
உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவான கெய்பில்லாம் ஜோவா இந்தியாவின் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோக் டாக் ஏரியில் அமைந்துள்ளது.
ஏராளமான நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இயற்கையான வாழ்விடமாக இருப்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதி களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் இங்கு வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்திருப்பதால் இது மணிப்பூர் மாநிலத்தின் மாணிக்கம் என்றும் அழைக்கப் படுகிறது.
லோக்டாக் ஏரியில் மண், கரிமப்பொருட்கள் மற்றும் தாவரங்களால் ஆன சதுப்பு நிலங்கள் தீவுகளைப் போலவே தோற்றமளிப்பதோடு மிதக்கும் உயிரிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலகின் மிதக்கும் ஒரே தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ தேசியப் பூங்கா இந்த ஏரியில்தான் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் உயிரிகள் மிதக்கும் வாழ்விடங்களாக இருப்பதால் நீர்மட்டம் மாறும்போது மாறிவிடுகின்றன . விலங்குகளின் மேய்ச்சல் நிலமாகவும், நீர்வாழ் தாவரங்கள் மற்றும் மீன்களுக்கான இல்லமாகவும் இந்தப் பூங்கா செயல்படுகிறது.
கெய்புல் லாம்ஜாவோ, சங்காய் என்ற அரிய வகை மற்றும் அழிந்து வரும் மானின் வாழிடமாக உள்ளது .இந்த மான்கள் மிதக்கும் தாவரங்களில் தாவி செல்லும் போது நடனமாடுவதுபோல இருப்பதால் நடன மான்கள் என அழைக்கப்படுகின்றன. சங்காய் மான் மணிப்பூரின் அடையாளமாக இருப்பதுடன், இந்த மிதக்கும் பூங்காவின் அடையாளமாகவும் இருக்கிறது.
மேலும், ஏரியில் சுமார் 230 வகையான நீர்வாழ் தாவரங்கள், 100 வகையான பறவைகள் மற்றும் குரைக்கும் மான், சாம்பார் மற்றும் இந்திய மலைப்பாம்பு போன்ற 400 வகையான விலங்கினங்கள் உள்ளதால் லோக்டாக் பறவை ஆர்வலர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் ஆகும்.கருப்பு காத்தாடி, கிழக்கு இமாலயன் பைட் கிங்ஃபிஷர், வடக்கு மலை மைனா, லெசர் ஈஸ்டர்ன் ஜங்கிள் காகம், பர்மீஸ் பைட் மைனா மற்றும் லெசர் ஸ்கைலார்க் போன்ற இனங்களையும் இங்கு காணலாம்.
உள்ளூர் மக்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இந்த பூங்கா மற்றும் லோக்டாக் ஏரி மீன்பிடி தொழிலையும் விவசாயத்தை வழங்குகிறது.லோக்டாக் ஏரியும் அதன் மீது உள்ள செந்திரா தீவும் மணிப்பூர் மாநிலத்தின் மிக அழகான இயற்கை அமைப்பாக உள்ளது. லோக்டாக் ஏரி மணிப்பூர் மாநிலத்தில் ஓடும் அனைத்து ஆறுகள் மற்றும் சிற்றோடைகளின் தாயகமாகும். அழகிய நீர், படகுப் பாதைகளின் தளம், சுற்றுப்புறத்தின் பசுமை மற்றும் செம்மஞ்சள் நிற சூரிய அஸ்தமனம், ஒரு மயக்கும் தளத்தை ஏரியும், தீவும் வழங்குகிறது.
இங்கு சூரிய அஸ்தமனத்தை பார்க்காமல் இருப்பதும், படகு சவாரி செய்யாமல் இருப்பதும் நம் வாழ்வில் ஒரு அரிய வாய்ப்பை நழுவ விடுவதற்கு சமம். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சம் இடமாக இந்த பூங்கா அமைந்துள்ளது.
செல்வது எப்படி
மணிப்பூரின் மையப்பகுதியில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இம்பால் துலிஹால் விமான நிலையம். இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களை நேரடியாக இணைக்கும் அருகிலுள்ள விமான நிலையமாகும். லோக்டாக் ஏரியை இம்பாலில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மொய்ராங்கிற்கு ஒரு டாக்ஸி அல்லது கேப் மூலம் செல்லவேண்டும்.
கெய்புல் லாம்ஜாவோ பூங்கா, வாழ்விட சீரழிவு, ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள், நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், சமூக ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தொடர்ச்சியான பாதுகாப்பு முயற்சிகள் மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.