

பூமியில் உள்ள குகைகள் பல்வேறு விதமானவை. சில குகைகளில் ரிஷிகள் தவம் செய்துள்ளனர்; செய்து வருகின்றனர். இன்னும் சில குகைகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர். கெண்டுகியில் உள்ள குகை மிக நீளமான குகை என்று சொல்லப்படுகிறது. அடுத்து வியட்நாமில் உள்ள குகையும் மிக நீளமான ஒன்றுதான்! மெக்ஸிகோவில் உள்ள குகைதான் நீருக்கடியில் உள்ள நீளமான குகை. ஆனால் உலகில் இருளடைந்த மிக ஆழமான குகை எது? லைவ் ஸயின்ஸ் பத்திரிகை இது பற்றிய தகவல்களைத் தருகிறது.
1. ஆழமான குகைகள் ஒளித்து வைத்துள்ள விசித்திரமான பாதாள உலகம்
ரிபப்ளிக் ஆஃப் ஜார்ஜியாவில் அப்காஸியா என்ற இடத்தில் உள்ள சுண்ணாம்பு குகைகளில் இரு குகைகளே மிக ஆழமான குகைகள் என்று அறியப்படுகிறது. விரியோவ்கினா மற்றும் க்ருபேரா வொரொன்ஜோ ஆகிய இரு குகைகள் 6560 அடிக்கும் அதிகமாக ஆழமானவை!
இதை ஆராயப் புகுந்த அலாஸ்கா நேஷனல் பார்க்கைச் சேர்ந்த பால் பர்ஜர் என்ற நிலவியலாளர் விரியோவ்கினா 7257 அடி ஆழமுள்ளது என்று துல்லியமாகக் கூறுகிறார். க்ருபேரா 7215 அடி ஆழம் உள்ளதாகும். காகஸஸ் பகுதியில் உள்ள இந்த இரண்டு குகைகளும் மிக மிக இருள் நிறைந்தவை; ஈரமானவை; குளிர்ச்சி உடையவை. இரண்டு முதல் 3 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணநிலை உள்ளவை!
இங்கு வாழும் மிருகங்கள் இந்த இருளடைந்த குகைகளில் சூழ்நிலைக்கேற்ப வாழக் கற்றுக்கொண்டுவிட்டன. ஆழம் அதிகமாக அதிகமாக அங்கு பயிர்களே இருக்காது. ஆகவே இவை இருப்பவற்றை நெடுநாட்களுக்கு ஒருமுறையே உண்கின்றன.
2. ஆழமான குகை பகுதியில் வாழும் விசித்திர பூச்சிகள்
ஸ்பிரிங்டெய்ல் (Springtail) என்று ஒரு பூச்சி வகை இங்கு இருக்கிறது. இதை ஆராய்ச்சியாளரான பெண்மணி ரெபொலெய்ராவும் (Reboleira) அவரது சக ஆய்வாளர்களும் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இறக்கைகள் கிடையாது. 6500 அடி ஆழத்தில் இந்த பூச்சி இனம் வாழ்கிறது! இவற்றை எல்லாம் ஆராய்வதால் நம் கால்களுக்குக் கீழே பூமியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டோம் என்கிறார் அவர். “பாதாள உலகத்தில் பரந்து கிடக்கும் பகுதியில் குகைகளே ஜன்னல்களாக அமைகின்றன” என்கிறார் அவர்.
சுற்றுப்புறச்சூழல் அமைப்பிற்கு குகைகளும் ஒரு பெரிய பங்கை அளிக்கிறது. அவை நீரைப் பல்வேறு அடுக்குகளில் சுத்தம் செய்து உலகிற்குத் தருகிறது. கார்பன் என்ற மாசுப் பொருளை தங்கள் பாறைகளில் ஈர்த்து அங்கேயே தக்க வைத்துக்கொண்டு உலகின் மாசுக் கட்டுப்பாடு வேலையைச் செய்கிறது.
3. மனித குலத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஆழமான குகைகள்
16.3 கோடி வருஷங்களுக்கு முன்னர் உருவாகிய இவைகள் காலப்போக்கில் சுண்ணாம்புக் கலவை அடுக்குகளை இறுகச் செய்து இப்படிப்பட்ட ஆழமான குகைகளை உருவாக்கி இருக்கிறது.
நீரானது சுலபமாகப் பாய்வதற்கு ஏற்றபடி இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் செங்குத்தாக நிற்கின்றன. நீரானது இடுக்குகளின் வழியே பாய்ந்து அருகில் உள்ள தரைப் பகுதிகளை அடைந்து அங்கிருந்து ஆறுகளையும், நீர்நிலைகளையும் அடைந்து நீர் பற்றாக்குறையைப் போக்குகிறது.
நமது இமயமலை குகைகளில் ரிஷிகளும், முனிவர்களும் வாழ்வது நாம் அறிந்த ஒரு செய்தி தான். அஜந்தா, எல்லோரா குகைகளில் உள்ள வண்ணச் சிற்பங்களை உலகினரை ஈர்ப்பவை. திருவண்ணாமலை குகையிலே சமீப காலத்தில் வாழ்ந்த மஹரிஷி ரமணர் திருவண்ணாமலை பற்றிய பல அரிய தெய்வீக தகவல்களை அறிவித்துள்ளார்.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே நமக்கே தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான சுற்றுச்சூழல் அமைப்பை உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். உலக மாசுக் கட்டுப்பாட்டிலும், இயற்கை நீர் சுத்திகரிப்பிலும் குகைகளின் பங்களிப்பைத் தெரிந்துகொண்டு, இயற்கையின் மீதான உங்கள் பார்வையை நீங்கள் முற்றிலும் மாற்றிக்கொள்வீர்கள்.
குகைகள் மனித குலத்திற்கு இறைவன் தந்துள்ள வரங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை!