
பயணம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு அம்சம். நம்மில் சிலர் அவ்வப்போது பயணம் மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். சிலர் வீடு விட்டால் அலுவலகம் என்று தங்கள் வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கி வாழ்ந்து விட்டுச் செல்கிறார்கள். வெகு சிலரோ எப்போதும் பயணம் பயணம் என்று உலகம் முழுவதும் சுற்றுபவர்களாக இருக்கிறார்கள். இவை எல்லாமே அவரவர் வாழ்க்கைச் சூழல் மற்றும் வளரும் சூழல் இவற்றைப் பொறுத்தே அமைகிறது.
பயணம் நமக்கு பலவிதமான அனுபவங்களைத் தருகிறது. நமக்கு ஏன் இறைவன் இவ்வளவு கஷ்டங்களைத் தருகிறான் என்று நம்மில் பலர் நொந்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால் பல இடங்களுக்கும் பயணிக்கும் போது பயணங்களில் பலரை சந்தித்து உரையாடும் போதுதான் நமக்கு நம்மைவிட அதிக கஷ்டங்களைச் சுமப்பவர்கள் இருக்கிறார்கள என்ற உண்மையை நம்மால் உணரமுடியும்.
நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் பயணங்களை மேற்கொள்ளும்போது ஒருவித பதட்டம் என்னை ஆக்ரமித்துக்கொள்ளும். பயணத்தை முடித்து எப்போது வீடு திரும்புவோம் என்ற எண்ணமே என் மனதில் மேலோங்கி இருக்கும். காரணம் புது இடம். புது சூழல். புதுப்புது மனிதர்கள்.
ஆனால் அடிக்கடி பயணம் மேற்கொள்ளத் தொடங்கிய போது என் மனதில் ஒரு மாற்றம் உருவாவதை உணர்ந்தேன். இன்னும் ஒருவாரம் பயணித்தால் நன்றாக இருக்குமே. அதற்குள் வீடு திரும்ப வேண்டியிருக்கிறதே என்று உணரத் தொடங்கினேன். இது என் பயணங்கள் எனக்குத் தந்த மனமாற்றமாக உணருகிறேன்.
பல அண்டை மாநிலங்களுக்குப் பயணிக்கும்போது அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களை நேரில் பார்க்கும்போது அவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் நம் வாழ்வோடு ஒப்பிடும்போது நமது கஷ்டம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும்.
பலப் பல மாநிலங்கள். பலப்பல மொழிகள். பலப்பல மனிதர்கள். இவையெல்லாம் எந்த ஒரு பல்கலைக் கழகமும் கற்றுத்தர இயலாத வாழ்க்கைப் பாடங்களை நமக்குக் கற்றுத் தரும். பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் கலாச்சாரத்தை நாம் முடிந்த அளவில் பயணம் செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களின் இலக்கியம் கலை கலாச்சாரம் உணவு பழங்கங்கள் இவற்றைக் காணும்போது நமது மனம் ஒருவித புத்துணர்ச்சி பெறும். புதிய சிந்தனைகள் நம் மனதில் ஊற்றெடுக்கும். இலக்கியமும் கலையும் கலாச்சாரமும் நமக்குள் மகிழ்ச்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும் பெருவெள்ளம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ரயில் பயணங்கள், பேருந்து பயணங்கள், விமானப் பயணங்கள், கப்பல் பயணங்கள் மற்றும் இத்தகைய பயணங்களில் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுடன் உரையாடும் போது நாம் தெரிந்து கொள்ளும் புதிய விஷயங்கள் மற்றும் நம்மிடமிருந்து அவர்கள் அறிந்து கொள்ளும் விஷயங்கள் நமக்கும் அவர்களுக்கும் வியப்பளிக்கும்.
இந்த உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் நம்மவரே நமது அன்புக்குரியவர்களே என்ற ஒற்றுமை உணர்வு பயணங்களால்தான் சாத்தியமாகும். இந்த உணர்வினை நாம் வேறெங்கும் பெற இயலாது.
பயணங்களால் பணம் செலவாகும் என்பதால் பலர் பயணங்களைத் தவிர்த்து விடுகிறார்கள். செலவு செய்ய முடியாதவர்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் செலவு செய்து பயணிக்க முடியும் என்பவர்கள் பயணங்களைக் கட்டாயம் தவிர்க்கக் கூடாது. பயணங்களில் பெரிய பயணம் சிறிய பயணம் என ஏதும் இல்லை. காலையில் நமது ஊரிலிருந்து பயணித்து வேறொரு ஊருக்குச் சென்று திரும்புவதும் பயணம்தான்.
உங்களால் முடிந்தபோதெல்லாம் பயணங்களை மேற்கொள்ளுங்கள். பயணங்கள் உங்கள் மனதை அமைதியாக்கும். ஒற்றுமை உணர்வை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து உழைக்கும் உங்களுக்கு உங்கள் அசதியையும் மனச்சோர்வையும் போக்கி அளவில்லாத புத்துணர்ச்சி அளிக்கும்.
பயணங்கள் நம் வாழ்வில் வளம் சேர்ப்பவை. இன்றிலிருந்து உங்கள் பயணத்தைத் துவங்குங்கள். மெல்ல மெல்ல மகிழ்ச்சி உங்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கத் தொடங்கிவிடும். மகிழ்ச்சி மனதில நிரம்பினால் வாழ்க்கை இனிதாகும்.