரப் பயணம் என்றால் எளிதில் உருகக்கூடிய சாக்லேட், சீக்கிரம் கெட்டுப்போகும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கிஃப்ட் பொருட்களை அழகாகப் பேக் செய்து எடுத்துச் சென்றால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

5. அன்புடன் செல்வதே சிறந்த பரிசு!

உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பே நாம் எந்த நேரத்தில் வருகிறோம் என்பதை அவர்களிடம் சொல்லி விடுங்கள். அவர்கள் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள் இருந்தால் அதையும் முன்கூட்டியே பேசிக்கொள்ளலாம். விருந்தினர்களாகச் செல்லும்போது அவர்களுடைய வீட்டு வேலைகளுக்கும், நேரத்துக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

தீபாவளி என்பது புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மட்டுமல்ல. குடும்பத்தினரும் உறவினர்களும் ஒன்றாகச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் பண்டிகை. எனவே, ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவிட்டு, எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள். இந்தத் தீபாவளி உங்கள் குடும்பத்துக்கு மறக்க முடியாத இனிய நினைவுகளைத் தரட்டும்!

எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நிம்மதியாகச் சொந்த ஊருக்குப் போய் உறவினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழும் நிறைவான அனுபவத்தைப் பெறலாம்.