

தொட்டபெட்டா சிகரம் நீலகிரி மலைத்தொடரில் உயரமான சிகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 2637 மீட்டர் அதாவது சுமார் 8500 அடி உயரத்தில் உள்ளது. தொட்டபெட்டா என்பது கன்னட மொழி சொல்லாகும். இதற்கு பெரிய மலை என பொருள்படும். இந்த இடம் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை இரண்டும் சந்திக்கும் இடம் ஆகும். இயற்கையான அழகு மற்றும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை கொண்ட பகுதியாகும். பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது
இதன் உச்சியில் வானிலை ஆய்வுக்கூடம் உள்ளது. 1846 இல் இது நிறுவப்பட்டது. தற்போது இந்த ஆய்வுகூடம் உபயோகத்தில் இல்லை என தெரியவருகிறது. இங்கிருந்து பார்த்தால் கோவை மாவட்டத்தில் உள்ள மலைகள் அத்தனையும் பார்க்கலாம். இதற்கு அடுத்தபடியாக 2530 மீட்டரில் ஸ்னோ டவுன் ஹில் 2448 மீட்டர் உயரமுள்ள கிளப் ஹில் 2466 மீட்டர் உயரம் உள்ள எல்க் ஹில் ஆகியவை இந்த சிகரத்திற்கு சிகரம் சேர்க்கிறது. இவற்றில் தொட்டபெட்டாதான் மிக உயர்ந்த சிகரம் ஆகும்.
இந்த இடத்திலிருந்து மேகமலை கூட்டங்களை அருகில் இருந்து பார்க்கலாம். மேகத்தை தொட்டு விளையாடலாம். அந்த அளவுக்கு நம் கண் முன்னே வந்து செல்லும். சிறந்த மலையற்ற அனுபவமாக இருக்கும். விடுமுறையில் செல்வதற்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது. எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சிகள் நம்மை வரவேற்கும். இங்குள்ள பச்சை பள்ளத்தாக்குகள் கண்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. நீலகிரியின் முழு அழகையும் ரசிக்கலாம். இங்கிருந்து பார்த்தால் பறவைகள் பறப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். மூன்று கிலோ மீட்டர் தூரம் மலை ஏற்ற பகுதியாகும்.
உதகையை பிரமிக்க வைக்கும் அழகை இந்த இடத்தில் இருந்து கண்டு ரசிக்கலாம். வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் நம்மை அடிவாரத்திற்கு அழைத்துச்செல்கிறது. இங்கு மலை மேல் இரண்டு தொலைநோக்கிகள் உள்ளது. இதிலிருந்து 360 டிகிரிவரை நாம் பார்க்கலாம். இந்த தொலைநோக்கி மூலம் பந்திப்பூர் பூங்கா மைசூரின் பசுமை பகுதிகள் மற்றும் பல அற்புதமான காட்சிகளை இதன் மூலம் பார்வையிடலாம்.
தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை தொழிற்சாலையை பார்வையிட்டு வரலாம். இங்கு சுடச்சுட சுவையான டீ வழங்கப்படுகிறது. காலை எட்டு மணி முதல் முதல் 5 மணி வரை தான் திறந்து இருக்கும். பின்னர் மூடப்படும்.
இந்த இடங்களில் ஏராளமான சினிமா ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.
இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த இடம் சங்க காலத்தில் தோட்டிமலை என அழைக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் இதன் பெயர் நளிமலை. ஊட்டியில் இருந்தும் தொட்டபெட்டா செல்லலாம். இங்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குப்பின் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும்.
ஏப்ரல் டு ஜூன் செப்டம்பர் அக்டோபர் ஆகிய மாதங்கள் சுற்றுலாவிற்கு செல்ல உகந்த மாதங்களாகும். இங்குள்ள தொலைநோக்கி மூலம் ஒரு நாளைக்கு சுமார் 4000 நபர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
இதன் அருகில் அழகிய பூங்கா ஒன்று உள்ளது. சிறுவர்களுக்கு நல்ல பொழுது போக்காக அமையும். இந்தப் பகுதியில் நிறைய சிற்றுண்டிகள் முளைத்துள்ளது. இங்கு சுவையான டீ யும் வடை பஜ்ஜி போன்றவை சூடாக கிடைக்கிறது. இந்த இடத்திற்கு செல்லும்போது கண்டிப்பாக ஸ்வெட்டர் அணிந்து செல்லவேண்டும் அல்லது மறக்காமல் ஸ்வெட்டர் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
தொட்டபெட்டா நம் எல்லோர் மனதையும் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறைந்த பட்ஜெட்டில் இந்த இடத்தில் சுற்றுலா சென்று வரலாம். இங்குள்ள ஏரிகளில் படகு சவாரி செய்வது ஒரு திரில்லிங்கான அனுபவமாக இருக்கும்.